ஆபாசப் பட வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவர் சிக்கியது எப்படி? - திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்

ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு? 
ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா
ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா

ஆபாச படங்களை சில செயலிகள் மூலம் வெளியிட்டிருப்பதாகப் புகழ்பெற்ற ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த ஆபாச பட வழக்கிற்கும் ராஜ் குந்த்ராவிற்கும் உண்மையில்  என்ன சம்பந்தம்? என்ன தவறு செய்தார் குந்த்ரா?

ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டு என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி காவல்துறையினர் மத் என்ற தீவில் உள்ள ஒரு பங்களாவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் மற்றும்
ஆண்களைக் கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்த குற்றத்தின் பேரில் 5 பேரைக் கைது செய்தனர். இது தொடர்பாக, மும்பை மல்வானி  காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக கெஹனா வசிஷ்ட் என்ற நடிகையைக் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவரை விசாரித்த போது உமேஷ் காமத் என்பவர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து உமேஷ் காமத் என்பவரும் கைது செய்யப்பட்டார். உமேஷ் காமத் என்பவரோ ராஜ் குந்த்ராவின் அலுவலகத்தின் முன்னாள் பணியாளர் என விசாரணையில் தெரிவித்திருக்கிறார். 

உமேஷ் தற்போது இங்கிலாந்தைச் சார்ந்த நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். நடிகை வசிஷிட்டிடம் விடியோக்களைப் பெற்று அவற்றை, தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

இந்த விடியோக்கள் பின்னர் ஹாட் ஷாட்ஸ் என்று கூறப்படும் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் வசிஷ்ட் எடுத்த 8 ஆபாச விடியோக்களை குந்த்ராவின் அலுவலகத்திலிருந்து உமேஷ் பதிவேற்றம்  செய்திருக்கிறார்.

ராஜ் குந்த்ரா சிக்கியது எப்படி? 

ஹாட் ஷாட்ஸ் என்ற இந்தச் செயலியை இங்கிலாந்தைச் சேர்ந்த கென்ரின் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக்  கருதப்படும் பிரதீப் பக்ஷிக்கு, குந்த்ரா விற்றதாகத் தெரிவித்ததன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

காவல்துறையின் விசாரணையில், ஹாட் ஷாட்ஸ் என்ற செயலியில் உள்ள விடியோக்கள் தொடர்பான பணப் பரிமாற்றம் குறித்து விவாதிக்க வாட்ஸ்ஆப் குழு ஒன்றை துவங்கி, அந்த குழுவிற்கு ராஜ் குந்த்ரா தலைவராக இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் வசிஷ்ட் மற்றும் காமத் ஆகியோர் ஹாட் ஷாட்ஸ் செயலிக்காகக் கதைகள் எழுதி, அவற்றை மின்னஞ்சல்களாக ராஜ் குந்த்ரா உள்ளிட்டோருக்கு அனுப்பியிருக்கின்றனர். 

மேலும் ராஜ் குந்த்ராவிற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனமான கெர்னின் நிறுவனத்தில் பங்கு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் ராஜ் குந்த்ரா, பிரதீப் பக்ஷியின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. கெர்னின் நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பக்ஷியின் உறவினரான ராஜ் குந்த்ரா, அவருடைய தொழிலில் கூட்டாளியாகவும் இருந்திருக்கிறார். 

ராஜ் குந்த்ராவின் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுளளது ?

ராஜ் குந்த்ராவின் மீது இந்திய சட்டப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய சட்டப் பிரிவு 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் விளம்பரப்படுத்துதல் அல்லது காட்சிப்படுத்துதல்,  பெண்களைத் தவறாக காட்சிப்படுத்துதல்) போன்ற பிரிவுகளின் கீழ் மால்வானி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ் குந்த்ரா மீதான பிற வழக்குகள்

இது மட்டுமில்லாமல், ராஜ் குந்த்ரா மீது, இணைய தொடர்களில் ஆபாச விடியோக்களை பதிவு செய்துள்ள சில இணையதளங்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் உள்ளது.

இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் குந்த்ரா சம்பந்தப்பட்டுள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெர்லின் சோப்ரா என்ற மாடல் நடிகையின் குற்றச்சாட்டு மூலம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் குந்த்ராவின் மீது  வழக்குப்பதிவு செய்து, அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் குந்த்ரா ஜாமீன் கோரியிருந்தார். 

மேலும், அந்த நிறுவனத்தில் இருந்து தான் வெளியேறிவிட்டதாகவும், இணைய தொடருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் ராஜ் குந்த்ரா கூறியுள்ளார். ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் அடுத்த வாரம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகை சகரிகா ஷோனா சுமன் என்ற நடிகை, தனக்கு ராஜ் குந்த்ரா பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் காமத்திடம் இருந்து அழைப்பு
வந்ததாகவும், அவர் தனக்கு இணைய தொடரில் வாய்ப்பளிப்பதாக தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் விடியோ அழைப்பில் தாம் நிர்வாணமாக இருக்குமாறு கோரப்பட்டதாகவும் ஆனால், அதைத் தாம் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆபாச படத்துக்கும் துணிச்சலான படத்துக்கும் உள்ள வித்தியாசம் 

இந்த வழக்கில் தொடர்புடைய கெஹனா வசிஷ்ட், ''இந்த படங்கள் ஒன்றும் ஆபாச படங்கள் இல்லை. திரைப்படத் தயாரிப்பாளர்களான ஏக்தா கபூர், அனுராக் காஷ்யப், விபு அகர்வால் எடுக்கும் படங்களைப் போன்ற துணிச்சலான படங்கள்தான். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களில் இதைவிட துணிச்சலான படங்கள் உள்ளன. பாலியல்  உணர்வைத் தூண்டும் படங்களுக்கும் ஆபாச படங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் உணர வேண்டும். இந்தப் படங்களை முதலில் பார்த்துவிட்டு, அதன் பிறகு கருத்து தெரிவிக்க வேண்டும். காவல்துறையினர் இதனை தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்'' என்றார். 

நடிகை பூனம் பாண்டேவின் குற்றச்சாட்டு 

ராஜ் குந்த்ரா மீது மோசடி மற்றும் திருட்டு ஆகிய புகார்களைச் செய்துள்ள நடிகை பூனம் பாண்டே, ''என் எண்ணமெல்லாம் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது குழந்தைகள் மீதுதான் உள்ளது. இதனை பெரிதாக்க விரும்பவில்லை. நான் ராஜ் குந்த்ரா மீது திருட்டு மற்றும் மோசடி வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளேன். காவல்துறை மீதும், நீதிமன்றம் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜ் குந்த்ராவுடன், பூனம் பாண்டே ஒப்பந்த அடிப்படையில் சில  செயலிகளுக்காகப் படங்கள் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்  அவர்களது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையிலும், பூனம் பாண்டேவின் படங்களை ராஜ் குந்த்ரா தொடர்ந்து பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

ராஜ் குந்த்ரா சம்பந்தப்பட்டிருப்பது ஆபாச படங்களா, துணிச்சலான படங்களா, அனுமதிக்கத் தக்கவைதானா, சுருக்கமாக, நல்லவரா, கெட்டவரா... விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில்தான் தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com