மனித மனம் ஒன்றே: லண்டனில் மகனைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட புற்றுநோயாளிப் பெண்

உலகம் முழுவதுமே மனித மனம் என்பது ஒரே மாதிரிதான். ஏழையாக இருக்கலாம், பணக்காரராக இருக்கலாம், செல்வந்த நாடாக இருக்கலாம், வறிய நாடாக இருக்கலாம், வெள்ளையாக... கறுப்பாக இருக்கலாம்... மனம், மனம் ஒன்றுதான்.
மனித மனம் ஒன்றே: லண்டனில் மகனைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட புற்றுநோயாளிப் பெண்

உலகம் முழுவதுமே மனித மனம் என்பது ஒரே மாதிரிதான்.

ஏழையாக இருக்கலாம், பணக்காரராக இருக்கலாம், செல்வந்த நாடாக இருக்கலாம், வறிய நாடாக இருக்கலாம், வெள்ளையாக இருக்கலாம், கறுப்பாக இருக்கலாம்... மனம், மனம் ஒன்றுதான்.

லண்டனில் புற்றுநோயால் அவதிப்பட்டு நொந்துபோன ஒரு பெண், தன் ஏழு வயது மகனைக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

லண்டனில் வசித்து வந்தவர் ஜூலியா காக்ஸிடாக், 35. இவருடைய மகன் தைமூர், 7 வயது.

வங்கிப் பணிகள் ஆய்வாளரான இவர், டவர் குடியிருப்பிலுள்ள தங்களுடைய அடுக்குமாடி வீட்டில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, மகனைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் கருதுகின்றனர்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடிவந்த ஜூலியா, கடந்த மார்ச் மாதத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோதுகூட, தாம் நன்றாக இருப்பதாகத்தான் தெரிவித்தார் என்கிறார் அவருடைய முன்னாள் சகா ஒருவர்.

மிகவும் அற்புதமான பெண் அவர். எல்லாருக்கும் உதவும் பண்பும் கருணையும் கொண்டவர்.  கடைசியாக மருத்துவமனையில் இருந்தபோது பேசியதுதான், இப்படியாகிவிட்டது என்கிறார் அவர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை, தலையில் முடியில்லாத தன்னுடைய ஒரு படத்தை சமூக ஊடகங்களில் ஜூலியா பகிர்ந்திருக்கிறார்.

ஜூலியா பெரும்பாலும் 'விக்' அணிந்திருப்பார். அவருடைய மகனும் மிகவும் துறுதுறுப்பானவன் என்றும் அருகிலுள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அன்புள்ளம் கொண்டவர் ஜூலியா. ஆனால், புற்றுநோய் காரணமாக சில ஆண்டுகளாகவே துயரம் கொண்டவராக இருந்தார்.

மார்பகப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக அவருக்கு நடக்கவிருந்த அறுவைச் சிகிச்சை மிகவும் தாமதமாகிவிட்டது. மிகவும் துயரமான முடிவு என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனில் கரோனா தொற்றுப் பரவலும் பொது முடக்கமும் காரணமாகப் புற்றுநோய்ச் சிகிச்சையில் பெரும் பின்னடைவு நேரிட்டிருக்கிறது. மருத்துவமனைகள் செயலற்றுக் கிடக்கின்றன.

ஜூலியாவுக்கும் அவருடைய கணவர் மகமதுவுக்கும் இந்தப் பகுதியில் இரு வீடுகள் இருக்கின்றன. ஒன்றை வாடகைக்குவிட்டுவிட்டு, மற்றொன்றில் அவர்கள் வசித்துவந்தனர். 

தாங்கள் இருவருமே ரஷிய மொழியில் பேசிக்கொள்வோம். பெருமித உணர்வு கொண்டவர் ஜூலியா. எப்போதும் தன்னுடைய குடும்பத்தை நினைத்துக் கொண்டிருந்தவர், நல்ல தாய் என்கிறார் மற்றொரு முன்னாள் சகா.

ஜூலியா இறந்துகிடந்ததை அறிந்ததற்கு முந்தைய நாள்தான், தாயையும் மகனையும் காணவில்லை என்று காவல் துறையில்  புகார்  செய்யப்பட்டிருக்கிறது.

தூக்கிட்டுக் கொண்டதால் ஜூலியாவும் தண்ணீரில் மூழ்கியதால் அல்லது மூழ்கடிக்கப்பட்டதால் தைமூரும் உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூராய்வு அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளதாக மாநகர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் புகழ்பெற்ற வணிக ஆய்வு நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை மையத்தில் தரவுகள் ஆய்வாளராகப் பணியாற்றினார் ஜூலியா.

லண்டன் பொருளியல் பள்ளியில் பயிலுமுன் மாஸ்கோ நிதித்துறைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் ஜூலியா.

ஜூலியா, தற்போது பிரிட்டிஷ் குடிமகள் என்றபோதிலும் அவர் பிறந்தது ரஷியாவில். பிரிட்டனுக்கு வருவதற்கு முன் ரஷியாவில் இரு வங்கிகளில் பணியாற்றியுள்ளார்.

துருக்கியைச் சேர்ந்த மகமதுவை 2011-ல் திருமணம் புரிந்துகொண்டார். தங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

புற்றுநோயிலிருந்து மீள முடியாத நிலையில், சிகிச்சையும் பலனின்றிப் போக விரக்தியுற்றுத் தாங்க முடியாத நிலையில், உலகில் எல்லா இடங்களிலும் நடப்பதைப் போலவே, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் ஜூலியா காக்ஸிடாக்.

புற்றுநோய் தின்ற உயிர்களில் ஒன்றாகிவிட்டார் ஜூலியாவும். உலகில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையிலும் ஒன்று உயர்ந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com