65 ஆண்டுகள் கடந்தும் அகலாத அதிர்ச்சி: அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்த துயரம்!

இந்தியாவையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து, 65 ஆண்டுகள் கடந்தும் நெஞ்சை விட்டு அகலாத கோரச் சம்பவம். இன்றும் அந்த சம்பவம் நெஞ்சை கசக்கிப் பிழியத்தான் செய்கிறது. 
1956 ஆம் ஆண்டு அரியலூர் மருதையாற்று வெள்ளத்தில் விபத்துக்குள்ளான சென்னை எழும்பூர்-தூத்துக்குடி விரைவு ரயில்
1956 ஆம் ஆண்டு அரியலூர் மருதையாற்று வெள்ளத்தில் விபத்துக்குள்ளான சென்னை எழும்பூர்-தூத்துக்குடி விரைவு ரயில்
Updated on
2 min read

அரியலூர்: இந்தியாவையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து, 65 ஆண்டுகள் கடந்தும் நெஞ்சை விட்டு அகலாத கோரச் சம்பவம்.

ரயில் பயணம் பாதுகாப்பானது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஆனால், விபத்துகள் அரிதாக இருந்தாலும், அப்படி விபத்துகள் நிகழ்ந்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படுவது ரயில் பயணத்தில்தான். 

அந்த வகையில் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி அரியலூரில் நிகழ்ந்த விபத்து இந்தியாவை உலுக்கியது. மத்திய அமைச்சரே ராஜிநாமா செய்ய வைத்தது இந்த அரியலூர் விபத்துச் சம்பவம்.

விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9.30 மணிக்கு, சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவு ரயில் (வண்டி எண். 603) 13 பெட்டிகளில் 800 பயணிகளை சுமந்து கொண்டு புறப்பட்டது. அப்போது நீராவி என்ஜின் இணைக்கப்பட்ட அந்த ரயில் கொட்டும் மழையிலும் கரும்புகையை கக்கிக் கொண்டு கிளம்பியது.

இந்த ரயிலில் பயணம் செய்த பலருக்கு இதுதான் நமது இறுதிப் பயணம் என்று தெரிந்திருக்கவில்லை. ரயில் சென்ற பாதையெல்லாம் இடைவிடாமல் இடி மின்னலுடன் பலத்த மழை. முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் அயர்ந்து தூங்கினார்கள். பொதுப் பெட்டிகளில், பயணித்தவர்கள் தூக்கமின்றி கண்விழித்த நிலையில் இருந்தனர். 

ரயில் அன்று நள்ளிரவு நேரத்தில் விருத்தாசலம் ரயில் நிலையத்தை அடைந்ததும், ரயிலின் கடைசிப் பெட்டி கழற்றப்பட்டது. அது சேலம் செல்லும் இணைப்பு ரயிலில் மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது. 12 பெட்டிகளுடன், தூத்துக்குடி ரயில் அங்கிருந்து புறப்பட்டது.

அதிகாலை 5.30 மணிக்கு சூரியன் கண் விழிப்பதற்கு முன்பாக ரயில் அரியலூரைத் தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அரியலூர் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலத்தை மூழ்கடித்த நிலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இந்த அபாயகரமான பாலத்தைத்தான் ரயில் கடந்து செல்ல வேண்டும்.

ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால் ரயிலை இயக்கிய ஓட்டுநர் துரைசாமி, ஃபயர்மேன்கள் (நிலக்கரியை எரியவைப்பவர்கள்) முனுசாமி, கோதண்டன் ஆகியோரின் கண்களுக்கு வெள்ளத்தின் அபாய நிலை தெரியவில்லை. வேகமான நீரோட்டத்தால் பாலத்தின் தூண்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

ரயில் என்ஜின் பாலத்தை கடக்க முற்பட்டபோது, தண்டவாளம் ஆட்டம் கண்டது. ரயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேறிச் சென்ற நிலையில் பாரம் தாங்காமல் பாலம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நிலைகுலைந்த ரயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அபயக் குரல் எழுப்பியும், காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை. ரயிலில் உள்ள முதல் 7 பெட்டிகளை வெள்ளம் மூழ்கடித்துவிட்டது.

அதிலும், என்ஜினுக்கு அடுத்த பெட்டி பெண்கள் பெட்டியாக இருந்ததால் அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள்தான் நீருக்கு அடியில் சிக்கிக்கொண்டு மாண்டுபோனார்கள். இந்த கோர சம்பவத்தில் 250 பேர் தண்ணீருக்குள் ஜீவ சமாதி அடைந்தார்கள். விடிந்தும் விடியாததுமாக சம்பவத்தை கேள்விப்பட்டு, அங்கு மீட்புக் குழுவினர் வந்தனர்.

ஆனால் 2 நாள் போராட்டத்துக்குப் பிறகும் 150 சடலங்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து அழுகிய நிலையிலேயே மீட்கப்பட்டன.

ஒரு சில பெட்டிகள் மண்ணுக்குள் புதைந்ததால் தண்ணீர் வடிந்த பிறகு அதே இடத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. கடைசிப் பெட்டியில் இருந்த கார்டுகளான வைத்தியநாதசாமி, ஆறுமுகம் மற்றும் பின்வரிசை பெட்டிகளில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இந்த கோர சம்பவம் இன்றும் பேசப்பட்டு வருகின்றது.

இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அப்போதையை ரயில்வே துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவியை ராஜிநாமா செய்தார். இணை அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த அழகேசன் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டார்.

அந்த விபத்து நடந்து 65 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அதில் இருந்து தப்பியவர்களில் ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக தகவல்கள் உள்ளன. எனினும் வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் பதிவான இந்த கோர நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நெஞ்சை கசக்கிப் பிழியத்தான் செய்கிறது. விபத்தில் மாண்டவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com