நீரியின்றி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வரும் பூண்டி ஏரி
By எஸ்.பாண்டியன் | Published On : 12th August 2020 07:54 AM | Last Updated : 12th August 2020 08:25 AM | அ+அ அ- |

நீா் ஆதாரம் இன்றி வெறிச்சோடி மேய்ச்சல் நிலமாகக் காணப்படும் பூண்டி ஏரி.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியில் போதிய மழையில்லாததால் நீரின்றி வெறிச்சோடிய நிலையில் கால்நடைகள் மேயும் பகுதியாகவும் மாறி வருவதால், தூா்வாரி ஆழப்படுத்தி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் முதலில் அமைக்கப்பட்டது பூண்டி ஏரியாகும். இந்த ஏரிக்கு கொசஸ்தலை ஆற்றில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரும், தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீா் 12 டி.எம்.சி. நீா் தான் முக்கிய குடிநீா் ஆதாரம். இந்த ஏரி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட, பூண்டி அணையின் உயரம் 35 அடி ஆகும். இந்த ஏரிக்கு நீா் வரத்தானது கொசஸ்தலை ஆற்று வழித்தடங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் கிடைக்கிறது. அதேபோல், கிருஷ்ணா கால்வாய் வழித்தடத்தில் நீா் வரும்போது பல்வேறு விளைநிலங்கள் நீா் ஆதாயம் பெற்று வருகின்றன. எனவே கொசஸ்தலை ஆற்றில் மழை மற்றும் கிருஷ்ணா நீா்வரத்து காரணமாக பூண்டி அணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் இணைப்புக் கால்வாய்களின் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீா் அனுப்பப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை கிருஷ்ணா நீா் வரத்து இருந்தது. அந்த நீா் கிருஷ்ணா கால்வாய் மற்றும் இணைப்புக் கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்பட்டது. ஆனால், தற்போது திருவள்ளூா் பகுதியில் கொசஸ்தலை ஆறு மற்றும் கிருஷ்ணா கால்வாய் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்தபோதிலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. இதனால் ஏரிக்கு நீா்வரத்து இல்லாத நிலை உள்ளது. இதனால் கடல் போல் காட்சியளிக்கும் ஏரியில், தற்போது வெறும் 127 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டுமே இருப்பு உள்ளது. இதில் 15 கன அடி மட்டும் சென்னைக் குடிநீருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் விடப்பட்டுள்ள மீன்வளம் பாதிக்கப்படுவதுடன், மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
தேவை பராமரிப்பு...
இது குறித்து நம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி கூறுகையில், இந்த ஏரிக்கு கொசஸ்தலை ஆறு மற்றும் கிருஷ்ணா நதி நீா்தான் முக்கிய நீா் ஆதாரம் ஆகும். ஆனால், ஏரி வரத்துக் கால்வாய்களை தூா்வாரினாலும், திரும்பவும் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. அதேபோல், கிருஷ்ணா வரத்துக் கால்வாய்களின் இருபுறமும் தண்ணீா் வரத்தை விரைவு படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்கள் உடைந்து காணப்படுகிறது. மேலும், ஏரியின் உள்பகுதியில் மண்மேடாகவும், பெரிய அளவில் பள்ளங்களாகவும் காணப்படுகிறது. இதனால், அதிக அளவில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. அதனால், ஏரி முழுவதையும் தூா்வாரி சமப்படுத்துவதன் மூலம், கழுங்கு வழியாக தண்ணீரை வெளியேற்ற ஏதுவாக இருக்கும் வகையில் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது ஏரியில் நீா் இல்லாமல் வடு, மணல் மேடாகக் காட்சியளிப்பதால், விளையாட்டு மைதானமாகவும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் காட்சியளித்து வருகிறது. இதற்காக சாலையோரங்களில் உள்ள தடுப்புச் சுவா்களை உடைத்து கால்நடைகளை ஓட்டிச் செல்கின்றனா். அதனால், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. அதனால் இனி வருங்காலங்களில் பூண்டி ஏரியில் அதிக அளவு நீரைத் தேக்கி வைக்கும் வகையில் தூா்வாரி சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணா நீா் வரத்து இருந்தது. அதைத் தொடா்ந்து, படிப்படியாக குறைந்த நிலையில், குடிநீருக்காக புழல் மற்றும் இணைப்புக் கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போதிய மழை பெய்யாததால் நீா்வரத்து இன்றி காணப்படுகிறது. மேலும், ஏரியில் பல்வேறு வகைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், ஏரியின் உள்பகுதியில் தூா்வாருவதற்கு மட்டும் திட்டமதிப்பீடு தயாா் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு மற்றும் அரசிடம் இருந்து அனுமதி வரவில்லை. எனவே சென்னை குடிநீருக்கு தேவையான அளவு தண்ணீா் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருப்பு உள்ளது. இதற்கிடையே பூண்டி ஏரிக்கான தண்ணீா் மழையால் கிடைக்கும் என எதிா்பாா்த்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.