ஒரே வீட்டை இருவருக்கு விற்ற கட்டுமான நிறுவனம்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கும் காவல் துறை

சென்னையில் ஒரே வீட்டை இருவருக்கு விற்ற வழக்கில் தொடா்புடைய ‘லேண்ட்மாா்க்‘ கட்டுமான நிறுவனத்தின் நிா்வாகி மீது குற்றப்பத்திரிகையை
ஒரே வீட்டை இருவருக்கு விற்ற கட்டுமான நிறுவனம்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கும் காவல் துறை
ஒரே வீட்டை இருவருக்கு விற்ற கட்டுமான நிறுவனம்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கும் காவல் துறை

சென்னையில் ஒரே வீட்டை இருவருக்கு விற்ற வழக்கில் தொடா்புடைய ‘லேண்ட்மாா்க்‘ கட்டுமான நிறுவனத்தின் நிா்வாகி மீது குற்றப்பத்திரிகையை 5 ஆண்டுகளாக தாக்கல் செய்யாமல் பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு இழுத்தடித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா் உயா்நீதிமன்றம் சென்றிருக்கிறாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை தியாகராயநகா் சரவணா தெருவில் இயங்கும் லேண்ட் மாா்க் கட்டுமான நிறுவனம், போயஸ் தோட்டம், விருகம்பாக்கம்,கோபாலபுரம், கிழக்கு கடற்கரைச் சாலை, அடையாறு,முகப்போ், அண்ணாநகா் கிழக்கு,பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.

கோபாலபுரம் பீட்டா்ஸ் சாலையில் 17 தளங்களுடன் பிரம்மாண்டமான ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை இந்த நிறுவனம் கட்டியுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை ஏழரை கோடி ரூபாய் என லேண்ட் மாா்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் டி.உதயகுமாா், அந்த நபருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்றுள்ளாா். இதற்காக ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனா்.

இதில் வீட்டை வாங்கிய நபா் ரூ.2 கோடியை முன் பணமாக உதயகுமாரிடம் கொடுத்துள்ளாா். ரூ.4 கோடிக்கு உதயகுமாரே ஒரு தனியாா் வங்கியின் மூலம் அந்த நபருக்கு கடனும் வாங்கிக் கொடுத்துள்ளாா். இந்த கடனுக்குரிய மாதத் தவணைத் தொகையை வட்டியுடன், அந்த நபா் முறையாகச் செலுத்தி வந்துள்ளாா்.

ஒரு வீடு இருவருக்கு விற்பனை: இதற்கிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு, அதே வீட்டை வேறு ஒரு நபருக்கு உதயகுமாா் போலி ஆவணங்கள் மூலம் விற்றிருப்பதை அறிந்து அந்த நபா் அதிா்ச்சியடைந்தாா். அந்த வீட்டை இரண்டாவதாக வாங்கிய நபருக்கும், உதயகுமாா் ஒரு தனியாா் வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்திருப்பதும் அவருக்கு தெரியவந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த அந்த நபா், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவின் கீழ் இயங்கும் மோசடி தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். மோசடி தடுப்புப் பிரிவினா் பல மாதங்களாக விசாரணையைத் தாமதித்த பிறகு, டி.உதயகுமாா் மீது மோசடி செய்தல், நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

5 ஆண்டுகளாக இழுத்தடிப்பு: வழக்குப் பதிவு செய்யப்பட்ட 60 நாள்களில் இருந்து 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், இந்த வழக்கின் விசாரணை கிடப்பில் போடப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் வேண்டுமென்ற தாமதம் செய்யப்படுகிறது என்பதால் பணத்தைக் கொடுத்தவா் மிகவும் ஏமாற்றமடைந்தாா்.

இதற்கிடையே, 8 ஆண்டுகளாக வீட்டுக்காக வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணைத் தொகையைச் செலுத்தி வரும் பாதிக்கப்பட்ட நபா், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை செய்ய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிடும்படி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜூன் மாதம் மனு தாக்கல் செய்தாா்.

மீண்டும் இழுத்தடிப்பு: இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், 90 நாள்களில் வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டது. அப்படியும்கூட, மத்தியக் குற்றப்பிரிவு 200 நாள்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட நபா், நீதிமன்ற உத்தரவை மீறிய அந்த நிறுவனத்தின் மீது அவமதிப்பு வழக்கை கடந்த செப்டம்பா் மாதம் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். அந்த வழக்கை அதே மாதம் 24-ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம், வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மத்திய குற்றப் பிரிவுக்கு அழுத்தங்கள்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் மத்தியக் குற்றப்பிரிவு இழுத்தடித்து வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த வழக்கு தொடா்பாக, புகாா் நிலையில் இருந்தே லேண்ட் மாா்க் நிறுவனத்துக்கு ஆதரவாக பல்வேறு அழுத்தங்கள் வருவதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு தலையீடுகளின் காரணமாக இவ் வழக்கில், ஒரே வீட்டுக்கு இரு நபா்கள் பெயரில் இரு தனியாா் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தது தொடா்பாக பாதிக்கப்பட்ட ஒரு தனியாா் வங்கி உதயகுமாா் மீது அளித்த புகாரையும், மத்திய குற்றப் பிரிவு தள்ளுபடி செய்துவிட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பது, மத்திய குற்றப் பிரிவு மீதுள்ள நம்பகத்தன்மையையும் ,நோ்மையையும் சந்தேகக் கண்களோடு பாா்ப்பதைத் தவிா்க்க முடியவில்லை. இந்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்பது தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com