ஆப்கனில் மீண்டும் ஊடுருவுகிறதா தலிபான்களின் பிற்போக்குத்தன்மை?

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் 1990-களில் கடைபிடித்து வந்த பிற்போக்குத்தனமான சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் 1990-களில் கடைபிடித்து வந்த பிற்போக்குத்தனமான சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நேட்டோ கூட்டுப்படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு அமெரிக்கா - தலிபான்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனது படைகளை திரும்பப் பெற அமெரிக்க ஒப்புக்கொண்டு 31 ஆகஸ்ட் 2021-ஐ இறுதி நாளாக நிர்ணயம் செய்து நேட்டோ கூட்டுப் படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது.

அதே சமயத்தில், ஆப்கனின் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றி அதிபர் மாளிகையையும் ஆட்சி அதிகாரத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டனர்.

இதையடுத்து, தலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் ஆட்சியில் கடைபிடித்து வந்த பிற்போக்குத்தனமான சட்டங்களை மீண்டும் கொண்டு வந்துவிடுவார்கள் என எண்ணி ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேற காபூல் விமான நிலையங்களில் அலைமோதினர். பலர் அண்டை நாடுகளுக்குள் நடந்தே சென்றனர்.

பொதுவாக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஷரியத் சட்டம் என்ற திருக்குர்ஆன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சியை நடத்துவார்கள். உதாரணமாக, ஒருவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நாம் உட்கார்ந்துவிட்டோம், சிறிது நேரத்தில் அங்கே ஏற்கனவே உட்கார்ந்து இருந்தவர் நம்மை எழ சொன்னால் அந்த இடத்தை விட்டுகொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து திருடினால் கையை வெட்ட வேண்டும் என்பது வரை அச்சட்டத்தில் உள்ளன.

ஆனால், 1996-இல் ஆப்கனை ஆட்சி செய்த தலிபான்கள் ஷரியத் சட்டத்தில் சொல்லப்பட்டதுடன் வேறு சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர். 

1996 தலிபான்கள் ஆட்சியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில..

1996 முதல் 2001 வரை தலிபான்களின் ஆட்சி காலத்தில் சட்டங்களை மீறுபவர்களுக்கு பொது இடங்களில் சாட்டை அடி, கல்லால் அடிப்பது, தூக்கிலிடுவது, திருடினால் கையை வெட்டுவது போன்ற தண்டனைகள் அளிக்கப்பட்டு வந்தன.

1. ஆண்கள் தாடி வளர்ப்பதும் பெண்கள் முழு பர்தா அணிவதும் கட்டாயம்
2.இசைக்குத் தடை; ஆடியோ மற்றும் விடியோ பார்க்கும் வசதி கொண்ட போன்களுக்கு தடை
3. 8 வயதுக்கு மேல் பெண்கள் படிக்கத் தடை; பணிக்குச் செல்ல தடை
4. ஜீன்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆடைகளுக்கு தடை
5. மேற்கத்திய பழக்கவழக்கங்களான கைத்தட்டுதல் உள்ளிட்டவைக்கு தடை
6. பெண்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே வெளியே வரவேண்டும்
7. பெண்களை புகைப்படம் எடுப்பதற்கு தடை
8. புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளில் பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவதற்கு தடை
9. அழகு சாதண பொருள்களுக்கு தடை
10. பெண்கள் சத்தமாக பேசுவதற்கு, சிரிப்பதற்கு, பால்கனியில் நிற்பதற்கு தடை

இன்னும் பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் தங்கள் ஆட்சியில் கடைபிடித்து வந்தனர். 

இந்த நிலையில், தற்போது தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், கடந்த காலங்களில் நடந்ததை போல கடுமையான சட்டங்களை கொண்டு ஆட்சியை நடத்த மாட்டோம். பெண்கள் பணிகளுக்கு செல்லலாம். ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் தற்போது நடப்பதோ வேறு. மாணவர்கள், மாணவிகள் ஒரே வகுப்பறையில் அமர்ந்து படிக்கக்கூடாது, பர்தா அணியாமல் வெளியே வரக்கூடாது என மெல்ல மெல்ல அவர்களின் பிற்போக்குத்தன்மையை கொண்டு வரத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, பால்க் மாவட்டத்தைச் சேர்ந்த நசானீன் (வயது 21) என்பவரை கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இடைமறித்த தலிபான்கள் பர்தா அணிய வற்புறுத்தியுள்ளனர். இதனை அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த தலிபான்கள் அவரை சுட்டுக் கொன்றனர். 

இந்த சம்பவம் ஒன்றே தலிபான்களின் பிற்போக்குத்தன்மை மாறாததை நிரூபிக்கின்றது.

தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்படும் என்பதால் உலக நாடுகள் முழுவதும் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தலிபான் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகின்றன.

கிட்டத்திட்ட 20 ஆண்டுகளாக ஆப்கனில் மேற்கத்திய நாடுகளின் ஆடை, பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவத் தொடங்கியதால், தற்போதுள்ள இளைஞர்களுக்கு தலிபான்களின் கட்டுப்பாடுகளுடன் வாழ்வது கடினமே.

எனினும், தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகே எவற்றுக்கெல்லாம் அனுமதி, எவற்றுக்கெல்லாம் தடை என்ற அதிகார்வபூர்வமான அறிவிப்புகள் வெளியாகும்.  அதன் பிறகே அடிப்படை உரிமைகள் காக்கப்படுமா அல்லது பறிக்கப்படுமா என்பது தெரியவரும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com