வயிறு வழிநடத்துகிறது; பணியிடம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா நோய்த் தொற்றிலிருந்து தப்புவதற்காகப் பிழைக்க வந்த இடங்களை விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் இப்போது மீண்டும் உழைக்கும் இடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சொந்த ஊர் திரும்ப காத்து நிற்கும் தொழிலாளர்கள். (கோப்புப் படம்)
சொந்த ஊர் திரும்ப காத்து நிற்கும் தொழிலாளர்கள். (கோப்புப் படம்)

கரோனா நோய்த் தொற்றிலிருந்து தப்புவதற்காகப் பிழைக்க வந்த இடங்களை விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் இப்போது மீண்டும் உழைக்கும் இடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர் - கரோனா ஆபத்து அப்படியே இருந்தாலும்.

இந்தியாவின் பல்வேறு பெருநகர்கள், சிறுநகர்களிலிருந்து பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் சொந்த மாநிலங்களான பிகார், ஒடிசா, உத்தர, மத்தியப் பிரதேசங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

ஆனால், அங்கே வேலையுமில்லை, சம்பளமும் இல்லை, பிழைக்க வழியுமில்லை, உண்ண உணவுமில்லை என்ற நிலையில் ஏற்கெனவே வெளியேறி அவரவர் உழைத்த இடங்களுக்கே திரும்புகின்றனர்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறையவில்லை என்றபோதிலும் பட்டினியின்றி உயிர் வாழ வழி தேடி வருகின்றனர்.

சென்னை, புது தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகர்களுக்கும் இவர்கள் திரும்புகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரூ. 50 ஆயிரம் கோடி திட்டமொன்றைக் கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது. ஒடிசா, பிகார் போன்ற  மாநில அரசுகளும் இவர்களுக்குச் சொந்த மாநிலத்திலேயே வேலை வழங்குவதாக உறுதியளித்தன.

பிற மாநிலங்களுக்குப் பிழைக்கச் சென்று திரும்பிவந்துள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கும் தன்னுடைய அரசு வேலைகளை உருவாக்கித் தரும் என்றும்  யாரும் திரும்பிப் போக வேண்டிய கட்டாயமில்லை என்றும் பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உறுதியளித்திருந்தார்.

ஆனால், வேலைக்காகக் காத்திருந்து பல மாதங்களான பிறகும் எதுவும் உருப்படியாக நடைபெறவில்லை.

விமான சேவைகளும் சிறப்பு ரயில் சேவைகளும் தொடங்கியுள்ள நிலையில் பிகார், ஒடிசா மாநிலங்களிலிருந்து புறப்படத் தொடங்கியுள்ளனர்.

கரோனா காலத்தில் எவ்விதத்திலும் உதவி செய்யாமல் கைவிட்ட தொழில் -  தொழிற்சாலை உரிமையாளர்கள்கூட இப்போது தங்கள் வேலைக்குத் தக்க தொழிலாளர்கள் கிடைக்காததால், அவர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து தங்கள் பணியிடங்களுக்கு அழைத்து வரத் தொடங்கியுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் வருவது வரட்டும் என்ற மனநிலையில் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. வட மாநிலங்களில் வேளாண் பணிகளும் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் இவர்களுக்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.

தில்லியைச் சேர்ந்த காளான் வளர்ப்பாளர் பப்பன் சிங், பிகாரைச் சேர்ந்த, தன்னிடம் வேலை பார்த்த 10 தொழிலாளர்களுக்கும் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து விமானத்தில் திரும்பி வரவழைத்துள்ளார்.

தொழிலாளர்கள் இல்லாமல் தன்னுடைய தொழில் மிகவும் திணறிப் போய்விட்டதாகக் கூறுகிறார் பப்பன் சிங்.

பிகாரிலிருந்து மும்பை, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு செல்லும் விமானங்கள் அனைத்தும் புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பிவழிவதாக பாட்னாவிலுள்ள ஜயப்பிரகாஷ் நாராயணன் விமான நிலைய இயக்குநர் பூபேஷ் நேஹி தெரிவித்துள்ளார்.

பயணிகளில் 80 சதவிகிதத்தினர் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். 

ஆமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு போன்ற நகர்களுக்குச் செல்லும் ரயில்கள் எல்லாமும்கூட தொழிலாளர்களால் முழு அளவுக்கு நிரம்பிச் செல்கின்றன. ஒவ்வொரு சிறப்பு ரயிலிலும் இரு மடங்கு வரை பயணிகள் செல்கின்றனர்.

இதே தொழிலாளர்கள்தான் சில மாதங்களுக்கு முன் பெரும் விரக்தியில், நடந்தும் சைக்கிள்களிலும் லாரிகளிலும் கிடைத்த வாகனங்களைப் பிடித்துத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினார்கள் என்பது பெரும் முரண்.

பசியாலும் பட்டினியாலும் குடும்பம் தவிக்கிறது, வேறு வழியில்லை, வேலை பார்த்த இடங்களைத் தேடிப் புறப்பட்டுச் செல்ல வேண்டியதுதான் என்பதுதான் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலை.

ஒடிசாவில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவந்தனர்.

வேலையில்லா திண்டாட்டம் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம் போன்ற தங்கள் பணியிடங்கள் இருக்கும் மாநிலங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

சொந்த ஊர்களில் வேலையில்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர் என்று சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிஹர் லால் கூறுகிறார்.

அதேவேளை, குஜராத்திலும் இந்தத் தொழிலாளர்கள் இல்லாததால் வேலைகள் கடுமையாக முடங்கிப் போய்விட்டன என்பதும் உண்மையே.

தமிழகத்திலும் பல்வேறு நகர்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் பெருமளவிலானோர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்போர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லாததால் அரசு பல தளர்வுகளை அறிவித்தபோதிலும் கட்டுமான நிறுவனங்களால் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இவர்கள் திரும்பத் தொடங்கியதும்தான் படிப்படியாகப் பணிகள் தொடங்குகின்றன.

இதேபோல, கொங்கு மண்டலத்திலும் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர், அல்லது வரும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் இ பாஸ் நடைமுறை, பொதுப் போக்குவரத்துச் சிக்கல் போன்றவற்றால் இன்னமும் முழு வீச்சில் புலம்பெயர் தொழிலாளர்கள் வரத் தொடங்கவில்லை. எனினும், வந்தேயாக வேண்டிய சூழல் இருக்கிறது.

வாழ வழியில்லா நிலையில் வயிறு வழி நடத்துகிறது; சொந்த ஊரென்ன, வந்த ஊரென்ன? புலம்பெயர் தொழிலாளர்கள் பணியிடம் திரும்பத் தொடங்கியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com