ராசியில்லாத முதல்வர் நாற்காலி: எடியூரப்பாவின் வரலாறு கூறும் உண்மை!

ராஜிநாமா அறிவிப்பையொட்டி வெள்ளம், கரோனா இடர்களை அக்னிப் பரீட்சை எனக் குறிப்பிட்ட எடியூரப்பா, முதல்வர் பதவியை வகிப்பதே அக்னிப் பரீட்சை என்பதை மட்டும் ஏனோ உணர மறந்துவிட்டார்.
ராசியில்லாத முதல்வர் நாற்காலி: எடியூரப்பாவின் வரலாறு கூறும் உண்மை!

ராஜிநாமா அறிவிப்பையொட்டி வெள்ளம், கரோனா இடர்களை அக்னிப் பரீட்சை எனக் குறிப்பிட்ட எடியூரப்பா, முதல்வர் பதவியை வகிப்பதே அக்னிப் பரீட்சை என்பதை மட்டும் ஏனோ உணர மறந்துவிட்டார்.

கர்நாடக முதல்வராக பி.எஸ். எடியூரப்பா 4 முறை முதல்வர் பதவி வகித்தும், ஒருமுறைகூட அவரால் பதவிக்காலம் முழுவதுமாக முதல்வர் பதவியில் நீடிக்க முடியவில்லை. முதல்வர் பதவியில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த  நிலையில் அவர் இன்று (திங்கள்கிழமை) ராஜிநாமா செய்தார்.

கர்நாடக அரசியல் வரலாறு எப்போதுமே பல நாடகங்களை உள்ளடக்கியது. குறிப்பாக பாஜக சார்பில் ஒருவர்கூட முழுமையாக 5 ஆண்டு காலம் முதல்வர் பதவியில் இருந்ததில்லை. இதில் பலிகடா ஆவது ஒவ்வொரு முறையும் எடியூரப்பாதான்.

2006-இல் குமாரசாமி அடித்த அடுத்தடுத்த 'பல்டி'கள்

2004 பேரவைத் தேர்தலில் திரிசங்கு சட்டப்பேரவை அமைந்தது. பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 58 இடங்களிலும் வெற்றி பெற்றன. நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அமைத்தது.

ஆனால், 2006-இல் 40 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி  பாஜகவுடன் கைகோர்த்தார் குமாரசாமி. இதனால், காங்கிரஸ் ஆட்சி  கவிழ்ந்தது.

இந்த ஆட்சியும் பெரும் உடன்பாட்டுக்குப் பிறகு அமைந்தது. முதல் 20 மாதங்கள் குமாரசாமி முதல்வராகவும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா முதல்வராகவும் அமரும் வகையில் இணக்கம் ஏற்பட்டது.

20 மாத கால ஆட்சி நிறைவடைந்தவுடன் மீண்டும் பல்டி அடித்தார் குமாரசாமி. உடன்பாட்டின்படி அடுத்த 20 மாதங்களை எடியூரப்பாவிடம் ஒப்படைக்க குமாரசாமிக்கு மனம் வரவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இதற்கு ஒப்புக்கொண்டார் குமாரசாமி.

இதன் பிறகே, எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அவர் முதல்வராகப் பதவியேற்பது இதுவே முதன்முறை. ஆனால், அவரை 7 நாள்களுக்குகூட தாக்குப்பிடிக்க விடவில்லை குமாரசாமி. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடியூரப்பா அரசுக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், 7 நாள்கள் மட்டுமே எடியூரப்பாவால் முதல்வர் நாற்காலியில் அமர முடிந்தது. ஆட்சி கவிழ்ந்தது.

இம்முறை எடியூரப்பாவின் வில்லன் சுரங்க ஊழல் குற்றச்சாட்டு

2008 பேரவைத் தேர்தலில் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாக இருந்தன. இதையடுத்து, 6 சுயேச்சைகளில் 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அவர்களது ஆதரவுடன் முதல்வரானார் எடியூரப்பா. இம்முறை எடியூரப்பாவுக்கு சுரங்க ஊழல் குற்றச்சாட்டு சிக்கலை உண்டாக்கியது.

இதன் விளைவாக கட்சி மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தினால் 38 மாதங்கள் முதல்வர் பதவியிலிருந்த அவர் ராஜிநாமா செய்தார்.

மீண்டும் திரிசங்கு சட்டப்பேரவை

2018 பேரவைத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் சாதகமின்றி அமைந்தன. பாஜக  104 இடங்களிலும், காங்கிரஸ் 74 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிறகு, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக காங்கிரஸும், மஜதவும் கைகோர்த்தன.

ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு 9 இடங்கள் குறைவாக இருந்தபோதிலும், மே 17-இல் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார். அப்போதைய கர்நாடக ஆளுநர், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கினார். குதிரை பேரம் நடத்துவதற்காகவே இந்த அவகாசம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின.
 
எடியூரப்பா பதவியேற்பை எதிர்த்து காங்கிரஸ் - மஜத கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையிட்டது. இதன் விசாரணை நள்ளிரவு 1.45 மணிக்கு நடந்ததெல்லாம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெரும்பான்மையை நிரூபிக்க மே 19-ம் தேதி பேரவை கூடியது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே 19-ம் தேதி மாலை எடியூரப்பா ராஜிநாமா செய்தார்.

இந்த முறை, அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தது வெறும் 3 நாள்கள் மட்டுமே.

மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்திய எடியூரப்பா

காங்கிரஸ்-மஜத கூட்டணியில் குமாரசாமி முதல்வராகப் பதவி வகித்தார். இந்த ஆட்சி 14 மாதங்கள் நீடித்த நிலையில், காங்கிரஸிலிருந்து 12 எம்எல்ஏ-க்கள், மஜதவிலிருந்து 3 எம்எல்ஏ-க்கள் பேரவைத் தலைவரிடம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்தனர்.

இதனால், கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காங்கிரஸ் தலைவர்களும், மஜத தலைவர்களும் எத்தனையோ முயற்சி செய்தும் ராஜிநாமா செய்த அதிருப்தி எம்எல்ஏ-க்களை அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் குமாரசாமியால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஜூலை 23, 2019-இல் குமாரசாமி ராஜிநாமா செய்தார்.

இதன் பிறகு 106 பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜூலை 26-இல் எடியூரப்பா 4-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். 

காங்கிரஸ் மற்றும் மஜதவிலிருந்து ராஜிநாமா செய்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டனர். 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ், மஜதவிலிருந்து வந்து சேர்ந்த 13 பேரை வேட்பாளர்களாக அறிவித்தது பாஜக. முடிவில் 15-இல் 12 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனால், எடியூரப்பா ஆட்சிக்கு அப்போது எவ்வித சிக்கலும் எழவில்லை.

வில்லனாக அமைந்த உள்கட்சிப் பூசல்

எடியூரப்பா ஒன்றரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்த பிறகு கட்சியிலேயே சில எதிர்ப்புக் குரல்கள் எழுத் தொடங்கின. இதனால், நீண்ட நாள்களாகவே அவரது முதல்வர் பதவி ஊசலாடி வந்தது.

எடியூரப்பாவே ஆட்சி நிறைவடையும் வரை முழுமையாக முதல்வர் பதவியில் நீடிப்பார் என மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் தெரிவித்தார். கர்நாடக பாஜகவில் எந்தப் பிரச்னையும் இல்லை என தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இருந்தபோதிலும், இந்தப் பிரச்னை ஓய்ந்ததாக இல்லை.

மீண்டும் ராஜிநாமா

இதன் நீட்சியாக முதல்வர் பதவியில் இன்றுடன் (திங்கள்கிழமை) இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த எடியூரப்பா ராஜிநாமா செய்துள்ளார்.

ராஜிநாமா அறிவிப்பையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு வெள்ளம் மற்றும் கரோனா இடர்பாடுகளைக் குறிப்பிட்டு இரண்டு ஆண்டுகால ஆட்சியை அக்னிப் பரீட்சை என்று எடியூரப்பா பேசினார். 

4 முறை முதல்வர் பதவியை வகித்தும் ஒருமுறைகூட முழுமையாக பதவியில் இருக்க முடியாமல் போவதை எண்ணி, முதல்வர் பதவியை வகிப்பதே அக்னிப் பரீட்சை என்பதை எடியூரப்பா உணர்ந்திருந்தால் ஒருமுறையாவது முழுமையாக ஆட்சியில் இருந்திருப்பாரோ என்னவோ...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com