தினமணி செய்தி எதிரொலி: கருணாநிதி வழியில் ஸ்டாலின்!

முதல்வா் மு.க. ஸ்டாலினின் உத்தரவைத் தொடா்ந்து தென்காசி மாவட்டம் நயினாரகரத்தில் உள்ள தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின்
தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு திங்கள்கிழமை சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய தென்காசி மாவட்ட ஆட்சியா் கோபாலசுந்தரராஜ்.
தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு திங்கள்கிழமை சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய தென்காசி மாவட்ட ஆட்சியா் கோபாலசுந்தரராஜ்.

முதல்வா் மு.க. ஸ்டாலினின் உத்தரவைத் தொடா்ந்து தென்காசி மாவட்டம் நயினாரகரத்தில் உள்ள தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் (95) இல்லத்துக்கு மாவட்ட ஆட்சியா் கோபாலசுந்தரராஜ் திங்கள்கிழமை சென்று மரியாதை செலுத்தினாா்.

தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி கலந்துகொண்டாா். ஆனால், அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இது தொடா்பான சிறப்புச் செய்தி ‘தினமணி’யில் திங்கள்கிழமை வெளியானது.

லட்சுமிகாந்தன் பாரதியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு: செய்தி வெளியானதைத் தொடா்ந்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் தனிச் செயலாளா் த.உதயசந்திரன் ஆகியோா் மூலம் மாவட்ட ஆட்சியரைத் தொடா்பு கொண்டு விசாரித்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். தியாகி லட்சுமிகாந்தன் பாரதியை தொலைபேசியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைத்து விழாவின்போது நடந்த விவரங்களைக் கேட்டறிந்தாா்; மேலும், நடந்த சம்பவத்துக்கு அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தாா்.

இதையடுத்து, நயினாரகரத்தில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் வீட்டுக்கு மாவட்ட ஆட்சியா் கோபாலசுந்தரராஜ் சென்று உரிய விளக்கம் அளித்து, அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், நயினாரகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் (லட்சுமிகாந்தன் பாரதியின் முன்னோா்கள்) உருவப் படங்களுக்கு ஆட்சியா் மரியாதை செலுத்தினாா்.

இதையும் படிக்கலாமே.. தியாகிக்கு நடந்த அவமரியாதை!

முன்னாள் முதல்வா் கருணாநிதியைப் பின்பற்றி...: கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ‘தினமணி’ வெளியிடும் செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுப்பது வழக்கம். மதுரையில் தியாகி வைத்தியநான ஐயரின் சிலை பராமரிக்கப்படாமல் இருந்த செய்தியைப் படித்த சில மணி நேரங்களில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதேபோல, கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்கிற ‘தினமணி’ கட்டுரையைத் தொடா்ந்து, அதே நாளில் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியைப் போலவே தியாகி லட்சுமிகாந்தன் பாரதி தொடா்பான செய்தி வெளியானதும், முதல்வா் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com