இந்தியாவின் வாட்டர்கேட் சிக்கலா, பெகாசஸ் உளவு விவகாரம்?

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் வேவு பார்க்கும் முறையும் மாறியுள்ளது. வாட்டர்கேட் போல் குறிப்பிட இடத்திற்கு சென்று உரையாடல்களைப் பதிவு செய்ய ஒட்டுக் கேட்கும் சாதனங்களை வைக்க வேண்டியதில்லை.
இந்தியாவின் வாட்டர்கேட் சிக்கலா, பெகாசஸ் உளவு விவகாரம்?
Published on
Updated on
3 min read

உலகம் எப்படி கண்காணிப்பு வளையத்தில் சிக்கியுள்ளது என்பதை வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளது பெகாசஸ் உளவு விவகாரம். பல்வேறு உலக நாடுகள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இம்மாதிரியான வேவு பார்க்கும் விவகாரம் நேற்று தொடங்கி இன்று நடந்தவை அல்ல. காலங்காலமாக நடைபெற்றுவருகிறது. சொல்லப்போனால், தனி மனித சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்காதான் இதற்கு முன்னோடி.

பூகம்பத்தை ஏற்படுத்திய வாட்டர்கேட்

கடந்த 1972 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் ரிச்சர்ட் நிக்சன் எதிர்கட்சி தலைவர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டார்.

வாட்டர்கேட் விடுதியில் அமைந்துள்ள ஜனநாயக கட்சியின் தேசிய  கமிட்டியின் தலைமையகத்திற்கு புகுந்த ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, உரையாடல்களை பதிவு செய்யும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. புகழ்பெற்ற பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் நடத்திய புலனாய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை வேவு பார்ப்பதற்காக நிக்சன், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியது அம்பலமானது. 

தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும், நீதித்துறை, ஊடகத்துறை, சட்டத்துறை சிறப்பாக செயல்பட்டு நிக்சனுக்கு அழுத்தம் தர, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அமெரிக்க வரலாற்றில், இதுவரை ராஜிநாமா செய்த ஒரே அதிபர் நிக்சன்தான்.

அதிர்வுகளை ஏற்படுத்தும் பெகாசஸ் விவகாரம்

பத்து பிரதமர்கள், மூன்று அதிபர்கள், மொராக்கோவின் மன்னர், உலக  சுகாதார அமைப்பின் தலைவர், ரஷியா நாட்டின் கோடீஸ்வரர் என வேவு  பார்க்கப்பட்டோர் அல்லது வேவு பார்ப்பதற்கான இலக்கில் இருந்தவர்கள் என  பெகாசஸ் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இராக் அதிபர் பர்ஹம் சாலி, தென்னாப்பிரிக்கா அதிபர் சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பெளலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி ஆகியோரின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டது.

பெகாசஸ் என்றால் என்ன, எப்படி வேலை செய்கிறது?

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் வேவு பார்க்கும் முறையும் மாறியுள்ளது. வாட்டர்கேட் போல் குறிப்பிட இடத்திற்குச் சென்று அவர்களின் உரையாடல்களைப் பதிவு செய்ய ஒட்டுக் கேட்கும் சாதனங்களை வைக்க வேண்டாம். எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் வேவு பார்ப்பதற்கான லிங்க் அனுப்பப்படும். அது என்ன என்று தெரியாதவர்கள், அதை கிளிக்  செய்துவிட்டால் இலக்கின் அத்தனை தகவல்களும் மெசேஜ்களும் யார் யாரிடம் தொடர்பு கொண்டுள்ளோம் குறித்த விவரங்களும், ஜிபிஎஸ் மூலம் நாம் எங்கிருக்கிறோம் என்ற தகவல்களும் திருடப்படும்.

தொழில்நுட்ப தீர்வு என்ன?

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக, வேவு பார்ப்பதற்கான லிங்க்கை நாம் கிளிக்கூட செய்யாமலேயே நாம் ஹேக் செய்யப்படலாம். மிகவும் பாதுகாப்பான ஐ போன்கள்கூட ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தி  வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து செயலிகளையும் உடனடியாக அப்டேட் செய்வதன் மூலம் ஹேக் செய்வதிலிருந்து பாதுகாத்து கொள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள்  கூறுகின்றனர். அதேபோல், குகூள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோ ர் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செயலிகளைப் பதிவிறக்க வேண்டும் என நிபுணர்கள் ஆலோசனைகள் கூறுகின்றனர்.

இவை எல்லாவற்றையும் காட்டிலும் பாதுகாப்பான வழி என்பது செயலிகளை பயன்படுத்தாமல் ப்ரௌசர்களை பயன்படுத்துவதாகும். இ மெயில் மற்றும் சமூக வலைதளங்களை ப்ரௌசர்கள் மூலம் பயன்படுத்துவது சிறப்பான வழியாக இருக்கும் என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.

சட்டப்பூர்வமான தீர்வு என்ன?

வேவு பார்ப்பது என்பது சட்ட விரோதமான செயல் அல்ல. இந்தியாவில் பல காரணங்களுக்காக வேவு பார்ப்பது அரங்கேறி வருகிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை குறைக்கவும், பயங்கரவாதத்தை ஒடுக்கவும் வேவு பார்ப்பதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 92, தந்தி சட்டம் 419 ஏ, தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69 மற்றும் 69 பி ஆகியவை ஒருவரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட சட்ட ரீதியான வழிவகை தருகிறது.

ஆனால், தந்தி சட்டமும் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டமும்  எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் என்ற தெளிவு வரையறுக்கப்படவில்லை. வேவு பார்ப்பதற்கு குறிப்பிட்ட அரசு அமைப்புகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தந்திச் சட்டத்தின்படி, மத்திய அரசின் கீழ் வரும் ஒன்பது அமைப்புகளுக்கும் தில்லி மற்றும் அனைத்து மாநிலங்களின் காவல்துறை தலைவர்களுக்கும் ஒட்டுக்கேட்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69இன்படி, மத்திய அரசின் கீழ் வரும் ஒன்பது அமைப்புகளுக்கும் மாநில அரசின் கீழ் வரும் ஒரு அமைப்புக்கும் ஒட்டுக் கேட்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு  நெருக்கமானவர்கள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா, குமாரசாமி, துணை முதலமைச்சர் பரமேஷ்வரா ஆகியோரின் தனி செயலாளர்களின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளது என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டுக்கு எந்த விதத்தில் இவர்கள் அச்சுறுத்தலாக மாறினார்கள் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவும் எதிர்க்கட்சியினரை ஒடுக்கவும்தான் இவர்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஜனநாயகம் உறுதி செய்யும் தனி மனித சுதந்திரம் அரசியல் லாபாத்திற்காக  நசுக்கப்படும்போது அதில் சீர்திருத்தம் என்பது இன்றியமையாதது. உச்ச நீதிமன்றமும் நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து செயல்பட்டு மக்களுக்கு  வழங்கப்பட்ட தனி மனித சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டிய நேரம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com