யாஷிகா ஆனந்த்களும் சனிக்கிழமை இரவுகளும்

மது வகைகளைக் குடித்துவிட்டும் போதைப் பொருள்களைப் பயன்படுத்திய நிலையிலும் கார்களிலேயே கூத்தடித்துக்கொண்டும்  எவ்வித ஒழுங்குமின்றி கார்களைச் செலுத்துவதால்தான் எண்ணற்ற விபத்துகள் நேரிடுகின்றன.
யாஷிகா ஆனந்த்களும் சனிக்கிழமை இரவுகளும்

நடிகைகள், நடிகர்கள் மட்டுமல்ல, எவரொருவரும் சனிக்கிழமை இரவுகளைக் கொண்டாடுவதில் யாருக்கும் எந்தவொரு ஆட்சேபனையும் இருக்க முடியாது,  இருக்கவும் முடியாது, எல்லாமும் அவரவரின் தனிப்பட்ட உரிமை.

ஆனால்... இவர்களின் கொண்டாட்டங்கள் மக்களைப் பாதிக்கும்போது?  நிச்சயம் அரசு அமைப்புகள் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்திருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

திரைப்பட நடிகை மட்டுமல்ல, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  பிக்பாஸ் - சின்னத் திரை நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர் யாஷிகா ஆனந்த்.

21 வயதான யாஷிகா ஆனந்த்தை டிவிட்டரில் 2.72  லட்சம் பேர்  பின்தொடருகின்றனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 25 லட்சத்து 49 ஆயிரம் பேர் பின்தொடருகின்றனர் என்றால் செல்வாக்கைப்  பார்த்துக்கொள்ளலாம். 

சமூக ஊடகங்களிலும் முனைப்பாக இயங்குவதுடன் தன்னுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்த யாஷிகா ஆனந்த்தான், சனிக்கிழமை நள்ளிரவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம்  அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் நேரிட்ட சாலை விபத்தில் - அதாவது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின்  நடுவிலுள்ள தடுப்புச் சுவரில் மோதி நிலைகுலைந்து கவிழ்ந்ததில் - படுகாயமுற்றிருக்கிறார். அவருடன் காரில் வந்த தோழி வள்ளிசெட்டி பவானி படுகாயமுற்று மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இவர்களுடன் காரில் சையத், ஆமிர் என்ற இரு ஆண் நண்பர்களும்  இருந்திருக்கின்றனர். இவர்கள் யார், எவர் என்பது பற்றிய எவ்வித  விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. இருவருமே பெரிய காயங்களின்றித்  தப்பிவிட்டதாகவும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய இவர்களுடைய கார், மேற்பகுதி திறக்கும் வசதியைக்  கொண்டது என்றும் காரின் மேற்பகுதியில் இருந்தவாறு யாஷிகாவின் தோழி பவானி நடனமாடிக் கொண்டுவந்ததாகவும்  அப்போதுதான் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த தோழி பவானி, ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்றும் பிரிட்டனில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவந்த இவர்,  நாடு திரும்பி சில நாள்களுக்கு முன்னர்தான் யாஷிகாவைப் பார்க்க சென்னை வந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து நேரிட்ட காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைச் செலுத்திய நடிகை யாஷிகா மது  அருந்தியிருந்தாரா, மற்றவர்கள் மது அருந்தியிருந்தனரா என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. யாஷிகாவின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் நடந்ததாலோ என்னவோ, நல்லவேளையாக இந்த விபத்தில் பொதுமக்களில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

ஆனால், கிழக்குக் கடற்கரைச் சாலையில் இத்தகைய விபத்துகள் நடப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை என்றும் நடிகர், நடிகைகள் அல்லது பெரும்புள்ளிகள் சம்பந்தப்படும்போது மட்டும்தான் விபத்துகள் பற்றி வெளியே தெரிய வருகிறது என்றும் இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

விபத்துகள் நடக்கும்போது, புதுச்சேரி சென்றுவிட்டுத் திரும்பிவரும்போது எனக் குறிப்பிட்டாலும் (யாஷிகாவும் நண்பர்களும்கூட புதுச்சேரி  சென்றுவிட்டுதான் திரும்பிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது)  பெரும்பாலும் இவர்களில் பலர் புதுச்சேரிக்கெல்லாம் செல்வதில்லை. இந்தப் பகுதியில்தான் எங்கேயாவது தங்கியிருந்துவிட்டுத் திரும்புகின்றனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பெயர் மாற்றிக் கேளிக்கைக் கடற்கரைச் சாலை என்றே சூட்டிவிடலாம்.  சென்னைப் புறநகர்ப் பகுதியில் தொடங்கி, சாலை நெடுகிலும் ஏராளமான ஓய்வு விடுதிகள் (ரிசார்ட்கள்). இவற்றில் 80  சதவிகிதத்துக்கும் மேற்பட்டவற்றில் வார இறுதி நாள்களில் மட்டும்தான் ஆள் நடமாட்டத்தையே பார்க்க முடியும்.

சாதாரணமாக வார இறுதியில் ஆண்களும் பெண்களுமாக கூட்டங்கூட்டமாக இங்கே குவிகின்றனர். கரோனா  காரணமாக விடுதிகள் மூடப்பட்டுக் கிடந்ததால் கொஞ்ச காலம் கூட்டம் குறைந்திருந்தது. இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

கரோனா காலத்தையொட்டி, வீட்டிலிருந்தபடியே வேலை என்று மாறியதால், இந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்னமும் பூட்டிக்கிடக்கின்றன. இதனாலும்  கூட்டம் குறைந்திருக்கிறது.  இவர்களும் திரும்பிவிட்டால் கூட்டம் சேர்ந்துவிடுவார்கள்.

கேளிக்கைச் சாலையையொட்டியுள்ள விடுதிகள் மட்டுமின்றி  நூற்றுக்கணக்கான வீடுகளும்கூட வார இறுதி நாள் கொண்டாட்டங்களுக்குப்  பயன்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகள்  சென்றுவிட்ட பணக்காரர்கள் பலர் இந்தப் பகுதியில் வீடுகளை வாங்கிக் காவலர்களைப் பணிக்கு அமர்த்திவைத்திருக்கின்றனர். சென்னையில் இருக்கும் வசதியான பலரும்கூட இங்கே வீடுகளை வைத்திருக்கின்றனர்.

இந்த வீடுகளில் பெரும்பாலானவை தனிப்பட்ட விருந்துகளுக்காகவும் கொண்டாட்டங்களுக்காகவும் - உரிமையாளர்களுக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் - வாடகைக்கு விடப்படுகின்றன எனக் கூறப்படுகிறது. கார்கள் வந்துசெல்வதைத் தவிர இத்தகைய வீடுகளில் நடப்பவை பற்றி யாருக்கும் எதுவும் தெரிய வருவதில்லை, கொலை போன்ற குற்றங்கள் நடைபெறும் வரை.

இந்தக் கொண்டாட்டங்களில் பெரும்பாலானவை, மது மற்றும்  மாதுகளுடன்தான் நடைபெறுகின்றன என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். யார் மறுத்தாலும் இந்தப் பகுதி மக்கள் மறுக்க மாட்டார்கள்.

இவர்கள் கட்டடங்களுக்கு உள்ளே இருக்கும்வரை வெளியே பிரச்சினை இல்லை. வெளியே வரும்போதும் சாலைகளில் வாகனங்களைச் செலுத்திச் செல்லும்போதும்தான் பெருந்தொல்லைகள் விளைகின்றன.

மது வகைகளைக் குடித்துவிட்டும் போதைப் பொருள்களைப் பயன்படுத்திய நிலையிலும் கார்களிலேயே கூத்தடித்துக்கொண்டும்  எவ்வித ஒழுங்குமின்றி கார்களைச் செலுத்துவதால்தான் எண்ணற்ற விபத்துகள் நேரிடுகின்றன.

சென்னையிலிருந்து மாமல்லபுரத்தின் நுழைவையொட்டியுள்ள பூஞ்சேரி வரை சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால்,  மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரையிலும் கேமராக்கள் இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தொடர்ச்சியாகக் கேளிக்கைச் சாலையில் வாகன விபத்துகள் நேரிடுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் பெரும்புள்ளிகளாக  இல்லாதபட்சத்தில், உயிரிழப்புகள் எதுவும் நேரிடாதபட்சத்தில்  விபத்துகளைப் பற்றிய தகவல்களே வெளியே தெரிவதில்லை.

விபத்துகளில் சம்பந்தப்படுவோர் பெரும்பாலும் பணக்காரர்களாக இருப்பதால், காசு கொடுத்தும் கட்டப் பஞ்சாயத்து செய்தும் ஆன் தி ஸ்பாட் மிக எளிதாகத் தீர்த்துக்கொள்ளப்படுகின்றன.

இவற்றைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பல நேரங்களில் இந்தக் கேளிக்கைக் கொண்டாட்டக் குடிகாரர்கள் சாலையில் யாரையேனும் அடித்துப்போட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இறந்தே போனாலும்கூட அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகத்தான் வழக்கு. பாதிக்கப்பட்டவர்களால் உரிய இழப்பீடுகூட பெற முடிவதில்லை.

இந்தச் சாலையில் வார இறுதி நாள்களில் பிடிபடுவோரில் பலரும், ஏதேனும் ஒரு அரசியல்வாதியின் பெயரையோ, அல்லது அரசு, காவல் அதிகாரிகளின் பெயரையோ கூறுகிறார்கள். என்னதான் செய்வதெனத் தெரிவதில்லை என்று புகையும் காவல்துறையினரும் இருக்கின்றனர்.

வார இறுதி நாள் கொண்டாட்டங்கள் எப்படி நடந்தாலும் சரி, சராசரி மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற, உண்மையிலேயே இரும்புக்கரம் கொண்டு அடக்குவது மட்டுமே இறுதித் தீர்வு என எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.

இல்லாதவரைக்கும் கேளிக்கைக் கடற்கரைச் சாலையில் யாஷிகா ஆனந்த்களும் சனிக்கிழமை இரவுகளும் தொடரத்தான் செய்யும், எண்ணற்ற பலிகளுடன்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com