கொல்லிமலை அடிவாரத்தில் அழகிய சிற்றோடை: சுற்றுலா தலமாக்க கோரிக்கை

கொல்லிமலை அடிவாரப் பகுதியில் தொடர் மழையால் அழகிய சிற்றோடை ஒன்று உருவாகியுள்ளது. இதனால் ஏராளமானோர் அங்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். அப்பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்... 
கொல்லிமலை அடிவாரப் பகுதியில் காணப்படும் அழகிய சிற்றோடைகள்.
கொல்லிமலை அடிவாரப் பகுதியில் காணப்படும் அழகிய சிற்றோடைகள்.


நாமக்கல்: கொல்லிமலை அடிவாரப் பகுதியில் தொடர் மழையால் அழகிய சிற்றோடை ஒன்று உருவாகியுள்ளது. இதனால் ஏராளமானோர் அங்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். அப்பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுவது கொல்லிமலை. இதன் அடிவாரப் பகுதி நான்கு, ஐந்து நிலைகளில் உள்ளது.  நாமக்கல் மாவட்டத்தில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வரகூர், நடுக்கோம்பை மற்றும் சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, திருச்சி மாவட்டத்தில் புளியஞ்சோலை பகுதிகள் இம்மலையின் அடிவாரப் பகுதிகளாக உள்ளது. மழைக்காலத்தின்போது அடிவாரப் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பும்.

கொல்லிமலை அடிவாரப் பகுதியில் காணப்படும் அழகிய சிற்றோடைகள்.

அந்த வகையில் சேந்தமங்கலம் வட்டம் நடுக்கோம்பை பெரியசுவாமி கோயிலை ஒட்டிய கொல்லிமலை அடிவாரத்தில் தற்போது அழகிய சிற்றோடை காணப்படுகிறது. மழை பெய்வதால் சிறிய பாறைகளுக்கு நடுவில் தண்ணீர் பாய்ந்தோடி வரும் காட்சி ரம்மியமாக உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், இளைஞர்கள் இந்த ஓடை பகுதியில் முகாமிட்டு பொழுதை கழித்து வருகின்றனர். சிலர் மதுபானங்கள் அருந்தி விட்டு அட்டகாசத்தில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. குறிப்பாக விடுமுறை நாள்களில் அதிகளவிலான கூட்டத்தை காண முடிகிறது. இப்பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

இது குறித்து நாமக்கல் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.பிரணவ் கூறியது; கொல்லிமலை வனத்தையொட்டிய அடிவாரப் பகுதிகள் அனைத்துமே அழகானது தான். நடுக்கோம்பை பெரியசுவாமி கோயிலை ஒட்டிய வனப்பகுதியில் மரங்கள், பாறைகளுக்கு இடையே மழை நீர் வழிந்தோடி வரும் காட்சியை காண்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. தற்போது இளைஞர்கள் தான் அதிகம் வருகின்றனர். பெண்களும், குழந்தைகளும் இந்த அழகிய சிற்றோடையை பார்வையிடும் வகையில் சுற்றுலாத் தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகமோ, வனத்துறையினரோ உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிற்றோடை பகுதியில் மது அருந்தி விட்டு சிலர் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com