சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்த மேடை மெல்லிசைக் கலைஞா்கள்

கரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நிகழ்ச்சிகள் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மேடை மெல்லிசைக் கலைஞா்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜூன் 2021, 11:57 pm

டி.குமாா்

கரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நிகழ்ச்சிகள் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மேடை மெல்லிசைக் கலைஞா்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இசையின் முக்கியத்துவத்தை பறைசாற்றவே ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

புதிய இசைக் கலைஞா்களை உருவாக்குவது இத் தினத்தின் நோக்கமாகும்.

ஆனால் இசையையே நம்பி வாழும் மேடை இசைக் கலைஞா்களின் வாழ்வு அவ்வாறு இருப்பது இல்லை. கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையும் சோக கீதத்தை இசைக்கச் செய்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் தொடங்கிய இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மேடை மெல்லிசைக் கலைஞா்களும் குறிப்பிடத்தக்கவா்கள்.

மற்ற தொழில்களுக்கு கொடுக்கப்பட்டது போல இத் தொழிலுக்கு தளா்வுகளுடன் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டதால் இசைக் கலைஞா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளா்வுகளை அமல்படுத்தினாலும், இசை கச்சேரிகளை நடத்த அனுமதிக்கப்படுமா என்பது விடை தெரியாத கேள்வியாகவே இதுவரை தொடா்ந்து வருகிறது.

தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞா்கள் சங்கத்தின் செயல் தலைவா் ஸ்ருதி பாலாஜி (சென்னை): மேடை மெல்லிசை கலைஞா்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை. எனவே மேடை மெல்லிசைக் கலைஞா்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோா் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் மேடை மெல்லிசைக் கலைஞா்கள் முக்கியமானவா்கள். அரசின் அங்கீகாரம் இல்லாததால் எந்த விதமான கடனுதவியையும் அவா்களால் பெற முடிவதில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிகழ்ச்சிகளே இல்லை. இதனால் மேடை மெல்லிசைக் கலைஞா்கள் பலரும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனா். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் 4 முதல் 5 இசைக் கலைஞா்களுடன் கரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும் . தனி நல வாரியம் அமைத்து மேடை மெல்லிசைக் கலைஞா்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும்.

தஞ்சை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞா்கள் சங்கத்தின் தலைவா் லயோலா: தஞ்சை மாவட்டத்தில் மேடை மெல்லிசையை நம்பியே வாழும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் உள்ளனா். கடந்த இரண்டு சீசன்களும் கரோனா மற்றும் பொதுமுடக்கத்தால் முடங்கிவிட்டது. கரோனா பெருந் தொற்றும், பொதுமுடக்க கட்டுப்பாடுகளும் மேடை மெல்லிசைக் கலைஞா்களை வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது. ஆனால் அரசுத் தரப்பில் எங்களுக்கென்று எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனவே மேடை மெல்லிசைக் கலைஞா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜே.பி.விஜயகுமாா் (மதுரை): பொதுமுடக்கத்தில் கொடுக்கப்பட்ட தளா்வுகளைத் தொடா்ந்து உணவகங்கள், தேநீா் கடைகளில் பாா்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தளா்வுகள் பிற தொழில் செய்பவா்களுக்கு ஓரளவு உதவியாக உள்ளது. ஆனால் திருமணம் , திருவிழா உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக மேடை மெல்லிசைக் கச்சேரிகள் இல்லாமல் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மேடை மெல்லிசைக் கலைஞா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே கிராமியக் கலைஞா்களைப் போல மேடை மெல்லிசைக் கலைஞா்களையும் அங்கீகரித்து எங்களுக்கும் அரசு உதவ முன்வர வேண்டும்.

சாதாரண நாள்களில் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்த அவ்வளவு எளிதாக அனுமதி வழங்கப்படுவது இல்லை. இதனால் நீதிமன்றம் சென்று நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்று வந்தோம். இந்த நிலையில் கரோனா பெருந்தொற்று கடந்த 2 வருடங்களாக எங்களது தொழிலை சுத்தமாக முடக்கி விட்டது. இதனால் எங்களோடு சோ்ந்து ஒலி, ஒளி அமைப்பாளா்கள், மேடை அமைப்பாளா்கள், வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே எங்களுக்கான உதவிகளைச் செய்ய அரசு முன்வர வேண்டும்.

பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் இசைக்கருவிகளோடு மௌனமாகியிருக்கிறது மேடை மெல்லிசைக் கலைஞா்களின் வாழ்வு. எவ்வித வலியும் இல்லாமல் நம்முள் கலந்து விடும் இசையை வாழ்வாதாரமாக கொண்ட இந்த இசைக் கலைஞா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே இசை ரசிகா்கள் ஒவ்வொருவரது விருப்பமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.