Enable Javscript for better performance
ஈரோடு நகரின் 149 ஆவது பிறந்த நாள்- Dinamani

சுடச்சுட

  

  ஈரோடு நகரின் 149 ஆவது பிறந்த நாள்

  By கே. விஜயபாஸ்கர்  |   Published on : 17th September 2020 05:02 AM  |   அ+அ அ-   |    |  

  24b9931d-7ef7-4aeb-8f40-9b68645da642

  ஈரோடு காளை மாடு சிலை.

  ஈரோடு: எ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன உறுப்பினர்கள் கொண்ட ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதுவே ஈரோடு வளர்ச்சிக்கு கால்கோள் நாட்டப்பட்ட நாள். அந்த வகையில் 'மஞ்சள் மாநகரம்' என்றழைக்கப்படும் ஈரோடு இன்று 149ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

  இந்த நாளைப் போற்றும் வகையில் ஈரோடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார் கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.ராசு.

  இதுகுறித்து அவர் கூறியதாவது: 24 கொங்கு நாடுகளில் ஒன்றான பூந்துறை நாட்டின் பழம்பெரும் 32 ஊர்களில் ஈரோடும் ஒன்று. அதில் 4 கட்டமனையாக(மாகாணம்) 24 நாடுகளையும் பிரித்ததில், கட்டமனையின் தலைநகராக ஈரோடு விளங்கியது. இங்கு ஒரு பெரிய மண் கோட்டை கட்டப்பட்டது. அதில் சிறுபடையும், தளவாய் கந்தாசாரம், சேனபாகம், சேர்வைகாரர், அட்டவணை போன்ற அதிகாரிகளும் இருந்தனர். மதுரை நாயக்கர், மைசூர் உடையார், திப்பு, ஹைதர் கம்பெனிப் போர்களில் ஈரோடு கோட்டை மிக முக்கிய இடம் பெற்றது. இவற்றால் ஈரோடு பெரும் அழிவைக் கண்டது. 2,000 வீடுகள் இருந்த ஈரோட்டில் ஆள் அரவமற்ற, 400 வீடுகளே எஞ்சின என்கிறார் ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.

  திப்பு சுல்தான் மறைவுக்குப் பின் (1799), கம்பெனியினர் பவானியைத் தலைநகராகக் கொண்டு அமைக்கப்பட்ட நொய்யல் வடக்கு மாவட்டத்தில் ஈரோடு இருந்தது. 1804-ல் கோயம்புத்தூர் மாவட்டம் உருவானபோது, பெருந்துறை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமமாக ஈரோடு இருந்தது. பின்னர் 1868-ல் ஈரோடு வட்டம் உருவக்கப்பட்டது.

  பெரியார்-அண்ணா நினைவகம்.

  ஈரோடாக மாறிய ஈரோடை: பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையில் அமைந்ததால், ஈரோடை- ஈரோடு ஆயிற்று. அதேபோல் ஈரோடு, மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி என்ற பெயர்களையும் பெற்றதை தல புராணம் கூறும். ஈரோடு கோட்டை, ஈரோடு பேட்டை என இரு பகுதியாக அழைக்கப்பட்டது. கி.பி. 1282இல் வெட்டப்பட்ட காளிங்கராயன் கால்வாயால், ஈரோடு வளம் பெற்றது. கால்வாயின் கீழ் பெரும்பள்ளம் செல்ல 1282இல் பாலம் கட்டப்பட்டது. உலகப் பாலங்கள் நூலில் இது இடம் பெற்றுள்ளது. சோழர் காலக் கல்வெட்டு 'ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேத மங்கலம்' என்று கூறுகிறது.

  மூன்று, மூன்றாய் கோயில்கள்: ஈரோட்டில் மூன்று சிவன் கோயில், மூன்று பெருமாள் கோயில், மூன்று அம்மன் கோயில் சிறப்புமிக்கது. சோழர் கட்டிய கொங்கு நாட்டு முதல் கோயிலும் (907 இல் பள்ளிகொண்ட பெருமாள் கோவில்), முதல் கொங்குச் சோழன் மகிமாலய இருக்குவேள் ஆன வீரசோழன் கட்டிய கோயிலும் (932ல் மகிமாலீசுவரம்) காவிரிக் கரையில் கரிகாலன் கட்டிய கரிகால சோழீசுரமும் இங்குள்ளது. கொங்கு நாட்டை வென்ற பிற அரசர்கள், ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் வந்து, கொங்கு நாட்டு அரசராக முடிசூடுவது வழக்கம். அதனால் இக்கோயில் ராஜ்ய அபிஷேக விண்ணகரம் எனப்பட்டது.

  பெரியார் வீட்டில் தங்கிய மகாத்மா காந்தி: பெரியார் 1917ல் ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராகி, மூன்றாண்டு பதவி வகித்தார். ஈரோடு விடுதலை இயக்கத்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செலுத்தியது. ஈரோட்டுக்கு நான்கு முறை வந்த காந்தியடிகள் தம் இரண்டாவது வருகையின் போது, 1921, செப்டம்பர் 25ஆம் தேதி பெரியார் வீட்டில் தங்கினார்.

  அன்று அவர் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் கள்ளின் கொடுமையைக் கூறினர். இதனால் காந்தியடிகள் கள்ளுக்கடை மறியலை காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்தார். இதுகுறித்து, 1921 டிசம்பர் 22இல் 'யங் இந்தியா' இதழில் ஈரோட்டுப் பெண்கள் என்ற தலைப்பில் காந்தியடிகள் எழுதியுள்ளார். கள்ளுக்கடை மறியலை நிறுத்தி வைசிராயிடம் பேசலாம் என்று சில தலைவர்கள் கூறியபோது, மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டு பெண்கள் இருவர் கையில் உள்ளது என்று காந்தியடிகள் கூறினார்.

      வஉசி பூங்காவில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி   

  1860இல் அரசு தொடக்கப் பள்ளி: காந்தியடிகளுக்கு அவர் வாழும்போதே ஈரோட்டில் 1927 ஏப்ரல் 9 மற்றும் 1939 அக்டோபர் 1 ஆம் தேதி என இரண்டு சிலைகள் திறக்கப்பட்டன. கடந்த 1822ஆம் ஆண்டு கணக்கின்படி, ஈரோடு உள்ளிட்ட அன்றைய கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 6 லட்சத்து, 38 ஆயிரத்து, 199 பேர். பள்ளி செல்பவர் எண்ணிக்கை, 8,930. படித்தோர் விழுக்காடு, 1.39 சதவீதம். அதிலும் பெண்கள் பள்ளி சென்றவர் 82 பேர் மட்டுமே. கடந்த 1860இல் ஈரோட்டில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியாக அது விளங்குகிறது. இதையடுத்து 1876இல் நகர பரிபாலன சபை டவுன் தொடக்கப்பள்ளியைத் தொடங்கியது.

  முதல் கல்லூரி: தாசப்பையர், அண்ணாசாமி ஐய்யங்காரும் சேர்ந்து 1887இல் டவுன் உயர்நிலைப் பள்ளி தொடங்கி நடத்த முடியாமல், லண்டன் மிஷின் சபைக்கு விற்றனர். பெரியாரின் தந்தை வெங்கட நாயக்கரும், முதலாளி ஷேக் தாவூதின் தந்தையார் அலாவுதீன் சாயயும் (டாக்டர் அமானுல்லா பாட்டனார்) எல்லாச் சமூகத்தாரையும் இணைத்து 1899இல் மகாசன உயர்நிலைப்பள்ளி தொடங்கினர். ஜூலை 12, 1954இல் மகாசனக் கல்லூரியை ஆரம்பித்தனர். இதுவே மாவட்டத்தின் முதல் கல்லூரி, மகாசன கல்லூரி, சிக்கய்ய நாயக்கர் மகாசனக் கல்லூரியாகி, இன்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியாக உள்ளது.

  பாரதியின் கடைசி வெளியூர் பயணம்: கடந்த 1927 ஏப்ரல் 9 ஆம் தேதி மூன்றாம் முறை நகராட்சித் தலைவராக இருந்த சீனிவாச முதலியாரால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் தொட்டி அருகே சீனிவாசா பூங்கா ஏற்படுத்தப்பட்டது. (பின்னர் பீப்பிள்ஸ் பார்க், வ.உ.சி., பூங்கா) காரனேஷன் ஹால் கட்டப்பட்டு அதில் காக்ஸ் ரீடிங் அறை திறக்கப்பட்டது. திறப்பு விழா செய்தவர் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயன்.  பெரியார் குடியரசு பதிப்பகம் தொடங்கி, 100-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டார்.வழக்குரைஞர் தங்கப்பெருமாள் பிள்ளை தொடங்கிய பாரதி வாசக சாலை ஆண்டு விழாவுக்கு, ஜூலை 31, 1921 இல் பாரதியார் வந்தார். இதுவே அவரின் கடைசி வெளியூர் பயணமாக அமைந்தது.

  மஞ்சள் மாநகரம்: கடந்த 1973இல் நூற்றாண்டு விழாவை நகராட்சி கொண்டாடியது. 2007 டிசம்பர் 29இல் ஈரோடு நகராட்சி, மாநகராட்சி ஆனது. ஈரோடு மஞ்சள் சந்தை இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜவுளி உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. விசைத்தறியில் முன்னணியில் உள்ளது. மத்திய, மாநில உதவியுடன் ஆசியாவிலேயே மிகப் பெரிதாக கட்டப்பட்டுள்ள டெக்ஸ்வெலி ஜவுளி விற்பனை மையம் ஈரோட்டில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி, லாரி போக்குவரத்தும் சிறப்பாக நடக்கிறது. தோல் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. புகழ் பெற்ற பெரிய பல்துறை மருத்துவமனைகள் பல உள்ளன.

  போரையே வென்ற ஊர்: மரம் வளர்ப்பு, ஊனமுற்றோர் மறுவாழ்வில் சக்தி மசாலா நிறுவனம் சிறப்பாக பணியாற்றுகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற பல கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. 1944இல் ஈரோட்டில் முதலில் தொடங்கப்பட்ட கலைமகள் மேல்நிலைப் பள்ளியில், உலக அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் உள்ளது.  பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1979 செப்டம்பர் 17இல் அமைக்கப்பட்ட மாவட்டத் தலைநகரான ஈரோடு, முன்பு ஏற்பட்ட போர்கள், புயல், பூகம்ப அழிவை வென்று, இன்று பல துறைகளிலும் முன்னேறி வருகிறது என்றார்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp