விசைத்தறிகள் முடக்கம்: தினசரி ரூ.150 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிப்பு

இரண்டு மாத காலமாக விசைத்தறிகள் இயங்காததால் தமிழகத்தில் தினமும் ரூ.150 கோடி அளவுக்கு துணி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விசைத்தறிகள் முடக்கம்: தினசரி ரூ.150 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிப்பு


ஈரோடு: இரண்டு மாத காலமாக விசைத்தறிகள் இயங்காததால் தமிழகத்தில் தினமும் ரூ.150 கோடி அளவுக்கு துணி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கணிசமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாக விசைத்தறி தொழில் விளங்கி வருகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஜவுளிச் சந்தைக்குத் தேவையான சேலைகள், வேட்டிகள், துண்டுகளை இந்த மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் நெய்து கொடுக்கின்றனர். பலர் சிறு முதலீட்டில் வீட்டிலேயே இரண்டு விசைத்தறி இயந்திரங்களை நிறுவி சுயதொழிலாக செய்து வருகின்றனர். இன்னும் பலர் விசைத்தறிக் கூடங்களில் தினசரி கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். 

 கரோனா பொதுமுடக்கம் ஜாப் ஒர்க் அடிப்படையில் சேலை, துண்டு, வேஷ்டி நெய்து கொடுக்கும் சிறு விசைத்தறியாளர்களை மிகக் கடுமையாகப் புரட்டி எடுத்திருக்கிறது. 

8 லட்சம் விசைத்தறிகள் - 10 லட்சம்  ​நெசவாளர்கள்: தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் 8 லட்சம் விசைத்தறி மூலம் நேரடியாக 10 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் பணியாற்றுகின்றனர். தினமும் ரூ.150 கோடி அளவுக்கு 6.5 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. வாரத்துக்கு 45 கோடி மீட்டர் துணி உற்பத்தியாவதால் ஒரு நெசவுத் தொழிலாளிக்கு வாரம் ரூ.3,000 வரை வருவாய் கிடைக்கும்.  இந்நிலையில் கரோனா காரணமாக விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கி தினமும் ரூ.150 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  

விசைத்தறியில் தமிழகத்தில் உற்பத்தியாகும் துணிகள் தில்லி, மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு பிராசஸிங், டையிங், பிரிண்டிங், ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இப்பணி பல மாநிலங்களை மையமாகக் கொண்டு நடைபெறும். 

கரோனா முதல் அலையில் மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி தேசிய அளவில் பொதுமுடக்கம் அறிவித்தது. ஜூன் மாதம் தளர்வு அறிவித்து விசைத்தறிகள் இயங்கின. இந்த ஆண்டு வடமாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவித்தபோது, தமிழகத்தில் பொதுமுடக்கம் இன்றி விசைத்தறிகள் செயல்பட்டன. இதனால் துணிகளை வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி விலை சரிந்தது.

இரண்டாவது ஆண்டாக தொழில் முடக்கம்:  தற்போது பல வடமாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் 2 மாதங்களாகத் துணிகள் தேங்கியுள்ளன. தமிழகத்தில் துணி உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு 2 மாதங்களாக 30 சதவீத துணிகள் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. 

தற்போதைய பாதிப்பை ஈடுகட்டுவதற்கும், தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் விசைத்தறி உற்பத்தி துவங்கினாலும், பாதி அளவே தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியும். அவர்கள் வாழ்வாதாரம் காக்க மட்டுமே பணியைத் தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முழு உற்பத்தியைத் துவங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும். 

மத்திய, மாநில அரசுகள் சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வட்டியில்லா கடனாக குறைந்தபட்சம் ரூ.15,000 வழங்க வேண்டும். அப்போதுதான் பாவு நூல் வாங்கி தொழிலை ஆரம்பிக்க முடியும் என்கின்றனர் விசைத்தறி உரிமையாளர்கள். 

அரசு உதவி எதிர்பார்ப்பு: இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநில நிர்வாகி கந்தவேல் கூறியதாவது:

புயல், வெள்ளம் போன்ற பேரிடர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை வதைத்தாலும், இன்னொரு பகுதி அத்துயரில் இருந்து விடுபட்டிருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பேரிடரற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து நிவாரணம் கோர முடியும். ஆனால், கரோனாவால் ஒட்டுமொத்த தமிழகமும் கடந்த ஓராண்டாக சிக்கலில் தவித்து வருகிறது.  
தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் விசைத்தறி தொழில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள கந்து வட்டிக்கு கடன் வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

விசைத்தறி நெசவாளர்களை மீட்டெடுக்க அமைப்புசாரா நலவாரியம் மூலம் கடந்த ஆண்டைப்போல, அரசு ரூ.2,000 உதவித் தொகை வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்கும் மேல் வேலை இல்லாததால், தொழில் செய்ய வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது.  

விசைத்தறி தொழிலையும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, தொழில் மேம்பாட்டுக்காக வாங்கிய கடனுக்கு குறைந்தபட்சம் வட்டித் தள்ளுபடி சலுகையையாவது அரசு வழங்க வேண்டும். தவிர நெசவாளர்களுக்குப் பொருளாதார உதவிகள், மானியம் தொடர்பான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com