ஓயாத நீரஜ் அலை: தங்க மகனின் தகுதிக்கான கொண்டாட்டம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்று நாட்டிற்கு வரலாற்றுப் பெருமையைச் சேர்த்தார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா.
ஓயாத நீரஜ் அலை: தங்க மகனின் தகுதிக்கான கொண்டாட்டம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்று நாட்டிற்கு வரலாற்றுப் பெருமையைச் சேர்த்தார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா.

ஒலிம்பிக் போட்டியின் முதல் சுற்றிலேயே 86.65 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதிச் சுற்றில் அவர் எறிந்த ஈட்டி தடகளத்தில் இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைத்தது. ஒலிம்பிக் தடகளத்தில் 100 ஆண்டுகளாக கிடைக்காத தங்கப் பதக்கத்தை 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா பெற்றுத்தந்து பெருமை சேர்த்தார்.

இந்த வெற்றியின் கொண்டாட்டம் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கி இன்று வரை ஓயவில்லை எனலாம். தனிநபரின் உழைப்பில் கிடைத்த வெற்றியை இந்தியா சார்பில் பங்கேற்ற மற்ற விளையாட்டு வீரர்களையும் தங்களது வெற்றியாக கருத வைத்துள்ளது.

நாட்டிற்கு தங்கப் பதக்கத்தை பரிசளித்த தங்க மகனுக்கு ஏராளமான பரிசுகளும் பணத்தொகையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஹரியாணா அரசு - ரூ.6 கோடி
பஞ்சாப் அரசு - ரூ.2 கோடி
மணிப்பூர் அரசு - ரூ.1 கோடி
பிசிசிஐ - ரூ.1 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.1 கோடி, அவருக்கென சிறப்பு ஜெர்சியை 8758 என்ற எண்ணில் அறிவித்துள்ளது
இண்டிகோ விமானம் - ஒரு வருட இலவசப் பயணம்
பைஜூ - ரூ.2 கோடி
ஸ்டார்ட் அப் - ரூ.2 கோடி
மஹிந்திரா - எக்ஸ்யூவி 700
ரயில்வேத் துறை ரூ.3 கோடி
இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் - ரூ.75 லட்சம்.

நாட்டு மக்களும் தங்கள் குடும்பத்தில் ஒருவன் வென்றதைப் போன்று நீரஜ் சோப்ராவின் வெற்றியை பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர்.

நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான ஹரியாணா மாநிலம் பானிபட் பகுதி மக்கள் அவரது வெற்றியை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஆனால் , குஜராத் மாநிலம் பரூக் மாவட்டத்தில் நீரஜ் சோப்ரா என்ற பெயர் வைத்திருந்தால் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் அறிவித்து அதனை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார். இதுவரை 30-க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த ஓவியா் கார்த்திக் என்பவர், நீரஜ் சோப்ராவின் படத்தை ஆப்பிள் பழத்தில் தத்ரூபமாக செதுக்கி  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகை தொழிலாளி  சமுத்திரக்கனி நீரஜ் சோப்ராவின் சிலையை ஈட்டி எறிவது போன்று அமைத்துள்ளார். இதற்காக 480 மில்லி கிராம் தங்கத்தை அவர் செலவு செய்துள்ளார்.

தமிழகத்தின் ஒரு சில உணவகங்களிலும், இனிப்பகங்களிலும் நீரஜ் என பெயர் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஆகஸ்ட் 7-ம் தேதியை ஈட்டி எறிதல் தினமாக அறிவித்து நீரஜின் உழைப்பிற்கு நீங்காத பெருமை சேர்த்துள்ளது தேசிய தடகள சம்மேளனம்.

இந்திய ராணுவத்திலிருந்து நீரஜ் சோப்ராவுடன் சேர்த்து 16 வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். அவர்களது முயற்சியை ராணுவமும், நாட்டு மக்களும் மதித்தாலும், தங்கம் வென்று வந்த நீரஜ் சோப்ராவுக்கு ராணுவம் சார்பிலும் தனி மரியாதை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 Nice! Subedar Neeraj Chopra being ceremonially welcomed at the Army’s Rajputana Rifles regimental centre in Delhi. pic.twitter.com/fjEx3SscH9

இந்திய ராணுவத்தில் சுபேதரான நீரஜ் சோப்ரா தங்கம் வென்று திரும்பும் தருணத்தை ராஜ்புட்னா ரைபில் ரெஜிமெண்டல் மையத்தை சேர்ந்த சக வீரர்கள் ராணுவ ஜீப் கொண்டு நீரஜை வரவேற்று மரியாதை செய்தனர்.

சர்வதேச அளவில் கொண்டாடப்படும் நீரஜ் சோப்ரா

சொந்த நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் விளையாட்டு வீரர்களும் நீரஜ் சோப்ராவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

விளையாட்டிற்கு நாடு, மொழி என்ற பாகுபாடு இல்லை என்பதையே அவர்களின் இந்த செயல் உணர்த்துகிறது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு சுட்டுரையில் அதிகம் பேசப்பட்ட தடகள வீரராக நீரஜ் சோப்ரா விளங்குவதாக ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடப்பாண்டு ஒலிம்பிக் போட்டியில் பலர் பதக்கம் வென்றிருந்தாலும், பல நாட்டை சேர்ந்தவர்கள் தங்கம் வென்றிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் அதிக அளவு குறிப்பிடப்பட்ட பெயராக நீரஜ் சோப்ராவின் பெயர் உள்ளது. அவரை பின்தொடர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

நடப்பாண்டு ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற 10 அதிசய நிகழ்வுகளில் (மேஜிக்கல் மொமண்ட்ஸ்) ஒன்றாக நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிந்த நிகழ்வை உலக தடகள பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒரு படி மேலாக சென்று ஹாலிவுட் திரைப்படங்களில் வந்த சூப்பர் ஹீரோ கற்பனை கதாபாத்திரங்கள் அனைத்தும் நீரஜ் சோப்ராவின் முன்பு தலை வணங்குவது போன்ற படம் பலரது விருப்பம் மிகுந்த படமாக சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

மேலும், ஈட்டியை வீசி எறிந்த கையை இரும்பு கையாக சித்தரித்து புனையப்பட்ட படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மன்னர்கள் வாளுடன் நிற்பது போன்று நீரஜ் சோப்ரா கையில் நீண்ட ஈட்டியுடன் ஒலிம்பிக் மைதானத்தில் நிற்பது போன்ற புகைப்படமும் பலரால் பகிரப்பட்டது.

நீண்ட நாள்கள் காத்திருப்பிற்கு பிறகு கிடைக்கும் ஒரு வெற்றி எந்தெந்த வகைகளில் எல்லாம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பதை நீரஜ் சோப்ரா வென்ற தங்கப்பதக்கம் நிகழ்த்திக்காட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com