ஊசலாடும் புதுவை காங்கிரஸ் அரசு தப்புமா?

துவையில் ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதுவையில் உச்சகட்ட அரசியல் பரபரப்பு தொடங்கியுள்ளது.
ஊசலாடும் புதுவை காங்கிரஸ் அரசு தப்புமா?


துவையில் ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதுவையில் உச்சகட்ட அரசியல் பரபரப்பு தொடங்கியுள்ளது.

அரசுக்கு சவால்: வடகிழக்கு மாநிலங்கள், மத்திய பிரதேசம், கர்நாடகம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் "ஆபரேஷன் தாமரை' திட்டத்தை தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களுக்குள் செயல்படுத்தி பாஜக வெற்றி பெற்றது. புதுவையில் காங்கிரஸ் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை பாஜக செயல்படுத்துவது காங்கிரஸ் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நெருக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைவதுபோல, புதுவையிலும் கடந்த சில வாரங்களாக அதுபோன்ற காட்சிகள் அரங்கேறி வருகின்றன. காங்கிரஸ் அரசையும், முதல்வர் நாராயணசாமியையும் குறை கூறி ஒவ்வொருவராக தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர்.

ஊசலாட்டம்: அமைச்சர்களாக பதவி வகித்த மல்லாடி கிருஷ்ணா ராவ், நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.-க்களாக இருந்த தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டிவிட்டு பதவி விலகியுள்ளனர். இதனால், பெரும்பான்மைக்குத் தேவையான 15 சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமல் காங்கிரஸ் அரசு ஊசலாட்டத்துடன் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை: இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு விடுவிக்கப்பட்டது புதுவை அரசியலில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள், அதாவது புதுவைக்கு பிரதமர் மோடி வரும் 25-ஆம் தேதி  வருவதற்குள், ஆட்சி கலைந்துவிடும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி...: புதுவை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 14  எம்.எல்.ஏ.-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையில் ஆளுநரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸிடம் புதன்கிழமை அளித்தனர். புதுவைக்கு ராகுல் காந்தி புதன்கிழமை வந்திருந்த சூழலில் இதுபோன்ற நெருக்கடியான அரசியல் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது, அந்தக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே மிகுந்த மனச் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இதுவரை புதுவை முதல்வர் நாராயணசாமி மனதளவில் சோர்வடையவில்லை. மாறாக, எதிர்க்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள், தனது ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது, அரசின் விதிகளுக்குட்பட்டு காங்கிரஸ் செயல்படும் என மிகுந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகிறார்.

அரசு கவிழுமா?: எதிர்க்கட்சிகள் தரப்பில் புதுவை அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான கடிதத்தை அளித்தாலும், புதிய ஆளுநர் பதவியேற்ற பின்னர்தான் இந்தக் கடிதம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போதைக்கு ஆளுநர் கிரண்பேடியால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. புதிய ஆளுநரான (பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன் வியாழக்கிழமை (பிப்.18) காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு அவர் பதவியேற்றால் உடனடியாக இந்தக் கடிதம் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடலாம். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் கால அவகாசத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி ஆளுநர் உத்தரவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால், புதுவையைப் பொருத்தவரை ஏற்கெனவே 3 நாள்களுக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்ட வரலாறும் உள்ளது.

பேரவையில் சம பலம்: புதுவை சட்டப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர்கள், மத்திய அரசின் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆகும். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவி விலகியதுடன், ஒருவர் தகுதி நீக்கமும் செய்யப்பட்டதால், தற்போது அந்தக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 10-ஆகக் குறைந்துள்ளது. மேலும், அந்தக் கட்சிக்கு திமுகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.-க்கள், சுயேச்சை  ஒருவர் என 14 பேரின் ஆதரவு உள்ளது.

இதேபோல, எதிர்க்கட்சிகள் தரப்பில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக  4, பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 14 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சம பலத்தில் (14 பேர்) உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால், எண்ணிக்கையில் அறுதிப் பெரும்பான்மையைத்தான் முதல்வர் நாராயணசாமி நிரூபிக்க வேண்டும்.

இதற்கிடையே, ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்யக்கூடும்  என்ற தகவலும் உள்ளது. அவ்வாறு நடந்தாலோ அல்லது சட்டப்பேரவைக்கு அவர்கள் வருவதைத் தவிர்த்தாலோ அரசு கவிழ வாய்ப்புள்ளது.

அரசு தப்பவும் வாய்ப்பு: அத்தகைய சூழலில், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த கைதேர்ந்த மூத்த அரசியல்வாதியான முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க வாய்ப்புள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது எனக் கருதும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்.எல்.ஏ.-க்களில் சிலர் சட்டப் பேரவைக்கு வருவதைத் தவிர்த்தால், 

முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு தப்பவும் வாய்ப்புள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் தினத்தில்தான் எத்தகைய முடிவுகளை எம்.எல்.ஏ.க்கள் எடுப்பார்கள் என்பது தெரியும்.

தேர்தல் நெருங்குவதால்...: தேர்தலுக்கு நெருக்கமான நேரத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பாஜக ஈடுபடுமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஏனெனில், சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் 2 மாதங்கள்தான் இருக்கின்றன, மேலும், இன்னும் 10 தினங்களுக்குப் பின் எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற சூழலும் உருவாகியுள்ளது.

அனுதாப அலை-எதிர்ப்பு அலை: தேர்தல் நெருக்கத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து ஒரு சில வாரங்களுக்காக புதிய ஆட்சியை உருவாக்குவது அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என பாஜக முயற்சி செய்தால், அது தேர்தல் களத்தில் காங்கிரஸூக்கு அனுதாப அலையையும்,  பாஜகவுக்கு எதிர்ப்பு அலையையும் உருவாக்கக்கூடும்.

எனவே, இதுபோன்ற காலகட்டத்தில் பாஜக மேலிடம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. எந்தத் திசையை நோக்கி புதுவை அரசியல் நகர்கிறது என்பதை இன்னும் ஓரிரு நாள்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com