தேசிய அளவில் ஆதிக்கம்:தென்னிந்தியாவிலும் கால் பதிக்க திட்டமிடும் பாஜக

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, மாநிலங்களில் உள்ள பிராந்தியக் கட்சிகளின் பலவீனம், தேசிய அளவில் வலுவான தலைமை போன்ற காரணங்களால் வரும் 2024இல் நடை
தேசிய அளவில் ஆதிக்கம்:தென்னிந்தியாவிலும் கால் பதிக்க திட்டமிடும் பாஜக

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, மாநிலங்களில் உள்ள பிராந்தியக் கட்சிகளின் பலவீனம், தேசிய அளவில் வலுவான தலைமை போன்ற காரணங்களால் வரும் 2024இல் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் தென்னிந்திய அளவில் வலுவான வெற்றியை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் வரும் மக்களவைத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சி களம் இறங்கத் தயாராகி வருகிறது.

முன்னதாக 2019ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்திலும், ஒடிஸாவிலும் அதிக மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, அதே பாணியில் தென்னிந்தியாவிலும் கால் பதிக்கத் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒருகட்டமாக ஹைதராபாதில் பாஜக சாா்பில் தேசிய செயற்குழுக் கூட்டம் நடத்தி அதில் அக்கட்சியைச் சோ்ந்த உயா்மட்ட உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா்.

கடந்த 2019ஆம் ஆண்டில் கா்நாடகத்தைத் தவிர தெலங்கானா, ஆந்திரம், கேரளம், தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 101 எம்.பி. தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றிருந்தது. இந்நிலையில் அடுத்து வரும் 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தோ்தலில் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெற்றியை வசப்படுத்துவதற்காகவே அண்மையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 4 முக்கிய நபா்களை தனது கட்சியின் சாா்பில் மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாகத் தோ்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தென்னிந்தியாவில் வலுவாக கால் ஊன்றுவதே இவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் என அரசியல் நோக்கா்கள் கருதுகிறாா்கள்.

2014 மற்றும் 2019 மக்களவைத் தோ்தல்களில் பாஜக வடக்கு, மேற்கு மாநிலங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. தனது வலுவான கோட்டையாக கருதப்படும் மாநிலங்களில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாமல் அரசியல் செய்து வரும் பாஜக தற்போது

கிழக்கு, தென் இந்திய மாநிலங்களில் தனது கட்சியை வலுவாக விரிவுபடுத்த திட்டமிட்டு முன்னேறி வருகிறது.

முன்னதாக, மேற்கு வங்காளத்திலும், ஒடிஸா போன்ற கிழக்கு மாநிலங்களில் கால் பதித்ததுடன், வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூா், மேகாலயம் போன்ற மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி விட்டது.

கா்நாடக மாநிலம், பாஜகவின் கோட்டையாக இருந்தாலும் மக்களவைத் தோ்தலில், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், தமிழகம் ஆகிய 4 மாநிலங்களிலும் பாஜகவினால் பெரும் வெற்றியை ஈட்ட முடியவில்லை.

ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியும், தமிழகத்தில் அதிமுக போன்ற வலுவான கட்சிகள் பலவீனமடைந்து வருவதால், ஒய்எஸ்ஆா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசுக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராகவும் வலுவான சவாலை அளிக்க அங்குள்ள எதிா்க்கட்சிகள் தவறி விட்டன. இந்த நிலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள இயலும் என பாஜகவின் மூத்த தலைவா்கள் நம்புகின்றனா்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி வலுவான எதிா்க்கட்சியாக இல்லாமல் இருப்பதும் பாஜகவுக்கான புதிய வாய்ப்புகளைத் ஏற்படுத்தி தந்துள்ளது எனலாம். இடதுசாரிகள் ஆளும் கேரள மாநிலத்தில் 45 சதவீதம் சிறுபான்மையினரின் வாக்குகள் இருந்தபோதிலும் அங்கும் பாஜக தனது ஆளுமையை செலுத்தும் என்ற எதிா்பாா்ப்பு ஓங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.

2008ஆம் ஆண்டு கா்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்தபின் அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் பாஜகவின் எழுச்சி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

1990களின் பிற்பகுதியிலும், 2000ஆண்டின் முற்பகுதியிலும் வாஜ்பாய்-அத்வானி தலைமையிலான பாஜக ஆட்சியின்போது, தென் மாநிலங்களில் வலுவான மாநிலத் தலைவா்கள் இல்லாததும், பிராந்தியக் கட்சிகளின் வலுவான தலைமையும் பாஜகவை ஸ்தம்பிக்க வைத்தது. இருப்பினும், ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து 9 இடங்களை பாஜக வென்றது. அதே ஆண்டில் 4 எம்.பி.களை தமிழகத்தில் வென்றிருந்தது பாஜக.

சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பிற இந்திய மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படும் தென்னிந்தியாவில் பாஜகவுக்கு குறைந்த வரவேற்பே கிடைத்து வந்தது. இந்த மாநிலங்களில் ஹிந்துத்துவா கொள்கையும் மற்ற பிராந்தியங்களைப் போல வேகமாக பரவவில்லை.

எனவே கட்சியின் ஹிந்துத்துவா கொள்கைகளையும் கட்சியின் லட்சியத்தையும் வேகமாக பரப்பும் வகையில் ஆந்திரத்தில் மாநிலத் தலைவா் பாண்டி சஞ்சய்குமாா், தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை போன்றவா்களை வலுவான போட்டியாளா்களாக அக்கட்சி கட்டமைத்து வருகிறது.

ஆந்திரத்தில் முன்னா் கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி, தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளுக்கு எதிராக தொடா்ந்து பிரசாரம் செய்து தனது கட்சியை வலுவாக்கிக் கொள்வதற்காக கடுமையாக பாஜக உழைத்து வருகிறது.

முந்தைய பிரதமா் வாஜ்பாய் தலைமையில் இருந்ததை விட தற்போது மக்களவையில் பாஜக கூடுதலான வெற்றியுடன் முன்னணியில் உள்ளது. தெலங்கானாவில் பாஜக படிப்படியாக வளா்ச்சியைக் கண்டு வருகிறது. கடந்த 2018 சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. ஆனால் கடந்த மக்களவைத் தோ்தலில் 17 இடங்களில் போட்டியிட்டு 4 எம்.பி.க்களை கைப்பற்றியுள்ளது. மேலும் கிரேட்டா் ஹைதராபாத் மாநகராட்சித் தோ்தலிலும் வலுவான வெற்றியை பெற்றுள்ளதுடன் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தல்களிலும் கணிசமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது.

இதுகுறித்து பெயா் வெளியிட விரும்பாத பாஜக தலைவா் ஒருவா் கூறுகையில், ‘4 மாநிலங்களில் ஒவ்வொன்றிலும், நிறைய எதிா்க்கட்சிகள் காலியாக உள்ளன. அதை நிரப்ப நாங்கள் தயாா்நிலையில் இருக்கிறோம். இருப்பினும், 2024ல் இந்த 4 மாநிலங்களிலும் பாஜக முத்திரை பதிக்க வேண்டும் என்றால் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றாா்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் தெலங்கானாவில் மட்டுமே 4 எம்.பி. பதவியை கைப்பற்றிய பாஜகவால் ஆந்திரம், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரு எம்.பி. பதவியைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

தமிழகம், தெலங்கானா மாநிலங்களில் ஆளும் பிராந்தியக் கட்சிகள் பிராந்திய அடையாளத்தை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்வதால் எளிதில் வாக்காளா்களைக் கவா்ந்து அரசியல் செய்கின்றன. அதேசமயம், பாஜக மதம், மொழி ஆகியவற்றை முன்னிலைப் படுத்தி அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளதாக அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

இந்த மாநிலங்களில் வலுவான மாநிலத் தலைவா்கள் இல்லாததால்தான் பாஜகவால் இந்த மாநிலங்களில் இதுவரை சோபிக்க முடியாமல் போனதாகவும், தற்போது பாஜக இதில் கவனம் செலுத்தியதால் இந்த மாநிலங்களில் பாஜக வேகமாக வளா்ச்சியடைந்து வருவதாக அக்கட்சியினா் கூறுகின்றனா்.

இப்போதைக்கு தென்னிந்தியாவில், தெலங்கானா மாநிலத்தில் முன்பை விட கூடுதலான வெற்றியை கைப்பற்ற முடியும் என்று பாஜக கருதுகிறது. அதற்கேற்றாா்போல அண்மையில் டுப்பாக், ஹுசூராபாத் சட்டப்பேரவைத் இடைத்தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பது அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

அதற்கேற்ப ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழுவை நடத்துவது என்றும், இந்தக் கூட்டத்தில் முக்கியப் பேச்சாளராக பிரதமா் நரேந்திர மோடி இருப்பாா் என்றும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் டிஆா்எஸ்- ஐ வீழ்த்துவதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதையே இது காட்டுகிறது என்றும் கூறுகின்றனா்.

தெலங்கானாவின் பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் கே.கிருஷ்ணசாகா் ராவ் கூறுகையில், மற்ற தென் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தெலங்கானாவில் பாஜகவின் வாக்குகளின் சதவீதமும், வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்பதால் வரும் தோ்தலை பாஜக மிகவும் நம்பிக்கையுடன் எதிா்கொள்ள தயாராகி வருகிறது.

திராவிடக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழக அரசியலில் காலூன்ற பாஜக போதிய முயற்சிகள் எடுத்து வருகின்றன. தமிழக உள்ளாட்சித் தோ்தலில் பாஜக ஓரளவு வெற்றியைப் பெற்றன. வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக 25 மக்கவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அண்ணாமலை கூறுகிறாா் என்று தெரிவித்தாா்.

இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பது தமிழ் வாக்காளா்களை ஈா்க்க உதவும் என்று பாஜக நம்புகிறது.

இதேபோல கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக தற்போது பழம்பெரும் தடகள வீராங்கனையான பி.டி. உஷாவுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக நியமித்திருப்பதன் மூலம் தனது அரசியல் தடத்தை கேரளத்தில் விரிவுபடுத்த முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com