வெறும் குடையல்ல... பெருங் கொடை

மழைக் காலங்களில் சாலையோரங்களில் முளைக்கும் கடைகளில் ரூ.100 முதல் குடைகள் விற்பனை செய்யப்பட்டாலும் தரமான குடைகள் ரூ.1000 வரை கடைகளில் கிடைக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

ஆரஞ்சு, சிவப்பு என எந்த எச்சரிக்கை வந்தாலும் மழையை  தைரியமாக எதிர்கொள்ள நம் கையில் இருக்கும் பொருள் குடை. தொன்மையும், பெருமையும் பரந்து விரிந்திருப்பதால் என்னவோ குடைகள் எப்போதும் சுருட்டியே வைக்கப்படுகின்றன. மழை சிறியதோ, பெரியதோ பலரது கைகளிலிருந்து நீளும் குடைகளின் வரலாறு 4000 ஆண்டுகள் பழமையானதாக கணிக்கப்படுகிறது.

'Umbra' என்ற லத்தீன் மொழியின் வேர்ச் சொல்லின் நீட்சியே Umbrella என்றானது. 
Umbra என்ற சொல்லுக்கு நிழல் என்பது பொருளாகும். ஆரம்பக் காலத்தில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பாராசோல் (Parasol) என அழைக்கப்பட்ட சிறிய வகை குடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்தில் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் பனை ஓலை, சிறகுககளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குடைகளை அப்போது வாழ்ந்த அரச குடும்பத்தினர், செல்வந்தர்கள், மத குருமார்கள் பயன்படுத்தி உள்ளனர். எகிப்திய வரலாற்று ஓவியங்களில் இதற்கான சான்றுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் சீனாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே குடை போன்ற ஒரு பொருளை பயன்படுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

பாலைவன பிரதேச பகுதிகளில் இருந்த எகிப்தியர்களுக்கு வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ளவே குடைகள் பயன்பட்டன. மழையில் நனையாமல் இருப்பதற்காக பட்டுத்துணியால் ஆன தண்ணீர் புகாத குடைகளை சீனர்கள் கி.மு. 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தி உள்ளனர். அதுவும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பயன்படுத்தி உள்ளனர். பொதுவாக இந்த குடைகளைப் பிடித்து வர வேலையாட்கள் பணியமர்த்தப்பட்டனர். அரச குடும்பத்தவர்களின் அரியணை, சாரட் வண்டிகளிலும் குடைகள் பயன்படுத்தப்பட்டன. சீனாவிலிருந்து பர்மாவுக்கு குடை கலாசாரம் பரவியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பக் காலக்கட்டத்தில் குடைகள் பெண்கள் பயன்படுத்தும் ஒரு  விலையுயர்ந்த பொருளாகவே கருதப்பட்டது. பாரசீகரான ஜோனஸ் ஹான்வே இங்கிலாந்தில் நடந்த பொது நிகழ்வுகள் மட்டுமல்லாது எப்போதும் குடையுடனே சுற்றித் திரிந்து, குடைகளை ஆண்களும் பயன்படுத்தும் ஒரு பொருளாக பிரபலமாக்கினார். இதனைத் தொடர்ந்து அங்கு ஆண்களும் குடைகளை பயன்படுத்த தொடங்கினர். இப்படி பல்வேறு ஆண்டுகளைக் கடந்த குடைகள் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்து 1928-ஆம் ஆண்டு ஹேன்ஸ் ஹாஃப்ட் என்பவரால் பாக்கெட் குடைகளாக உருமாற்றம் பெற்றன. இதனைத் தொடர்ந்து கடந்த 1969-ஆம் ஆண்டு பிராட் போஃர்ட் இ பிலிப்ஸ் என்பவர் தான் தற்போது நாம் பயன்படுத்தும் இந்த மடக்கு வகை குடைகளை கண்டறிந்தார். 

மழைக் காலங்களில் சாலையோரங்களில் முளைக்கும் கடைகளில் ரூ.100 முதல் குடைகள் விற்பனை செய்யப்பட்டாலும் தரமான குடைகள் ரூ.1000 வரை கடைகளில் கிடைக்கின்றன. இருப்பினும் மழையில் குடைகளை பயன்படுத்திய பின் சிறிது நேரம் விரித்து காய வைத்து ஈரத்தை உலர்த்துவது, குடைக் கம்பிகளில் அவ்வப்போது சிறிது எண்ணெய் தடவி பராமரிப்பது, மறதி உள்ளவர்கள் குடை கைப்பிடியில் உள்ள கயிற்றினுள் கைகளை மாட்டிக் கொள்வது மழைக்கால குடைக்கான டிப்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com