அஞ்சல் வாக்கும் நடைமுறைச் சிக்கல்களும்...

தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், நடந்து செல்ல முடியாதவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த அஞ்சல் வாக்கு முறை தேவையாக இருக்கிறது.
அஞ்சல் வாக்கும் நடைமுறைச் சிக்கல்களும்...
Published on
Updated on
2 min read



சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்கு முறை குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களால் வாக்காளர்களிடையே ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்வதற்காக மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கும் அதிகமான முதியவர்கள், கரோனா பாதிப்புக்குள்ளானோர் உள்ளிட்டோருக்கு அஞ்சல் வாக்குப்பதிவு முறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் இத்திட்டம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் விருப்பமுள்ளவர்கள் மட்டும் அஞ்சல் வாக்களிக்கலாம் என்றும்,  இதற்கு கட்டாயம் எதுவும் இல்லை எனவும் ஆணையம் தெரிவித்து வருகிறது.

என்றாலும், இந்தப் புதிய முறை குறித்து மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கும் அதிகமான முதியவர்களிடையே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவிப்பவர்களிடம் படிவம் 12-டி வழங்கி, அதில் விவரங்களை நிறைவு செய்து, கையொப்பம் பெறுமாறு வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் சில நாள்களாக மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்குச் சென்று அஞ்சல் வாக்குச் செலுத்த விருப்பம் உள்ளதா என வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் அஞ்சல் வாக்கை விரும்பவில்லை என்றும், வாக்குச்சாவடிக்கு நேரடியாகச் சென்று வாக்களிக்க விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏறத்தாழ 13 லட்சம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல, மாற்றுத் திறனாளிகளும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் மாற்றுத் திறனாளிகள் 13,946 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் 45,337 பேரும் என மொத்தம் 59,283 பேர் இருக்கின்றனர். இவர்களில் 1,450-க்கும் மேற்பட்டோர் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள், 80 வயது கடந்த முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு நேரிலேயே சென்று வாக்களிக்கவே விரும்புகின்றனர். 

அதாவது,  இதுவரை 33 சதவீதம் பேர் மட்டுமே அஞ்சல் வாக்களிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அஞ்சல் வாக்கு குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததே இதற்குக் காரணம் என மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பொது நலச் சங்க மாவட்டச் செயலர் ஏ. அய்யாரப்பன் தெரிவித்தது:
தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், நடந்து செல்ல முடியாதவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த அஞ்சல் வாக்கு முறை தேவையாக இருக்கிறது. ஆனால், இந்த அஞ்சல் வாக்கு குறித்து மாற்றுத் திறனாளிகளிடமும்,  80 வயதுக்கும் அதிகமான முதியவர்களிடமும் உரிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. வீடுகளுக்கு படிவம் 12-டி கொண்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் இத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறுவதில்லை. படிவத்தை மட்டும் கொடுத்து கையெழுத்துக் கேட்பதால், பலர் தயக்கம் காட்டுகின்றனர். வாக்குச் சாவடிக்கு நேரிலேயே சென்று வாக்களிப்பதாகக் கூறிவிடுகின்றனர். 

இதுதொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய அளவுக்குப் பயிற்சி அளித்து வீடு,  வீடாகச் சென்று சரியான அளவிலும், நடுநிலையாகவும் செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இத்திட்டம் வெற்றியடைய வாய்ப்புள்ளது என்றார் அய்யாரப்பன்.

இதனிடையே, அஞ்சல் வாக்குக்கு சில அரசியல் கட்சிகளும், மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 'அஞ்சல் வாக்கு குறித்து உரிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கும், 80 வயதைக் கடந்தவர்களுக்கும் அஞ்சல் வாக்கு குறித்து சரியாகப் புரியவில்லை. எனவே, படிவங்களைக் கொண்டு செல்லும் அலுவலர்கள் ஒரு கட்சிக்கு சார்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. 

அலுவலர்கள் கூறுவதை ஏற்று செயல்படும் நிலை ஏற்படும். அதனால், இந்த அஞ்சல் வாக்கு முறையைத் தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும். படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு மட்டும் இந்த அஞ்சல் வாக்கு முறையைச் செயல்படுத்தலாம்' என்றார் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலர் பி.எம். இளங்கோவன்.

ஆனால், மாற்றுத் திறனாளிகள், 80 வயது கடந்த முதியவர்களில் இதுவரை 10 - 15 சதவீதம் வரைதான் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு தற்போதுவரை ஆதரவு குறைவாக இருப்பதால், அஞ்சல் வாக்கு கொண்டுவரப்பட்டதன் நோக்கத்தை அது முழுமையடையச் செய்யுமா என்பது கேள்விக்குறியே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com