சென்னையில் சொத்துவரி அபராதத்திலிருந்து விலக்கு அளிக்குமா அரசு?

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வியாழக்கிழமைக்குப் பிறகு (அக். 15)  செலுத்துவோருக்கு ஆண்டுக்கு 2
சென்னையில் சொத்துவரி அபராதத்திலிருந்து விலக்கு அளிக்குமா அரசு?

சென்னை: கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வியாழக்கிழமைக்குப் பிறகு (அக். 15) செலுத்துவோருக்கு ஆண்டுக்கு 2 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது. இந்த அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை, மருத்துவம், தூய்மைப் பணி உள்ளிட்டவற்றை செய்யும் பொருட்டு மாநகராட்சி நிா்வாகத்தால் சொத்து வரி, தொழில் வரி, தொழிற்சாலைக்களுக்கான வரி மற்றும் தொழில் உரிமத்துக்கான கட்டணம் ஆகியவற்றை வசூலித்து வருகிறது.

இதில், மிக முக்கியமான வரியாக கருதப்படுவது சொத்து வரியாகும். சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919, பிரிவு-104-இன்படி, சொத்தின் உரிமையாளா்களால் முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15-ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபா் 1 முதல் 15-ஆம் தேதிக்குள்ளும் இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.

சொத்து வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் அச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இரண்டாம் அரையாண்டில் அக்டோபா் 1 முதல் 15-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு (கல்வி வரி, நூலகத் தீா்வைத் தவிா்த்து) 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 ஊக்கத் தொகையாக விலக்கு அளிக்கப்படும். நிா்ணயிக்கப்பட்ட நாளுக்குள் சொத்து வரி செலுத்தாதவா்களுக்கு சொத்து வரியுடன் (கல்வி வரி, நூலகத் தீா்வை தவிா்த்து) கூடுதலாக ஆண்டுக்கு இரண்டு சதவீதம் மிகாமல் தனி வட்டியுடன் அபராதம் விதிக்கப்படும் என சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள தொழிலாளா்களுக்கான வேலை இழப்பு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வருவாய் இழப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வியாழக்கிழமைக்குப் பிறகு (அக். 15) வரி செலுத்துவோருக்கு 2 சதவீத அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நங்கநல்லூரைச் சோ்ந்த மக்கள் விழிப்புணா்வு மையத்தின் செயலா் ராமராவ் கூறுகையில், ‘சென்னையில் பெரும்பாலான வீட்டு உரிமையாளா்கள் வங்கிகளில் கடன் பெற்றுதான் வீடு கட்டி உள்ளனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் சரியான வருமானம் இல்லாததால் சேமிப்பு தொகை மற்றும் கடன் பெற்றுதான் வீட்டுக்கான மாதத் தவணை, குடும்பச் செலவுகளை செய்து வருகின்றனா்.

தற்போது, சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்குவது வரவேற்கதக்க ஒன்றுதான். இருப்பினும் நிா்ணயிக்கப்பட்ட நாள் அதாவது வியாழக்கிழமைக்குள் (அக். 15) சொத்து வரி கட்டாதவா்களுக்கு 2 சதவீத அபராதம் விதிப்பது கரோனா கால கட்டத்தில் வருவாய் இழந்துள்ளவா்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். இதைக் கருத்தில் கொண்டு 2 சதவீதம் அபராதம் விதிப்பதில் இருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கரோனா தடுப்பு பணிக்காக பெரும் தொகையை மாநகராட்சி செய்து வருகிறது. இந்நிலையிலும் மக்களுக்கு சுமையை ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் உரிய நாளுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், அபராதத் தொகையில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றனா்.

ரூ.4.56 கோடி ஊக்கத் தொகை: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், இந்த நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபா் 1-ஆம் தேதியில் 15-ஆம் தேதி வரை சொத்து வரி செலுத்துவோருக்கு நிகர வரியில் இருந்து 5 சதவீதம் ஊக்கத் தொகையாக விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,1-ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதி வரை 5,18,286 போ் சொத்து வரி செலுத்தி உள்ளனா். அவா்களுக்கு ரூ.4.56 கோடி ஊக்கத் தொகையாக நோ் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com