'சூப்பர் ஹீரோ' சோனு சூட்!

திரைப்பட நிழலில் பெரும்பாலும் வில்லனாகத் தோன்றிவரும் ஹிந்தி நடிகர்  சோனு சூட், நிஜ வாழ்வில் பலருடைய வாழ்வில் மறக்கமுடியாத கதாநாயகனாக மாறியுள்ளார்.
சூப்பர் ஹீரோ  சோனு சூட்
சூப்பர் ஹீரோ சோனு சூட்

திரைப்பட நிழலில் பெரும்பாலும் வில்லனாகத் தோன்றிவரும் ஹிந்தி நடிகர்  சோனு சூட், நிஜ வாழ்வில் பலருடைய வாழ்வில் மறக்கமுடியாத கதாநாயகனாக மாறியுள்ளார். கரோனா ஊரடங்கு காலத்தில் எந்தப் பலனையும் எதிர்பாராமல் அவர் செய்துவரும் உதவியால் பலருடைய மனங்களில் நீங்கா இடம் பிடித்து வருகிறார் நடிகர் சோனு சூட். 

கரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கியதுடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், நடுத்தர மக்கள் பலர் தங்களது வேலையை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.

நாட்டுக்குள்ளேயே ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து சென்று பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமடைந்தது.

சக மனிதனின் நிலை உணர்ந்த நடிகர் சோனு சூட், எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் சிறிதுசிறிதாகத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யத் தொடங்கினார். பின்னர் அதில் பெற்ற நிம்மதியிலும், பயன் அடைந்த தொழிலாளர்கள் அடைந்த மகிழ்ச்சியிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவியினை விரிவுபடுத்தி வந்தார்.

முதன்முறையாக மும்பையில் சிக்கியிருந்த வெளி மாநிலத்  தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கிப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தமது உதவியினைத் தொடங்கினார்.

உணவு வழங்கி வந்த அவர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர வேண்டும் என்பதை உணர்ந்து, பேருந்து வசதியை ஏற்பாடு செய்து மும்பையில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களைத்  தங்களது சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

மகாராஷ்டிரத்தில் சிக்கியிருந்த கர்நாடகத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமான தொழிலாளர்களைச் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து மே 11-ஆம் தேதி அவர்களைத் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைத்து உதவி புரிந்தார்.

புலம் பெயர் தொழிலாளர்களை இலவசமாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறியதோடு மட்டுமல்லாமல் அதனைத் தாமே செயல்படுத்தியும் காட்டினார்.

ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களைப் பேருந்து ஏற்பாடு செய்து தங்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைத்து பேருதவியை விரிவாக்கினார். சக மனிதனாக இருந்து ஒரு நடிகர் செய்த இந்தச் செயல், பலருடைய கவனத்தைப்  பெற்றது.

இதற்காக ஜார்க்கண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் நன்றி தெரிவித்து, கரோனா தொற்று முடிந்ததும் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்றும் சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.

மகாராஷ்டிர மாநில காவல்துறையினருக்கு 25 ஆயிரம் பேஸ் ஷீல்ட் (Face Shield) எனப்படும் முகக் கவசத்தை வழங்கினார். இதற்காக மகாராஷ்டிரத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்துள்ள சோனு சூட், உங்களது அன்பான வார்த்தைகள் எனக்கு உண்மையில் பெருமையைத் தருகிறது. என்னுடைய காவல்துறை சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் பாராட்டத்தக்க வகையில் செய்யும் பணிகளுக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி இது. ஜெய்ஹிந்த் எனப் பதிவிட்டிருந்தார்.


மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கேரளத்தில் ஜவுளி தொழிற்சாலையில் தங்கி துணி தைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான சிறுமிகள் தங்களது சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த சோனு சூட், மே மாதம் 29-ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தங்கி பணிபுரிந்து வந்த ஒடிசாவை சேர்ந்த 170 சிறுமிகளை விமானம் மூலம் தமது சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி புரிந்தார். புலம்பெயர் தொழிலாளர்களை விமானம் மூலம் அவர் அழைத்துச் செல்ல உதவியது இது முதல்முறை.

மகாராஷ்டிரத்தில் தங்கி பணிபுரிந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நடிகர் அமிதாப் பச்சன் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இதேபோன்று நடிகர் சோனு சூட் அதிக அளவில் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி வருவதால், பாலிவுட்டின் அடுத்த அமிதாப் பச்சன் சோனு சூட் என்று இணையவாசிகளால் புகழாரம் சூட்டப்பட்டார். திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஒருவரை, பாலிவுட் திரை உலகின் உச்ச கதாநாயகனாக இருக்கும் ஒருவருடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்த்தியது சோனு சூட்டின் உதவி மனப்பான்மை. 

ரமலான் பண்டிகை கொண்டாட வேண்டும் என இளைஞர் ஒருவர் சுட்டுரையில் விடுத்த கோரிக்கைக்கும் சோனு சூட் செவிசாய்த்தார். கேரளத்தில் சிக்கியுள்ள தமது மாமாவை தில்லி அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் மட்டுமே நாங்கள் மகிழ்ச்சியான ரமலான் பண்டிகையைக் கொண்டாட முடியும் என சுட்டுரையில் இளைஞர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், விரைவில் தங்கள் மாமா வீடு வந்து சேர சமூக வலைத்தளங்கள் மூலமே உதவிகள் வழங்கப்படும் என பதில் அளித்து சமுதாயத்தின் மீதான மனிதாபிமானத்தை சோனு சூட் நிரூபித்தார்.

உணவின்றித்  தவிக்கும் 25,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, ரமலான் பண்டிகையையொட்டி ரமலான் மாதம் முழுக்க நாள்தோறும் உணவு வழங்கி உதவி புரிந்தார். ஈகையை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி உணவு தேவைப்படுபவர்களைத் தேடிச் சென்று உதவி புரிவதை சோனு சூட் வழக்கமாக கொண்டார்.

பின்னர் நாளடைவில் தமது தந்தை சக்தி சாகர் சூட் நினைவாக சக்தி அன்னதானம் என்ற பெயரில் இலவச உணவு வழங்குவதைப் பெரும் சேவையாக மேற்கொண்டு அதனையும் தொய்வின்றி செய்து வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தண்டவாளத்தில் விபத்தில் இறந்ததன் எதிரொலியாக, உதவி தேவைப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் உதவி வேண்டும் என அணுகுவதற்காக ஒரு கட்டணமில்லா எண்னையும் அறிவித்திருந்தார் சோனு சூட்.

இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உதவி கிடைக்கும் வகையில் நண்பர்கள் மூலம் குழு அமைத்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த முயற்சிக்கு அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பல தரப்பினரிடையே பாராட்டப்பட்டது.

ஊரடங்கில் படித்த பட்டதாரிகளும் வேலையிழந்து தவித்து வந்தனர். ஊரடங்கால் வேலையிழந்து ஆந்திரத்தில் காய்கறிகளை விற்பனை செய்து வந்த பட்டதாரி பெண்ணுக்கு நடிகர் சோனு சூட் பணி ஆணையினை பெற்றுத் தந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பொறியியல் படித்த பட்டதாரி பெண் ஒருவர் ஊரடங்கால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் குடும்ப வறுமை காரணமாக காய்கறிகளை விற்றுவந்தார். இதனை அறிந்த சோனு சூட், அவரது படிப்பிற்கு ஏற்ற பணியினை பெற்றுத்தந்துள்ளார். இதற்காக அப்பெண் சோனு சூட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் பட்டதாரி இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் வகையில் Pravasirojgar.com என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை துவக்கினார்.  இதன்மூலம் மருத்துவம், பொறியியல். வங்கி நிர்வாகம் உள்ளிட்ட பலதுறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் வேலைவாய்ப்பை வழங்குவதற்காக 500 முன்னணி நிறுவனங்களும் தொண்டுநிறுவனங்களும் முன்வந்துள்ளன. இதன்மூலம் படித்த பட்டதாரிகளின் மத்தியிலும் கதாநாயகனாக நின்றார் நடிகர் சோனு சூட்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் நிலத்தை உழுவதற்கு மாடுகள் இன்றி தமது இரு மகள்களை வைத்து விவசாயி ஒருவர் நிலத்தை உழும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விடியோவைக் கண்ட சோனு சூட், இந்த குடும்பத்திற்கு மாடுகளைவிட டிராக்டரை கொடுப்பதுதான் சரி. அதனால் நான் அவர்களுக்கு ஒரு டிராக்டர் வாங்கித் தரவுள்ளேன். இன்று மாலை அவரின் நிலத்தை டிராக்டர் உழுது கொண்டிருக்கும் என சுட்டுரையில் பதிவிட்டு அதன்படி டிராக்டரையும் பரிசளித்தார்.

பிகார் மாநிலம் சம்பரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தமது 2 மகன்களையும், 2 எருமை மாடுகளையும் விவசாயி ஒருவர் இழந்து தவித்து வந்தார். பால் விற்பனையால் மட்டுமே குடும்பம் நடத்தி வந்த அவர்களுக்கு, மகன்களும் இறந்ததால், தாமும் ஒரு மகனாக நின்று, அந்த குடும்பத்திற்கு 2 எருமை மாடுகளை சோனு சூட் அளித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மழையினால் வீடு இழந்த ஒரு பெண்ணுக்கு வீடு கட்டித் தருவதாக வாக்களித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு கூட தெலங்கானாவில் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இனி 3 சிறுவர்களும் ஆதரவற்றவர்கள் இல்லை, அவர்களுக்காக நான் இருக்கிறேன் என்று ஆதரவுக் கரம் நீட்டினார் சோனு சூட். 

கிர்கிஸ்தானில் சிக்கித் தவித்து வந்த 1,500 மாணவர்களை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மூலம் இந்தியா அழைத்து வர உதவி புரிந்தார். ஜூலை மாதம் முழுவதும் 9 முறை விமானங்கள் இயக்கப்பட்டு படிப்படியாக 1,500 மாணவர்களும் தாய் நாட்டிற்குத் திரும்பிவர உதவினார் சோனு சூட். 

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் சிக்கித் தவித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 90-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப தனி விமானத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார்.

200 இருக்கைகள் கொண்ட தனி விமானத்தில் 91 மாணவர்கள் போக மீதி காலியாகயிருந்த 109 இருக்கைகளுக்கான டிக்கெட்டையும் தமது சொந்தப் பணத்தில் வாங்கி மாணவர்கள் சென்னை திரும்ப உதவியுள்ளார்.

ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தேர்வான இந்திய விளையாட்டு வீரரான சுதாமா குமார் யாதவின் முழங்கால் அறுவை சிகிச்சைக்கான செலவினை ஏற்றுக்கொள்ள சோனு சூட் முன்வந்தார்.

சுட்டுரை மூலம் உதவி கோரி வந்த நபருக்கு மறுக்காமல் மறுகணமே அறுவைச் சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். விளையாட்டு வீரர்கள் இந்தியாவின் பெருமை. பதக்கம் வெல்ல தயாராகுங்கள். அறுவை சிகிச்சைப் பணிகள் அடுத்த வாரம் நடத்தி முடிக்கப்படும் என்று நம்பிக்கையூட்டினார் சோனு சூட்.

பலதரப்பட்ட மக்களுக்கு  துன்ப காலத்தில் உதவுவதை வழக்கமாக கொண்டதால், சமீபத்தில் நிகழ்ந்த கேரள விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ மக்கள் முன்வர வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

பல கனவுகளுடன் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை வரவேற்பதற்காக காத்துக்கொண்டிருந்த உறவினர்களின் நிலையை நினைத்து வேதனை அடைந்த அவர், விமான விபத்தில் படுகாயம் அடைந்த மக்களை தங்களால் இயன்றவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

2020-ஆம் ஆண்டு மிகவும் வேதனைகரமானதாக உள்ளது. எனினும் உதவியின் மூலம் வேதனையை நாம் கடக்க முடியும் எனவும் மனம்திறந்தார்.

நடிகர் சோனு சூட்டின் சேவையை பாராட்டும் வகையில் ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் அவரது உருவம் மணற் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. கரோனா பெருந்தொற்று காலங்களில் தங்களது மகத்தான பணி குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை. தங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், பெருமைப்படுத்தும் வகையிலும் மணற் சிற்பம் வடித்துள்ளதாக மணற்சிற்பி சுதர்சன் பட்நாயக் சோனு சூட்டை புகழ்ந்திருந்தார்.

ஊரடங்கு காலத்தில் பல்வேறு தரப்பினருக்கு நடிகர் சோனு சூட் உதவி புரிந்து வருகிறார். இதற்கு மக்களிடம் கிடைக்கும் உற்சாகமும், பலன் அடைந்தவர்கள் பெறும் மகிழ்ச்சியுமே காரணமாக உள்ளது. அந்த வகையில் மற்றவர்களும் உதவி தேவைப்படும் சக மக்களுக்கு உதவிபுரியும் வகையில், கரோனா காலத்தில் புரிந்த உதவிகளையும், அதன் அனுபவங்களையும் புத்தகமாக எழுத சோனு சூட் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, நான் இளம் வயதில் இருக்கும்போது என்னுடைய அம்மா அனைத்து நிகழ்வுகளையும் தன்னுடைய டைரியில் எழுதி வைப்பார். அது என்னிடம் தற்போதும் இருக்கிறது. அதுபோல நானும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுத முடிவு செய்திருக்கிறேன் என்று கூறினார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் புத்தகத்தினை எபூரி பப்ளிஷிங் மற்றும் பென்குயின் ராண்டம் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிடவுள்ளன. 

அவருடைய இந்த தன்னலமற்ற உதவியின் பலனாக வட மாநிலங்களில் ஒரு சிலர் தாங்கள் புதிதாக தொடங்கும் கடைகளுக்கு சோனு சூட்டின் பெயரை வைத்தும் தங்களது நன்றி கடனைச் செலுத்தி வருவது நெகிழ்ச்சிகரமான நிகழ்வாகவே உள்ளது.

குளிர்சாதன அறையிலிருந்து வெளியேறி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகக் களத்தில் நின்று உதவி புரிய வேண்டும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கவலைகள் தீரும் வரை ஓய்வு என்பது இல்லை என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார் நிஜ வாழ்வில் கதாநாயகனாகத் திகழும் நடிப்பில் வில்லனான சோனு சூட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com