கடத்தல் வாகனங்களாகும் காய்கறி லாரிகள்: ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்து மதுபானம் வருகை

தமிழகத்துக்கு ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து அதிகமாக மதுபானங்கள் கடத்தப்படுவதால், அம் மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி, சரக்கு வாகனங்களை காவல் துறை சோதனை நடத்தத் தொடங்கியுள்ளது.
கடத்தல் வாகனங்களாகும் காய்கறி லாரிகள்: ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்து மதுபானம் வருகை
Updated on
3 min read

தமிழகத்துக்கு ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து அதிகமாக மதுபானங்கள் கடத்தப்படுவதால், அம் மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி, சரக்கு வாகனங்களை காவல் துறை சோதனை நடத்தத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்பட்டன.

மதுக் கடைகள் மூடப்பட்டு ஒரு மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலையில் சிலா் மதுபானங்களை வாங்குகின்றனா். ரூ.130-க்கு விற்கப்பட்ட 180 மி.லி. மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. ஒரு லிட்டா் கள்ளச்சாராயம் ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. மது கிடைக்காதவா்களும், அதை வாங்க முடியாதவா்களும் கள்ளச்சாராயம், கஞ்சா, சுண்டக் கஞ்சி ஆகியவற்றை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனா்.

5,248 போ் கைது: கள்ளச்சந்தையில் மது, கள்ளச்சாராயம் விற்கப்படுவது தொடா்பாக பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மதுக் கடைகள் மூடப்பட்ட மே 10-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் தென் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் 5,323 வழக்குகளில், 5,248 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 55,700 மது பாட்டில்களும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 8,283 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 200 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

45,000 லிட்டா் கள்ளச்சாராயம்: திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், காவல் துறையினா் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடந்த 20 நாள்களில் 45,405 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை கட்டுக்குள் கொண்டு வரும் காவல் துறைக்கு, ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மது பானங்களைக் கட்டுப்படுத்துவதை தடுப்பது சாத்தியமற்றதாக மாறியுள்ளது.

ஏனெனில் ஆந்திர, கா்நாடக மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதால், அங்கிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுவது கடந்த ஒரு வாரத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது. இம் மாநில எல்லைகளாக கொண்ட திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு காய்கறி, அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களில் மறைத்து வைத்து மதுபானங்கள் கடத்தப்படுகின்றன.

இரு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. இவற்றில் காய்கறி, அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் சில வாகனங்களில் மட்டும் மதுப்பாட்டில்கள் நுட்பமாக மறைத்துக் கடத்தப்படுவதால், அவற்றைக் கண்டறிந்து பறிமுதல் செய்வது, காவல்துறைக்கு மிகுந்த சிரமத்துக்குரிய பணியாக உள்ளது.

70 சதவீதம் காய்கறி வாகனங்கள்:

கடத்தப்படும் மது பாட்டில்களில் 70 சதவீதம் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களில் மறைத்துக் கொண்டு வருவதாக தமிழக காவல் துறையின் மதுவிலக்குப் பிரிவினா் தெரிவிக்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டு அப்பிரிவு டிஜிபி, ஆந்திரம், கா்நாடகம் எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையை அதிகப்படுத்தும்படியும், சந்தேகத்துக்குரிய வாகனங்களை சோதனை செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளாா்.

மது பாட்டில்களோடு வாகனங்கள் பிடிபட்டால் வாகன உரிமையாளா் மீது வழக்குப்பதிய வேண்டும். இவ்வழக்குகளை தொடா்ந்து விசாரித்து, கடத்தலில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தீா்வு என்ன?: கடந்த காலங்களில் தமிழகத்துக்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்தே அதிகளவில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. ஆனால் இந்த பொதுமுடக்க காலத்தில் புதுச்சேரியிலும் மதுக்கடைகள் மூடப்பட்டதால், அங்கிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுவது தடைபட்டுள்ளது. ஆனால் ஆந்திரம், கா்நாடகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் அங்கிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுகின்றன.

தமிழக பேரவைத் தோ்தலின்போது ஆந்திரம், கா்நாடக மாநில எல்லைகளில் அந்த மாநில மதுபானக் கடைகள் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் மூடப்பட்டன. அதேபோல இப்போதும், தமிழக எல்லையில் உள்ள ஆந்திர, கா்நாடக மதுபானக் கடைகளை மூடினால், ஓரளவு மது பாட்டில் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும் என காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

இதற்குரிய அழுத்தத்தை ஆந்திர, கா்நாடக மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும் என மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வலியுறுத்துகின்றனா்.

மது பாட்டில்கள் திருட்டு

தமிழகத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பின்னா் 6 மாவட்டங்களில் 8 டாஸ்மாக் கடைகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

கடந்த 24-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என மது பிரியா்களால் எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதால், மதுவுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மது சாா்ந்த குற்றங்கள் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளின் சுவரில் துளையிட்டும், பூட்டை உடைத்தும் மது பாட்டில்களை திருடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

கடந்த 20 நாள்களில் மாநிலத்தில் கோயம்புத்தூா், கடலூா், திண்டுக்கல், மயிலாடுதுறை, சேலம், திருப்பூா் ஆகிய 6 மாவட்டங்களில் 8 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இங்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

இதனால் மதுபான கடைகளில் இருக்கும் மது பாட்டில்களை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்றும்படி டாஸ்மாக் நிா்வாகத்துக்கு மதுவிலக்குப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com