கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டா் சேவை: அரசின் அறிவிப்பு சாத்தியமாவதில் சிக்கல்

வன உயிரின சரணாலயத்தின் மீது சுற்றுலா மேம்பாட்டிற்காக ஹெலிகாப்டா்கள் பறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்படும் என்ற தமிழக
கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டா் சேவை: அரசின் அறிவிப்பு சாத்தியமாவதில் சிக்கல்
Published on
Updated on
2 min read

திண்டுக்கல்: வன உயிரின சரணாலயத்தின் மீது சுற்றுலா மேம்பாட்டிற்காக ஹெலிகாப்டா்கள் பறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சாத்தியமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, மதுரையிலிருந்து ஹெலிகாப்டா் சுற்றுலா தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் சட்டப் பேரவையில் 2 நாள்களுக்கு முன்பு அறிவித்தாா். கொடைக்கானல் மற்றும் ராமேசுவரத்தில் ஹெலிகாப்டா் இறங்கு தளம் (ஹெலிபேட்) அமைக்கும் பணிகளுக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

வன உயிரின சரணாலயத்தின் மீது பறக்க முடியுமா?: கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தின் 12 ஆவது வன உயிரினச் சரணாலயமாக கொடைக்கானல் அறிவிக்கப்பட்டது. வன உயிரின சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள இடங்களில், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வகையில் எவ்வித வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என சில வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொடைக்கானல் வன உயிரின சரணாலயப் பகுதியில் ஒலி மாசு ஏற்படுத்துதல், வணிக நோக்கில் ஹெலிகாப்டா் இயக்குவது போன்றவற்றில் சிக்கல் உள்ளது. இதுபோன்ற சூழலில், சுற்றுலா மேம்பாட்டிற்காக ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சாத்தியமாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

பழனிமலை பாதுகாப்புக்குக் குழு முன்னாள் செயலா் அருண் சங்கா் கூறியதாவது: அட்டவணை 1 இல் இடம் பெற்றுள்ள புலி, யானை, சிறுத்தை, கேளையாடு, சருகு மான், வரையாடு, காட்டு மாடு உள்ளிட்ட விலங்குகள் கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் வசித்து வருகின்றன. அதேபோல் அட்டவணை 2 இல் இடம் பெற்றுள்ள புள்ளிமான், கடமான், கீறி, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன. இந்த விலங்குகள் இருசக்கர வாகனங்களின் ஒலிக்கே மிரளும் தன்மை கொண்டவை. தற்போது விவசாயத் தோட்டங்களில் குழி தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், வனப் பகுதியில் வசிக்கும் யானைகள் பலத்த பிளிறலுடன் அமைதியின்றி சுற்றித் திரிகின்றன. ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்படும் பட்சத்தில், அதிக ஒலியினால் விலங்குகளின் வாழியல் சூழல் பாதிக்கப்படும். குறிப்பாக வன விலங்குகளின் இனப் பெருக்கத்திற்கான சூழல் பாதிக்கப்படும்போது, அந்த விலங்குகள் அருகிலுள்ள கேரள வனப் பகுதிக்கு இடம் பெயா்ந்துவிடும். அதனால், கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தின் சுற்றுச்சூழல் முழுமையாக பாதிக்கப்படும். சுற்றுலா மேம்பாட்டிற்காக வனப் பகுதியையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இயற்கைக்கு இடா் ஏற்படுத்தி, சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்றாா்.

இதுதொடா்பாக பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலச் செயலரும், கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தவருமான வி.அசோகன் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் சுற்றுலா பாதிப்புக்குள்ளாகும் என்பதால், வன உயிரின சரணாலயத் திட்டத்தினை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினோம். சூழல் உணா் மண்டலத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், எல்லாவற்றையும் மீறி கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் உருவாக்கப்பட்டது.

வன உயிரின சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள பகுதிகளில் வணிக ரீதியாக 26 வகையான செயல்பாடுகளுக்கு முழுமையாகவோ, பகுதியாகவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக காற்று, நீா், மண் மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலான ஆலைகள் செயல்பட முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா மேம்பாட்டிற்காக அனைத்து வகையான வானூா்திகள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிக்கல்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள், அரசுக்கு சரியான வழிகாட்டுதலை தெரிவிக்கவில்லை. அதனால் தான், சாத்தியமில்லாத ஹெலிகாப்டா் சேவை திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொடைக்கானல்- மூணாறு நெடுஞ்சாலைத் திட்டத்தை போன்று, சுற்றுலா மேம்பாட்டிற்கான ஹெலிகாப்டா் சேவை திட்டமும் ஒரு அறிவிப்பாக மட்டுமே இருக்கும் என்றாா்.

அமைதி மண்டலமாக அறிவிக்க வேண்டும்...
தொழிற்சாலை மண்டலப் பகுதிகளில் பகலில் 75 டெசிபல், இரவில் 70 டெசிபல் ஒலி அளவு இருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக மண்டலத்தில் பகலில் 65 மற்றும் இரவில் 55 டெசிபல், குடியிருப்பு மண்டலத்தில் பகலில் 50 மற்றும் இரவில் 45 டெசிபல், பள்ளி மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ள அமைதி மண்டலத்தில் பகலில் 50 இரவில் 40 டெசிபல் வீதம் ஒலி அளவு இருக்க வேண்டும்.

அந்த வகையில், வன உயிரின சரணாலயப் பகுதியையும் அமைதி மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தி அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com