கரோனா தடுப்பூசிகளின் செயல்திறன்: மருந்து நிறுவனங்கள் இடையே போட்டி

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனை உறுதி செய்வதில் ஃபைசர், மாடர்னா ஆகிய மருந்து நிறுவனங்களிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனை உறுதி செய்வதில் ஃபைசர், மாடர்னா ஆகிய மருந்து நிறுவனங்களிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசி 95 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்த கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி, 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர அனுமதி கோரி ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன. தடுப்பூசியை விரைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் இரு நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளும் "எம்ஆர்என்ஏ' வகை தடுப்பூசிகளாகும். அத்தடுப்பூசிகள் மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஃபைசர் நிறுவனத்தின் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. மாடர்னா தடுப்பூசி பரிசோதனைகளின் இடைக்கால ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அவை நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளன.

இரு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்ட தன்னார்வலர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இரு நிறுவனங்களிடம் இருந்து 10 கோடி தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதற்கு அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கு ஃபைசர் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கான நம்பிக்கை:
ஃபைசர் தடுப்பூசியை உறைநிலைக்குக் கீழே 70 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டியது கட்டாயம். ஆனால், அத்தகைய கட்டமைப்பு வசதிகள் இந்தியா முழுவதும் காணப்படவில்லை. ஆனால், மாடர்னா தடுப்பூசி இந்தியாவுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கிறது. அதன் சேமிப்பு வெப்பநிலை குறைவாகவும், பயன்படுத்தப்படும் காலம் அதிகமாகவும் உள்ளதால் அத்தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த முடியும்.

ஆனால், மாடர்னா தடுப்பூசியை ஒவ்வொரு நபருக்கும் இரண்டு முறை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்படியானால், இந்தியாவுக்கு சுமார் 300 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். ஆனால், அவ்வளவு அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை விரைவில் உற்பத்தி செய்து வழங்குவது சாத்தியமில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஆர்என்ஏ தடுப்பூசி: கரோனாவுக்கான தடுப்பூசி ஆய்வுகள் பெரும்பாலானவை, கரோனா தீநுண்மியின் வீரியத்தைக் குறைத்து, அதை மனித உடலுக்குள் செலுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால், ஃபைசர், மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகளானது கரோனா தீநுண்மியில் காணப்படும் எம்ஆர்என்ஏ மரபுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

அத்தடுப்பூசிகளின் மூலமாக கரோனா தீநுண்மியின் எம்ஆர்என்ஏ மரபுப் பொருளானது மனித உடலுக்குள் செல்லும். அதற்கு எதிராக உடலின் நோய்எதிர்ப்பு மண்டலம் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். எனவே, எதிர்காலத்தில் கரோனா தீநுண்மி உடலில் நுழைந்தாலும் அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலம் எளிதில் செயல்படும்.

முக்கிய வேறுபாடுகள்
ஃபைசர், மாடர்னா கரோனா தடுப்பூசிகள் இரண்டும் ஒரே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும் அவைகளுக்குள் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளானது அத்தடுப்பூசிகளை சேமித்து வைப்பதிலும் விநியோகிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

மற்ற தடுப்பூசிகள்
உலக அளவில் மேலும் 10-க்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள்
மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. கரோனா தடுப்பூசிகளை
160 கோடி எண்ணிக்கையில் வாங்குவதற்கு பல்வேறு நிறுவனங்களுடன் இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தடுப்பூசி அளவு(ஒரு நபருக்கு)

ஃபைசர் தடுப்பூசிமாடர்னா தடுப்பூசி
சேமிப்பு வெப்பநிலை (டிகிரி செல்ஷியஸ்) 
(-70)(-20)
பயன்படுத்தப்படும் காலம் 
சேமிப்புக் கிடங்குகளில் வைத்து 5 நாள்களுக்குள் பயன்படுத்தலாம்.சேமிப்புக் கிடங்குகளில் வைத்து 30 நாள்கள் வரை பயன்படுத்தலாம். அறை வெப்பநிலையில் வைத்து 12 மணி நேரத்துக்குள் பயன்படுத்தலாம்.
 
3 வாரங்கள் இடைவெளியில் 2 தடுப்பூசிகள்4 வாரங்கள் இடைவெளியில் 2 தடுப்பூசிகள்


ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பிரிட்டனின் அஸ்த்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான இடைக்கால ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளன. அதில் தடுப்பூசியின் செயல்திறன் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் நடப்பாண்டு இறுதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியை 50 கோடி எண்ணிக்கையில் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நோவாவேக்ஸ்
இந்தத் தடுப்பூசியானது பிரிட்டனில் சுமார் 10,000 தன்னார்வலர்கள் மீது செலுத்தப்பட்டு மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. விரைவில் கூடுதல் தன்னார்வலர்கள் மீது செலுத்தப்பட்டு தடுப்பூசி பரிசோதிக்கப்படவுள்ளது. பரிசோதனை வெற்றியடைந்தால், அடுத்த ஆண்டின் மத்தியில் அத்தடுப்பூசி வர்த்தக ரீதியில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோவாவேக்ஸ் தடுப்பூசியை 100 கோடி எண்ணிக்கையில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

ஸ்புட்னிக்-வி
ரஷியாவின் கமலீயா ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக்}வி கரோனா தடுப்பூசியானது 92 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், அத்தடுப்பூசியை 10 கோடி எண்ணிக்கையில் பெறுவதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com