25% கட்டணத்தை உயர்த்திய தொலைத்தொடர்பு  நிறுவனங்கள்: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் திடீரென கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இன்றைய வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக கைப்பேசி மாறியுள்ளது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை பி.எஸ்.என்.எல்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்கள் மக்களுக்குத் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களாக உள்ளன.

இதில் தற்போது பி.எஸ்.என்.எல். தவிர மற்ற நிறுவனங்கள் தங்களின் சலுகைக் கட்டணத் தொகையை அதிரடியாக அதிகரித்துள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஒரு நிறுவனம் (ஏர்டெல்) ப்ரீபெய்டு திட்டங்களுக்கான சலுகைக் கட்டணத்தை நவம்பர் 26ஆம் தேதியில் இருந்து 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதன்படி, ரூ.48 ஆக இருந்த அடிப்படை டாப்-அப் திட்டம் ரூ.10 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.58-ஆக உள்ளது. இந்தத் திட்டத்தில் 3 ஜி.பி. வரை டேட்டா வழங்கப்படுகிறது.

அதேபோல, ரூ.98 கட்டணத்தில் 12 ஜிபி வழங்கப்பட்டு வந்த திட்டம், ரூ.20 அதிகரிக்கப்பட்டு ரூ.118 ஆகவும், ரூ.251-இல் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு வந்த திட்டம், ரூ.50 அதிகரிக்கப்பட்டு ரூ.301-ஆகவும் ஆகியுள்ளது. மேலும், அளவற்ற (அன்லிமிடெட்)  வசதியுடன் பேசும் திட்டங்களுக்கான கட்டணங்களும், ஆண்டு முழுவதுக்குமான அளவற்ற பேசும் சேவையும், டேட்டாவுடன் கூடிய திட்டங்களின் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் போஸ்ட்பெய்டு சேவைகளுக்கான கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது, அனைத்து சேவைகளின் கட்டணமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பிரபலமான 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் குறைவான கட்டணத்துடன் சேவை வழங்கி வந்த ரிலையன்ஸ் ஜியோவும் தனது சலுகைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, 28 நாள்களுக்கு, தினசரி 50 இலவச குறுந்தகவல் சேவை, 3 ஜி.பி. டேட்டாவுடன் ரூ.75 க்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை சேவை கட்டணமானது, ரூ. 16 அதிகரித்து ரூ.91 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மற்ற திட்டங்களுக்கான கட்டணங்களையும் அதிகபட்சம் ரூ.480 வரை உயர்த்தியுள்ளது.

 இந்தியாவின் மற்றொரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் (வோடாஃபோன்) ரூ.79 சலுகைக் கட்டணத்தை ரூ.99-ஆக உயர்த்தியுள்ளது. 2 ஜி.பி. டேட்டாவுடன் அளவில்லாத பேசும் வசதியை ரூ.149க்கு வழங்கிய இந்த நிறுவனம், தற்போது, இச்சேவையை  ரூ.179=ஆக உயர்த்தியுள்ளது. அதே போலவே அனைத்து சேவைகளுக்குமான கட்டணங்களையும் அந்நிறுவனம் அதிகபட்சம் ரூ.500 வரை உயர்த்தியுள்ளது.

 கட்டண உயர்வு தொடர்கதையாகுமா? அண்மையில் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி மத்திய அரசுக்கு ரூ.92 ஆயிரத்து 641 கோடி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. அதே நேரம் செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், வோடஃபோன் ரூ.54 ஆயிரம் கோடியும், ஏர்டெல் ரூ.23 ஆயிரம் கோடியும் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளன. அரசுக்குப் பணம் செலுத்துவதுடன் நஷ்டத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏர்டெல்லும் வோடஃபோனும் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர அடுத்து 5ஜி சேவைக்கும் பெரியஅளவிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையடுத்து சந்தை சூழலுக்கு ஏற்ப ஜியோவும் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இலவச சேவை என அதிரடியாக ரிலையன்ஸ் ஜியோ கைப்பேசி சேவை சந்தையில் நுழைந்தது. 

இதனால் பிற நிறுவனங்களும் தங்கள் கட்டண விகிதங்களைக் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டி வந்தது. இந்நிலையில் தற்போது சூழல் முற்றிலும் மாறிவிட்ட நிலையில் கட்டண உயர்வு மீண்டும் தொடங்கவுள்ளது. இனி கட்டண உயர்வுகள் தொடர்கதையாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடித்தட்டு மக்களை அச்சுறுத்தும் கட்டணம்: இது குறித்து, கோவை கன்ஸ்யூமர் காஸ் என்ற நுகர்வோர் அமைப்பின் செயலர் கதிர்மதியோன் கூறும்போது, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அனுமதி பெற்ற பின்பே நிறுவனங்கள் கட்டண உயர்வை  அமல்படுத்தியிருக்கின்றன. தற்போதைய விலைவாசி ஏற்றத்தைக் கொண்டு பார்த்தால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, இழப்புகள், நஷ்டங்களை ஈடு செய்து கொள்ள கட்டணங்களை உயர்த்துவது அவசியமாகிறது.

ஆயினும், ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது வருத்தமளிக்கிறது. இணைய வகுப்புகள், பயிற்சி வகுப்புகள், குழு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய ஆன்ட்ராய்டு கைப்பேசிகள் பெரும் பயனளிப்பதாக உள்ளன. தற்போதைய கட்டண உயர்வு, நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இணையத்துக்கு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் ஒதுக்குவதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படும். ஏழை மக்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாதி கட்டண உயர்வை மட்டும் தற்போது அமல்படுத்திவிட்டு, மீதத்தை அடுத்த ஆண்டு அமல்படுத்தியிருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com