கா‌ங்​கி​ர​ஸ் கட்சி‌க்​கு‌ப் போ‌ட்டி​யாக ஆ‌ம் ஆ‌த்மி...!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் துருப்புச்சீட்டாக ஆம் ஆத்மி கட்சி மாறியிருப்பதை உணர்த்துகிறது.
கா‌ங்​கி​ர​ஸ் கட்சி‌க்​கு‌ப் போ‌ட்டி​யாக ஆ‌ம் ஆ‌த்மி...!
Updated on
2 min read



குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் துருப்புச்சீட்டாக ஆம் ஆத்மி கட்சி மாறியிருப்பதை உணர்த்துகிறது.

நடைபெற்று முடிந்த குஜராத் பேரவைத் தேர்தலில் 7-ஆவது முறையாக, அதுவும் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றுள்ளது. குஜராத்தில் கடந்த தேர்தலைவிட 4 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று ஆட்சியை பாஜக தக்கவைத்துள்ளது. பாஜக 53 சதவீதம், காங்கிரஸ் 27 சதவீதம், ஆம் ஆத்மி 13 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன.

ராகுல் காந்தி இங்கு பிரசாரம் செய்யாததுதான் காங்கிரஸின் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. கடந்த பேரவைத் தேர்தலில் 77 தொகுதிகளைப் பெற்று பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுத்தது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் சிறப்பான வியூகம்தான். படேல் சமூக இளம் தலைவர் ஹார்திக் படேல், பிற்படுத்தப்பட்ட சமூக தலைவரான அல்பேஷ் தாகுர், தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி ஆகிய மூவரையும் ஆதரவாக திருப்பி மூன்று சமூக வாக்குகளையும் திரட்டி பாஜகவுக்கு கடும் போட்டியை அளித்திருந்தது காங்கிரஸ்.

இந்தத் தேர்தலில் ஹார்திக் படேல், தாகுர் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தது பாஜகவுக்கு கூடுதல் பலமாக மாறியது. அதேபோல, தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே பூபேந்திர படேலை முதல்வராக்கியதன் மூலம் பாஜக மீதான படேல் சமூக அதிருப்தி நன்கு குறைந்தது.

குஜராத் வியூகம்: முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட பூபேந்திர படேலுக்கு பிற சமூகத்தினரிடமும் பெரிய அளவில் அதிருப்தி உருவாகவில்லை. படேல் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியதை மிக துல்லியமாக கணக்குப் போட்ட ஆம் ஆத்மி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இசுதான் கத்வியை முதல்வர் 
வேட்பாளராக முன்னிறுத்தியது.

கடந்த 27 ஆண்டுகளில் குஜராத் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இத்துடன்,  டாடா நிறுவனம் மூலம் விமான உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையைத் தொடங்கியது, மகாராஷ்டிரத்தில் இருந்து செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை குஜராத்துக்கு மாற்றியது போன்றவை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குஜராத் தொழில் வளர்ச்சியில் வீறுநடைபோடும் என்ற தோற்றத்தை உருவாக்கியது.

கடந்த முறை குஜராத் பேரவைத் தேர்தலில் 41 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. இப்போது காங்கிரஸ் பெற்ற 27 சதவீதம், ஆம்  ஆத்மி பெற்ற 13 சதவீதம் ஆகியவற்றைக் கூட்டினால் 40 சதவீதம். கிட்டத்தட்ட கடந்த முறை காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் ஆகும். இதை வைத்துப் பார்த்தால் காங்கிரஸூக்கு சாதகமான வாக்குகளைத்தான் ஆம் ஆத்மி பிரித்துள்ளது தெரியவருகிறது.

காங்கிரஸை பொருத்தவரை பெரிய அளவில் பொதுக்கூட்டம், பேரணியை நடத்தாமல் வீடுதோறும் சந்திப்பு முறையில்தான் பிரசாரம் செய்தது. இதனால் காங்கிரஸ் மீதான நம்பிக்கை குறைந்தது. 

மேலும், இக்கட்சிக்கு இந்த முறை சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் ஆதரவு வாக்குகள் மட்டுமே பெரும்பான்மையாக கிடைத்துள்ளன. தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி இல்லாமல் இருந்திருந்தால் தலித் சமூக வாக்குகளையும் இழந்து காங்கிரஸ் மேலும் பின்னடைவைச் சந்தித்திருக்கும்.

ஆம் ஆத்மி வெற்றி பெற்ற 5 தொகுதிகள்கூட படேல் சமூகத்தினர் அடர்த்தியான பகுதியில் எதிர் வகுப்பினரை ஒன்று திரட்டி பெறப்பட்டவை ஆகும். தில்லி மாநகராட்சித் தேர்தல் நடந்தபோதும் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் குஜராத்தில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸூக்கு கடந்த முறை கிடைத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்கை இம்முறை ஆம்  ஆத்மி பெற்றுள்ளது.

ஆம் ஆத்மி களத்தில் இல்லாவிட்டாலும் குஜராத்தில் பாஜகவின் வெற்றியைத் தடுத்திருக்க முடியாது. ஆனால், காங்கிரஸ் 40 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தால் பாஜக சுமார் 130 தொகுதிகளையே பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும். இந்த அளவுக்கு இமாலய வெற்றியை பாஜக பெறுவதற்கு காங்கிரஸ் வாக்குகளை ஆம் த்ஆத்மி பிரித்ததே காரணம்.

குஜராத்தில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி என்பது, கட்டமைப்பில் காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தாலும்கூட தலைமை என்ற அடிப்படையில் ராகுல் காந்திக்கு போட்டியாளராக அரவிந்த் கேஜரிவால் உருவாகியிருக்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடஇந்திய மாநிலங்களில் காங்கிரஸூக்கு ஆம் ஆத்மி போட்டியாக வந்து தலைவலியை உருவாக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com