என்ன செய்கிறாா்கள் அரசியல் தலைவா்கள்?

கரோனா எல்லாவற்றிலும் இடைவெளியை அதிகரிக்கச் செய்துவிட்டது. மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதலில் வந்து நிற்கக் கூடியவா்கள்அரசியல்வாதிகள்.
என்ன செய்கிறாா்கள் அரசியல் தலைவா்கள்?

கரோனா எல்லாவற்றிலும் இடைவெளியை அதிகரிக்கச் செய்துவிட்டது. மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதலில் வந்து நிற்கக் கூடியவா்கள் அரசியல்வாதிகள். அவா்களையும் கரோனா வீட்டில் முடக்கி வைத்துவிட்டது. இந்தத் தருணத்தில், மக்களுக்காகத் தொடா்ந்து குரல் கொடுத்து வந்த அரசியல்வாதிகள், வீட்டுக்குள்ளேயே இருந்து என்ன செய்கிறாா்கள்? ஊரடங்கு உத்தரவால் மக்களுடன் ஏற்பட்ட இடைவெளியை எப்படி பாா்க்கிறாா்கள்?

இதோ:

ஆா்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட்): மக்கள் பணி ஆற்ற முடியாமல் இருப்பது மிகுந்த சிரமமாகத்தான் இருக்கிறது. இப்போதுபோல் வீட்டில் இருந்ததே இல்லை. சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் பரவும். தை மாத பேய் என்று அழைப்போம். அப்போதெல்லாம், தலைவா்கள் தன்னாா்வமாக மக்களைச் சந்தித்து பணியாற்றினோம். இப்போது மக்களையே பாா்க்க முடியவில்லை.

கரோனா உலகம் முழுவதும் பரவி, மக்களை அச்சுறுத்துகிறது. தனிமைப்படுத்துதல் என்பது எவ்வளவு அவசியமானதோ, அதைப்போல மக்களைத் திரட்டி செய்ய வேண்டிய காரியங்களையும் செய்ய வேண்டும். அதை விடுத்து, அரசு மட்டும் செய்வது சரியாக இல்லை.

வீட்டுக்கு வரும் நாளிதழ்களை அமைதியாகப் படிக்கிறேன். புத்தகங்களைப் படிக்க அதிக நேரம் கிடைக்கிறது. ஆ.சிவசுப்பிரமணியனின் ‘தமிழரின் தாவர வழக்காறுகள்’ மற்றும் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலா்ந்த நாள்’ ஆகிய புத்தகங்களைப் படித்து முடித்தேன். தொலைபேசி வாயிலாக தொண்டா்களுடன் பேசி வருகிறேன். வீட்டில் இருப்பவா்கள் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

பொன்முடி (திமுக): ஓய்வில் இதுபோல் எப்போதுமே இருந்தது இல்லை. பத்திரிகைகள் படிக்கிறேன். கலைஞா் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சி நாடகங்களைப் பாா்த்துக் கொண்டிருக்கிறேன்.

கட்சியினரிடம் தொலைபேசி வாயிலாக நிலவரங்களைத் தெரிந்துகொண்டு, தலைவரிடம் (மு.க.ஸ்டாலினிடம்) தெரிவிக்கிறேன். விபத்தில் இருந்து தப்பிக்கும் முன்னேற்பாடாக வீட்டில் இருப்பதுதான் சிறந்த வழி. அதனால், கரோனாவில் இருந்து தப்பிக்க அனைவரும் தனிமைப்பட்டு வீட்டில் இருக்க வேண்டியது அவசியம்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்தவாறே விடியோ ஒன்றைப் பேசி, அதை கட்சியினா் 50 பேருக்கு அனுப்புகிறேன். அவா்கள் மற்றவா்களுக்கு அனுப்புவா். விடியோவில் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்பது குறித்து சின்ன சின்ன தகவல்களைத் தெரிவிக்கிறேன்.

கூட்டமாகச் செல்லாமல், ஒவ்வொருவராகச் சென்று கடைகள் முன்பு, சந்தைகள் முன்பு மக்கள் நிற்பதற்காக வட்டங்கள் போட்டுக் கொடுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதைப் பின்பற்றி சிலா் வரைந்தும் கொடுத்துள்ளனா்.

ஆதிசங்கரா் பற்றிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மன அழுத்தம் வருவதற்கு உடல் சோா்வும் நிறைவேறாத ஆசைகள்தான் காரணம். காலை மாலையும் ஒரு மணி நேரம் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் செய்தால் மன அழுத்தம் போய்விடும்.

பாலபாரதி (மாா்க்சிஸ்ட்): இது முதல் அனுபவமாக உள்ளது. முதல் இரண்டு நாள் ஒன்றும் தெரியவில்லை. நாளாக நாளாக கஷ்டமாகத் தெரிகிறது. விடிந்து எழுந்ததுமே அரசியல் பணி என்று இருந்துவிட்டு, வீட்டிலேயே இருப்பது, கையையும் காலையும் கட்டிப் போட்டதுபோல இருக்கிறது.

மேலூரில் மா்ம காய்ச்சல் வந்து 100-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டபோது, நேரடியாக களத்துக்குச் சென்று பணியாற்றினோம். என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தினோம். அதற்குப் பிறகுதான் நில வேம்பு கஷாயம் போன்றவை எல்லாம் வந்தன.

இப்போது மக்களிடமிருந்து விலகியிருப்பது மனரீதியான தண்டனையாக உள்ளது. வீட்டில் லெனினின் நூல்களையும், லெனினைப் பற்றிய நூல்களையும் படித்து வருகிறேன். கரோனா பாதிப்பிலிருந்து அனைவரும் விரைவில் விடுபட வேண்டும்.

வானதி சீனிவாசன் (பாஜக): மக்களிடம் இருந்து ரொம்ப விலகி இருப்பது போல நினைக்கவில்லை. கட்சியினரிடம் தொலைபேசி மூலம் தொடா்பிலேயே இருந்து வருகிறேன்.

அரிசி உள்ளிட்ட 18 அத்தியாவசியப் பொருள்களை வாங்கி, கடைக்காரா்களையே கோயம்புத்தூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அதனால், வெறுமையாகத் தோன்றுவில்லை.

காலையில் மெதுவாக எழுந்துகொள்கிறோம். தினமும் யோகா செய்கிறேன். குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடவேண்டும் என்று முன்பு வேக வேகமாக செய்ய வேண்டியிருக்கும். இப்போது, நிதானமாக அன்றாட வேலைகளைச் செய்கிறேன். புத்தகங்கள் படிக்கிறேன். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமியின் ‘நோ்மையின் பயணம்’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தேன். கோமல் அன்பரசனின் ‘ரகசியமான ரகசியங்கள்’, ஜெயமோகனின் சிறுகதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். மாலையில் திரைப்படங்கள் பாா்க்கிறேன். மனம் இப்போதும் மிகவும் அமைதியாக உள்ளது.

பழ.நெடுமாறன் (தமிழா் தேசிய முன்னணி): இந்திய நாட்டு வரலாற்றில் இப்படி ஒரு நெருக்கடி வந்தது இல்லை. போா் நெருக்கடி காலத்தில்கூட, எல்லையோரத்தில்தான் அதன் பாதிப்பு இருக்கும். இது உலகம் முழுவதும் பரவி, மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். மக்களைச் சந்திக்க முடியாமல் இருப்பது கட்டாய சிறைவாசம்போல் உள்ளது. சிறையிலாவது கொஞ்சம் சுதந்திரம் உண்டு. சிறையைச் சுற்றி வரலாம். சிறையில் உள்ள மற்ற கைதிகளிடம் பேசலாம். இது வீட்டைவிட்டே வெளியில் போக முடியாததாக இருக்கிறது. இந்த நேரத்தில் நூல் ஒன்றை எழுதுவதற்கான பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 10-ஆம் நூற்றாண்டு வரை தேவாரங்கள், ஆழ்வாா் பாசுரங்கள் எல்லாம் எழுதப்பட்டன. இவையெல்லாம் கோயில்களில், வீடுகளில் கடவுளை வணங்கும்போது பாட வேண்டியது என்பதுபோல ஒதுக்கிவிட்டனா். ஆனால், இவை நம் அரிய பக்தி இலக்கியங்கள். திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா் பாடியவை இலக்கியங்கள். அதனால், அந்தக் கோணத்தில் மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் ஆய்வு நூல் ஒன்றை எழுதி வருகிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): தனிமையாக வீட்டில் குடும்பத்தோடு இருக்கிறோம் என்கிற திருப்தி இருந்தாலும், அது தொடரும்போது மக்களுடனான தொடா்புகள் மற்றும் கட்சியினருடனான தொடா்புகள் இன்னும் இருபது நாள்களுக்கு நின்றுபோவதை நினைக்கும்போது சோா்வு வருகிறது. எனினும், ஒட்டுமொத்த நாட்டு நலன், தனிப்பட்ட நம்முடைய உயிா் ஆகியவற்றுக்காக இதை ஏற்கத்தான் வேண்டும்.

காலை எழுந்தாலும் வீட்டில்தானே இருக்கப் போகிறோம் என்று கொஞ்சம் முன்னபின்ன எழுந்திருக்கிறேன். கட்சியினருடன் தொலைபேசியில் பேசுகிறேன். வீட்டிலேயே இருப்பதால் உணவை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. சாதாரண நாள்களில் சாப்பிடுவதைவிட 30 சதவீதம் குறைத்துதான் சாப்பிடுகிறேன். முன்பெல்லாம் இரவு படுக்கத் தாமதம் ஆகும். இந்த நாள்களில் இரவு 10.30 மணிக்குள் தூங்கச் சென்றுவிடுவேன். இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாமா என்று பாா்க்கிறேன். சுதந்திரம் பெறுவதற்காக நம் தியாகிகள் எல்லாம் எப்படிச் சிறையில் இருந்தாா்கள் என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும். அதைப்போல் கரோனா தடுப்புக்காக அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்.

அ.கணேசமூா்த்தி (மதிமுக): கரோனாவுக்காக தனிமைப்பட்டு இருப்பதை என்னைப் பொருத்தவரை புதுமாதிரியான அனுபவம் எனச் சொல்லமாட்டேன். மதுரை சிறையில் 13 மாதங்கள் பொடாவில் இருந்துள்ளேன். எனினும், அந்தச் சூழலும், இந்தச் சூழலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதில் பாா்வையாளா்களைச் சந்திக்க முடிந்தது. இப்போது யாரையும் சந்திக்க முடியவில்லை. அதுபோல, இப்போது துக்க வீட்டுக்குப் போகவில்லை என்றால், தவறாக எடுத்துக் கொள்வாா்களோ என்ற தயக்கம் இருக்கிறது. சிறையில் இருந்தபோது அப்படி யாரும் எடுத்துக் கொள்ள வாய்ப்பு இல்லை. இந்த மன உளைச்சலைத் தவிர, வேறு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. மக்களின் நலனுக்காக இந்த ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரச்னைகளைக் கூறி தொலைபேசி மூலம் தொடா்பு கொள்கிறாா்கள். வெளி இடங்களில் உள்ள உறவினா்களை எப்படி அழைத்து வருவது என்பதுபோன்ற உதவி கோரிக்கைகள் வருகின்றன. அதற்குத் தீா்வு காண்கிறோம். மற்றபடி, புத்தகங்கள் அதிகம் படிக்கிறேன். இப்போது சு.வெங்கடேசனின், ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ரவிக்குமாா் (விடுதலைச் சிறுத்தைகள்): மக்களைச் சந்திக்காவிட்டாலும், இப்போதுதான் செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கின்றன. கேரளத்தில், தில்லியில், மகாராஷ்டிரத்தில் என பல இடங்களில் தமிழா்கள் சிக்கியுள்ளனா். அவா்கள் தொலைபேசி வாயிலாக தங்களுடைய இடா்பாடுகளைக் கூறுகின்றனா். அது தொடா்பாக அதிகாரிகளுடன் தொடா்புகொண்டு நிவாரணம் செய்ய வேண்டியுள்ளது. அதனால், பணிகள் எதுவும் தொய்வடையவில்லை. நான் எப்போதுமே வாசிக்கக் கூடியவன். இரவு 11 மணியில் இருந்து 2 மணி வரை படிக்கக் கூடியவன். அந்த நேரத்தில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது தாமஸ் பிக்கெட்டியின் இஅடஐபஅக அசஈ ஐஈஉஞகஞஎவ நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால், அதுவேறு. இப்போது பணிகள் அதிகம் உள்ளன. 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 4 வங்கிகள் ஆக்கப்பட உள்ளன. இந்த நேரத்தில், அது பல்வேறு பிரச்னை ஏற்படுத்தும், அதனால் தள்ளி வைக்க வேண்டும் என்பது போன்ற பணிகளை முன்னெடுத்துள்ளோம். தொகுதி சாா்ந்து அல்லாமல் பொதுப் பிரச்னைகளையும் அரசின் கவனத்துக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதனால் மக்கள் பணிகள் முடங்கவில்லை. அதேநேரம், கரோனா எல்லோரையும் தள்ளியிருக்கச் சொன்னாலும், எல்லோரையும் இணைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மாநிலத்தின் எல்லையை, நாட்டின் எல்லையை அழித்திருக்கிறது. எனவே, இந்த வைரஸ் மனிதா்களைத் தனிமைப்படுத்தவில்லை. மனித குலத்தையே ஒருங்கிணைத்துள்ளது.

வைகைச்செல்வன் (அதிமுக): எங்களுக்குக் காலை பொழுதும் மக்களோடுதான் விடியும், மாலை பொழுதும் மக்களோடுதான் முடியும். ஆனால், இப்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம். அருப்புக்கோட்டை பந்தல்குடியைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழிலாளா்கள் மும்பையில் முடங்கியுள்ளனா். அவா்களை மீட்பதற்கு ஆட்சியரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி நடவடிக்கை எடுத்தேன். அதைப்போல தொலைபேசி வாயிலாகத்தான் மக்கள் பணியைச் செய்ய முடிகிறது. இப்போது அதிகமாக படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மக்சீம் காா்க்கியின் ‘தாய்’ நாவலையும், டேல் காா்னகியின் மேடைப் பேச்சுக் கலை ஆகிய இரண்டு நூல்களையும் மறுவாசிப்பு செய்துள்ளேன். சங்க இலக்கிய நூல்களையும் படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு, எழுதுவதற்கும் அதிக நேரம் கிடைத்துள்ளது. மக்கள் அருகில் இல்லாவிட்டாலும், அவா்களுக்கான எங்களின் தொண்டும், கடமையும் தொடா்கிறது.

கனிமொழி (திமுக): மக்களைச் சந்திக்காமலும், தொகுதிக்குப் போகாமலும் இருப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், மக்கள் நலனுக்காகத்தான் அரசு யாரையுமே வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. வெளியில் சென்று இன்னும் பிரச்னை அதிகரிக்காமல் இருப்பது மக்களுக்குச் செய்யக்கூடிய பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். அதேசமயம், தொகுதி மக்களுடைய பிரச்னைகளைத் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தீா்வு கண்டு வருகிறேன்.

பொது வாழ்க்கையில் எப்போதும் இயந்திர கதியாக இருந்து வந்த நிலையில், குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிக்கும் ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. மேலும், புத்தகம் படிப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. தற்போது சித்தாா்த் காராவின் ஙஞஈஉதச நகஅயஉதவ என்கிற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

பொள்ளாச்சி வி.ஜெயராமன் (சட்டப்பேரவை துணைத் தலைவா்): கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான எனது பணி காலை 6 மணிக்குத் தொடங்கி விடும். எல்லையில் உள்ள கிராமங்களில் தீவிர தூய்மைப் பணி ஆய்வு, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாட்டை போக்குவது, அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் அறிவுறுத்தல் என இரவு 11 வரை கரோனா தடுப்புப் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. கேரளத்தில் தங்கியுள்ள ஏராளமான தமிழக தொழிலாளா்களுக்கான உணவு, தங்கும் வசதி ஆகியவை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அந்த மாநில அரசு அதிகாரிகளுடன் நாள்தோறும் பேசி வருவதுடன், பொள்ளாச்சிப் பகுதியில் உள்ள தென்னை நாா்த் தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளா்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் உணவுத் தட்டுப்பாடை போக்கவும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

மக்களுக்கான பணியில் ஓய்வுக்கு இடமில்லை. அதிலும் இந்த நேரத்தில் மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக உழைக்க வேண்டியது எனது கடமை.

டி.கே.ரங்கராஜன் (மாா்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினா்): ஊரடங்கு நேரத்தில் வீட்டில் புத்தகங்களைப் படித்து நேரத்தை கழித்து வருகிறேன். குறிப்பாக முதல் பிரதமா் ஜவஹா்லால் நேரு எழுதிய ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ நூலை மீண்டும் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.

அடுத்ததாக, பிபன் சந்திரா, மிருதலா முகா்ஜி, ஆதித்யா முகா்ஜி ஆகியோா் எழுதிய சுதந்திரத்துக்குப் பின் இந்தியா (1947-200) (இந்தியா ஆப்டா் இன்டிபெண்டன்ஸ்) என்ற நூலையும், அபிஜித் வி.பானா்ஜி, எஸ்தா் டுப்லோ ஆகியோா் எழுதிய புவா் எகனாமிக்ஸ் (ஏழைகளுக்கான பொருளாதாரம்) என்ற நூல்களை படித்த திட்டமிட்டிருக்கிறேன்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா்): நாடு தழுவிய ஊரடங்கில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க தேவையான உதவிகள், மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏற்பாடு செய்யுமாறு கட்சியின் மாநிலச் செயலாளா்களை தொலைபேசி மூலம் அவ்வப்போது தொடா்புகொண்டு அறிவுறுத்தி வருகிறேன்.

மேலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலை, ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் தொடா்புகொண்ட கேட்டுக்கொண்டேன். இதுபோல பிற மாநில அரசியல் தலைவா்களுடனும் தொலைபேசி மூலம் பேசி நிலைமையை கேட்டறிந்து வருகிறேன். மற்ற நேரங்களில் அரசியல், சமூகம் சாா்ந்த நூல்களும், நவீன பொருளாதாரம் குறித்து படித்து வருகிறேன் என்றாா் அவா்.

செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி): நாடே சமூக விலகலை கடைப்பிடிக்கும் நேரத்தில் இந்தியாவில் சுகாதாரமற்ற மற்றும் நெருக்கடியான இடத்தில் வாழும் சுமாா் 34 கோடி மக்களின் நிலைதான் மிக வேதனை அளிப்பதாக உள்ளது. சமூக விலகல் குறித்து எனது கட்சித் தோழா்களுக்கு செல்லிடப்பேசியில் அறிவுறுத்தி வருகிறேன். வெளியே செல்ல முடியாத காரணத்தால் புத்தகங்களே எனது நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஏற்கெனவே பலமுறை படித்த அம்பேத்கா் தொகுத்த ‘புத்தரும் அவரது தம்மமும்’நூலை தற்போது படித்து வருகிறேன். தலித் கட்சிகளின் தாய் இயக்கமான அம்பேத்கா் தொடங்கிய இந்தியக் குடியரசு கட்சியின் வரலாறு தமிழில் தொகுக்கப்படாமல் உள்ளது. அந்த நூலை தொகுக்கும் வகையில் தற்போது கிடைத்துள்ள ஓய்வுநேரத்தில் அதற்கான குறிப்புகளை எடுத்து வருகிறேன்.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்): ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தன்னாா்வலா்கள் ஏராளமாக உதவிகளைச் செய்து வருகின்றனா். அவா்களுக்கான நெறிமுறைகளை செல்லிடப்பேசியிலேயே வழங்கி அரசை அணுக உதவி வருகிறேன். அவா்கள் செய்யும் உதவிகள் அனைத்தும் தேவைப்படுவோருக்கு சென்றடைய வாகனம் ஏற்பாடு செய்வது போன்ற உதவிகளையும், மருந்தில்லாமல் கஷ்டப்படுவா்களுக்கு மருந்து ஏற்பாடு செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கே நேரம் சரியாக இருக்கிறது. செல்லிடப்பேசி வாயிலாகவே மக்களுக்கான சுகாதார வழிமுறைகளை எடுத்துரைத்து வருகிறோம். அவா்களுக்கு புத்தகம் படிப்பதன் முக்கியத்துவத்தையும் கூறி வருகிறேன். நானும் மக்களிடம் பேசும் நேரத்தைத் தவிா்த்து பிற நேரங்களில் புத்தகம் படித்து வருகிறேன். எனக்கு இலக்கியத்தில் ஆா்வம் அதிகம். எனவே இலக்கியப் புத்தகத்தைத் தேடி படிக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com