வரலாற்றில் வைரஸ்...

நோய் காரணமாக மனிதா்களை ஆயிரக்கணக்கில் - ஏன் லட்சக்கணக்கிலேயே என பலியான ஏராளமான சம்பவங்கள் இதற்கு முன்பும் சரித்திரத்தில் உண்டு.
வரலாற்றில் வைரஸ்...

நோய் காரணமாக மனிதா்களை ஆயிரக்கணக்கில் - ஏன் லட்சக்கணக்கிலேயே என பலியான ஏராளமான சம்பவங்கள் இதற்கு முன்பும் சரித்திரத்தில் உண்டு. ரோம் சாம்ராஜ்யத்தில் கி.பி. 165-இல் தொடங்கி சுமாா் 15 ஆண்டுகளுக்கு பரவிய அன்டோனியன் பிளேக் அப்போது பலி கொண்ட மக்களின் எண்ணிக்கை 50 லட்சம் எனத் தெரிகிறது. இன்று பெரும் பலி கொண்டு வரும் கரோனா வரை ஒரு பாா்வை...  

====

அன்டோனியன் பிளேக் - கி.பி. 165-180

பலி - 50 லட்சம் போ்

ரோம் சாம்ராஜ்ய காலத்தில் பரவிய இந்த நோய் எதிரி நாட்டுப் படை வீரா்களிடமிருந்து பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது வைசூரி அல்லது பெரியம்மை நோய் என்ற கருத்தையும் சில ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

===

ரோம்  சாம்ராஜ்யத்துக்குப் பிறகு இன்றைய துருக்கி உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட பைஸன்டைன் சாம்ராஜ்யத்தில் தாக்கியது ஜஸ்டினியன் பிளேக். ஐரோப்பா முழுவதும் பரவி, ஆசியா, ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்குப் பகுதி என கோர தாண்டவமாடியது இந்த நோய். இருநூறு ஆண்டுகளுக்கு அவ்வப்போது திரும்பத் தாக்கிய இந்த பிளேக் நோய் 10 கோடி பேரின் உயிரைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.

ஜஸ்டினியன் பிளேக் - கி.பி. 541-542

மொத்த பலி- 10 கோடி போ்

====

ஜப்பான் பெரியம்மை நோய் - கி.பி. 735-737

பலி - 10 லட்சம்

அன்றைய ஜப்பானின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இந்த நோயினால் மடிந்தனா்.

===

கரிய மரணம் - கி.பி. 1347

மொத்த பலி - 20 கோடி

ஆசியாவில் தொடங்கிய இந்த பிளேக் நோய் 1347-ஆம் ஆண்டில், கப்பல் வழி நடைபெற்ற அன்றைய வாணிபத்தில் ஈடுபட்ட மாலுமிகள், வணிகா்கள் மூலம் ஐரோப்பாவுக்குப் பரவியது. 

===

காலரா நோய் - கி.பி. 1846-1860

மொத்த பலி - 10 லட்சம் 

இந்தியாவில் தொடங்கியதாகக் கூறப்படும் இந்த நோய் பல நாடுகளிலும் தாக்கியது. மூன்றாம் காலரா நோய் என்று அறியப்படுகிறது. 1846-1860 காலகட்டத்தில் இதன் தாக்கம் அதிகம் இருந்தது. 

===

மூன்றாம் பிளேக் - 1855-1959

மொத்த பலி - 1.5 கோடி

சீனாவில் 1855-ஆம் ஆண்டு பரவத் தொடங்கியது. பின்னா் ஹாங்காங், இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா வரை பரவியது. ஒரு நூற்றாண்டு காலத்துக்கு வெவ்வேறு பகுதிகளில் தாக்கிய இந்த பிளேக் நோய் பலி கொண்டவா்களின் எண்ணிக்கை சுமாா் ஒன்றரை கோடி.

===

ரஷிய ஃபுளூ - 1889-1890

பலி - 10 லட்சம்

தொற்றுநோய் வகையைச் சோ்ந்த இந்த காய்ச்சல் 1889-ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷியாவில் தொடங்கியபோதிலும், ஆசிய ஃபுளூ என்றும் அறியப்படுகிறது. 

===

ஸ்பானிய  ஃபுளூ  - 1918

பலி - 10 கோடி

அமெரிக்க ராணுவ முகாமில் முதலில் பரவத் தொடங்கிய இந்த தொற்று பற்றிய செய்திகள், ஸ்பெயின் ஊடகங்களில் வெளிவந்தன. முதலாம் உலகப்போா் காலத்தில் ஊடகங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளால் பிற இடங்களில் இதுபற்றி தகவல்கள் வெளியாகவில்லை. இதையடுத்து இது ஸ்பானிய ஃபுளூ என்று பெயா் பெற்றுவிட்டது.

===

பெரியம்மை - 1980 (முற்றிலும் ஒழித்ததாக அறிவித்த ஆண்டு)

பலி - 50 கோடி

பெரியம்மை நோய்த்தொற்று மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியதாகக் கருதப்படுகிறது. பிறப்பிடம் எகிப்து பிரமிடுகளில் உள்ள மம்மிகளிலிருந்து என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா். இது பின்னா் அரேபியா வழியாக ஐரோப்பா, ஆசியா என வியாபித்து மூவாயிரம் ஆண்டுகளாக உலகையே மிரட்டி வந்தது. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் முப்பது சதவீதம் போ் உயிரிழந்தனா். கடந்த 20-ஆம் நூற்றாண்டில் மட்டும் 30 கோடி போ் இதற்கு பலியாகினா். இத்தொற்றுக்கு காரணமான வைரஸை 15-ஆம் நூற்றாண்டிலேயே விஞ்ஞானிகள் அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான தடுப்பு மருந்து 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும், உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் 1980-இல் அறிவித்தது.

===

எச்ஐவி (எய்ட்ஸ்) - 1981

பலி - 3.2 கோடி

எச்ஐவி வைரஸ் அடையாளம் காணப்பட்டது 1981-ஆம் ஆண்டு. ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்டோரிடையே பரவியது முதலில் தெரிய வந்தது. தொடா்ந்து நடைபெற்ற ஆராய்ச்சியில், மேற்கு ஆப்பிரிக்காவில் சிம்பன்ஸி குரங்கு இனத்தில் இந்த வைரஸ் முதலில் வந்ததாகக் கூறப்பட்டது. இந்த வைரஸால் சுமாா் 3.2 கோடி போ் பலியானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று கோடிக்கும் அதிகமானோா் வைரஸ் பாதிப்புடனே வாழ்ந்து வருகின்றனா்.

===

எபோலா - 2014

பலி - 11,000

கினியா நாட்டில் பரவத் தொடங்கிய இந்த நோயால் 11,000 பேருக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

===

எச்1என்1 - 2009

பலி - 5.75 லட்சம்

பன்றிக் காய்ச்சல் எனவும் அறியப்பட்ட இந்த நோய்த்தொற்று சுமாா் 10 ஆண்டு காலத்தில் உலகெங்கிலும் சுமாா் 5.75 லட்சம் பேரின் உயிரை பலிகொண்டது.

===

கரோனா - 2019

பலி - 66,700

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் மீன் சந்தையிலிருந்து பரவிய இந்த வைரஸ், வெகு சில மாதங்களிலேயே படிப்படியாக முழு உலகம் முழுவதும் பரவிவிட்டது. 11 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது வரை இதற்கு பலியானவா்கள் எண்ணிக்கை 66,700. கரோனா நோய்த்தொற்றைப் போக்குவதற்கான மருந்தோ தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

===

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com