அரசாணையைச் செயல்படுத்துவதில் கல்வி விடுதிகளுக்குச் சிக்கல்

அரசு கல்வி விடுதிகளில் சமையலர் காலிப் பணியிடங்கள் மற்றும் நிதி பற்றாக்குறையால், புதிய உணவு வகை பட்டியலை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசாணையைச் செயல்படுத்துவதில் கல்வி விடுதிகளுக்குச் சிக்கல்

அரசு கல்வி விடுதிகளில் சமையலர் காலிப் பணியிடங்கள் மற்றும் நிதி பற்றாக்குறையால், புதிய உணவு வகை பட்டியலை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 1,354 பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது மாணவர்களுக்கு தினமும் காலை இட்லி, பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை  மதியம் மற்றும் இரவு அரிசி சாதம் வழங்கப்படுகிறது. வாரம் ஒருவேளை இறைச்சி, வாரத்தில் 4 வேளை முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்படுகிறது. 

இதற்காக அரசு சார்பில் தற்போது பள்ளி விடுதிகளுக்கு நபர் ஒன்றுக்கு ஒருவேளை உணவுக்கு தலா ரூ.11 வீதம் மாதம் ரூ.1,000, கல்லூரி விடுதிகளுக்கு நபர் ஒன்றுக்கு ஒரு வேளை உணவுக்கு ரூ.12.50 வீதம் மாதம்  ரூ.1,100 வீதம் நிர்ணயித்து வழங்கப்பட்டு வருகிறது. 

புதிய உணவு வகை அட்டவணை: இந்த நிலையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி அரசு கல்வி விடுதிகளில் "இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி  அன்ட்  அப்ளைடு நியூட்ரிஷன்' பரிந்துரையின்படி புதிய வகை உணவுப் பட்டியலை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்படுள்ளது. 

இதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தினமும் காலை சேமியா, தக்காளி சட்னி அல்லது சாம்பார், பூரி மசால், இட்லி, சாம்பார், சட்னி, இடியாப்பம், பட்டாணி குருமா அல்லது தேங்காய்ப் பால், பொங்கல், கத்தரிக்காய் கூட்டு,  வடை,  ரவா கிச்சடி, தோசை, மதியம் அரிசி சாதம், இரு வகை பொரியல், காய்கறி பிரியாணி, புதினா சாதம், காரட் சாதம், தயிர் சாதம், வாரம் ஒரு வேளை இறைச்சி, வாரம் 5 வேளை முட்டை, இரவு சப்பாத்தி, குருமா, இடியாப்பம், குருமா, காய்கறி புலாவ், ஊத்தப்பம், சட்னி, சாம்பார், கோதுமை தோசை, தக்காளிச் சட்னி ஆகியவற்றை அட்டவணைப்படுத்தியும், மாலை நேரத்தில் வேகவைத்த பயறு வகைகள், சுக்குமல்லி காபி அல்லது கருப்பட்டி தேநீர்  வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை: புதிய உணவு வகை அட்டவணையை, ஏற்கெனவே உள்ள மாதாந்திர உணவுக் கட்டணத்தில் மாற்றமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோசைக்கல், இடியாப்பம் அச்சு எந்திரத்தை விடுதிக்கு அவசர பராமரிப்புப் பணிகளுக்கு வழங்கப்படும் செலவினத் தொகையிலிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கல்வி விடுதிகளில் ஒருவேளை உணவுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூ.11 வீதமும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.15 வீதமும் வழங்கப்படும். அதே உணவுக் கட்டணத்தில், புதிய உணவு வகைகளை தயாரித்து வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு, விடுதி நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

பணியாளர்கள் பற்றாக்குறை: கல்வி விடுதிகளில் காலியாக 954 சமையலர் பணியிடங்களை பூர்த்தி செய்ய கடந்த 2020-இல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், தற்போது வரை சுமார் 300 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சிய பணியிடங்கள் காலியாகவே உள்ளன. மேலும், கல்வி விடுதிகளில் சமையலராக பணிநியமனம் பெற்ற இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். 

சமையலர் பணியிடம் காலியாக உள்ள பல்வேறு விடுதிகளில் இரவு காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சமையலராகவும், இரவு காவலர் பணியிடம் காலியாக உள்ள விடுதிகளில் சமையலர்கள் இரவு காவலர்களாகவும் கூடுதல் பணியாற்றி வருகின்றனர். விடுதிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் சமையலர் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், புதிய உணவு வகை பட்டியல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை செயல்படுத்துவதில் சிக்கல் வலுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை காப்பாளர் ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் எம்.முருகேசன் கூறியது: 

கடந்த 2021}ஆம் ஆண்டு விலைவாசி நிலவரத்தின்படி பள்ளி விடுதிகளில் மாணவர் ஒருவருக்கு மாதம் ரூ.1,000, கல்லூரி விடுதிகளில் மாணவர் ஒருவருக்கு மாதம் ரூ.1,100 என்று நிர்ணயிக்கப்பட்ட உணவுக் கட்டணத்தில், புதிய உணவு வகை பட்டியலை தயாரித்து வழங்குவது சாத்தியமில்லை. புதிய உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு மளிகைப் பொருள், எரிவாயு உருளை விலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாணவர் ஒருவருக்கு எந்த அளவில் உணவு வழங்க வேண்டும் என்பதை கணக்கிட்டு பட்டியல் வழங்கவில்லை. கோதுமை மற்றும் தானியங்கள் எங்கு வாங்குவது என்ற வழிகாட்டுதல் இல்லை.

இவற்றை முறையாக வகைப்படுத்தி நிர்ணயம் செய்து, புதிய வகை உணவு பட்டியலுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை பூர்த்தி செய்து, கூடுதலாக சமையல் உதவியாளரையும் நியமிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com