உயர் பாதுகாப்புப் பிரிவில் நாட்டின நாய்கள்

தேசிய அளவில் உயர் பாதுகாப்புப் பிரிவுகளில் மோப்ப நாய்களாக, தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை நாய் இனங்கள் சேர்க்கப்படவுள்ளன.
உயர் பாதுகாப்புப் பிரிவில் நாட்டின நாய்கள்

தேசிய அளவில் உயர் பாதுகாப்புப் பிரிவுகளில் மோப்ப நாய்களாக, தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை நாய் இனங்கள் சேர்க்கப்படவுள்ளன.

அதீத மோப்ப சக்தி காரணமாக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளிலும், வெடிபொருள்களைக் கண்டறிந்து நாசவேலைகளை முறியடித்தல், போதைப் பொருள்களைக் கண்டறிதல் ஆகிய பணிகளிலும் காவல் துறையினருக்கும், பல்வேறு உயர் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் மோப்ப நாய்கள் உதவியாகச் செயல்பட்டு வருகின்றன.

ராணுவம், துணை ராணுவப் படைகள், காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், சுங்கத் துறை ஆகியவற்றில் மோப்ப நாய்ப் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலும் மோப்ப நாய்ப் பிரிவுகளில் ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், டாபர்மேன் போன்ற வெளிநாட்டு இனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின நாய்கள் குறித்து "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுப் பேசியதையடுத்து, தேசிய அளவில் நாட்டின நாய்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவின் பூர்விக இனங்களாக சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை, ராம்பூர் ஹவுண்ட், காரவன் ஹவுண்ட், முதோல் ஹவுண்ட், மஸ்டிப், ஹிமாயலன், பூட்டியா போன்ற நாய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் பிறப்பிடமாகக் கொண்ட "ராஜபாளையம் நாய்கள்' நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தின்போது, தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டவை. நிறம் மற்றும் வெளித் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு சில நாய் இனங்களில் ராஜபாளையம் நாய் இனம் குறிப்பிடத்தகுந்தது. தூய வெண்மை நிறத்துடன் சருமம் மற்றும் இளம் சிவப்பு நிறத்துடன் நாசிப் பகுதி காணப்படுவது இதன் சிறப்பு.

சிப்பிப்பாறை, கன்னி ஆகிய நாட்டினங்கள் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட வேட்டையினப் பிரிவைச் சேர்ந்தவை. விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இவை அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது கோம்பை இனம். பண்டைய காலத்தில் போர்களில் கோம்பை நாய் இனம் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உயர் பாதுகாப்புப் பிரிவில்...

நாட்டின நாய்கள் அனைத்துமே ஆரம்பத்தில் வேட்டைக்காக வளர்க்கப்பட்டுள்ளன. வேட்டையாடுதல் தடை செய்யப்பட்ட பிறகு, தற்போது வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், விவசாயத் தோட்டங்களின் பாதுகாப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

தமிழகத்தின் நாட்டினங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை ஆகிய நாய்களை மோப்ப நாய்களாக ஈடுபடுத்துவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் வெற்றி அடைந்திருக்கின்றன. இதையடுத்து பிரதமர், மாநில முதல்வர்களின் உயர் பாதுகாப்புப் பிரிவுகள், சுங்கத் துறை, காவல் துறைகளில் இந்த வகை நாய்கள் விரைவில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.ந.செல்வக்குமார் கூறியது:
இந்தியாவில் சுமார் 20 வகையான நாட்டின நாய்கள் உள்ளன. இதில் தமிழகத்தின் சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய் இனங்கள் தேசிய விலங்குகள் மரபு சார் ஆராய்ச்சி அமைவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. நமது நாட்டினங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை, கன்னி ஆகியவை சுறுசுறுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தவை. இவற்றுக்கு சிறப்பு உணவுகள் ஏதும் தேவையில்லை.

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் "முதோல் ஹவுண்ட்' என்ற நாட்டின நாய் பணியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது கர்நாடக மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டது. இதேபோல, சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை ஆகிய நாய் இனங்களையும் பிரதமர், மாநில முதல்வர்களின் உயர் பாதுகாப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள், வெடிகுண்டுகள் கண்டறியும் பிரிவுகளில் மோப்ப நாய்களாக ஈடுபடுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, போதைப் பொருள், வெடிபொருள்களைக் கண்டறியும் மோப்ப சக்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், நான்கு இனங்களுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றன.

வெளிநாட்டு நாய் இனங்களுக்கு நமது நாட்டின நாய்கள் சற்றும் சளைத்தவை இல்லை என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, விரைவில் பாதுகாப்புப் பிரிவுகளில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட நாட்டின நாய்களும் பணியில் சேர்க்கப்படவுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com