மூடிக்கிடக்கும் என்.டி.சி. ஆலைகள்

என்டிசி பஞ்சாலைகளை மூடும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்கிறதோ என்ற சந்தேகம் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.
மூடிக்கிடக்கும் என்.டி.சி. ஆலைகள்

ஆடை உற்பத்தித் துறையின் எதிர்காலத்தையும், இந்தத் துறையில் கிடைக்கும் லாபத்தையும் நன்கு உணர்ந்திருந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில் பருத்தி விளைவதுடன், அதை நூலாக நூற்கவும், ஆடை நெய்யவும் தேவையான தட்பவெப்பம், வசதிகள் நிறைந்த மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

அந்த இடங்களுக்கு சாலை, ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை ஜவுளித் துறை மையங்களாக உருவாக்கினர். அப்படி உருவானதுதான் ஏ, பி, சி என்று அழைக்கப்பட்ட அகமதாபாத், பாம்பே (மும்பை), கோவை ஆகியவையாகும்.

தேவையான தட்பவெப்பநிலை, குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கக் கூடிய இடமாக இருந்த கோவையில் 1888-இல் முதல் பஞ்சாலை தொடங்கப்பட்டது. அது, சி.எஸ்.டபிள்யூ. என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் ஆகும். சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேய தொழிலதிபரால் தொடங்கப்பட்ட இந்த மில் இப்போது ஸ்டேன்ஸ் மில் என்றழைக்கப்படுகிறது.

நலிவடைந்த பஞ்சாலைகள் ஸ்டேன்ஸ் மில்லை தொடர்ந்து மால் மில், காளீஸ்வரா, ரங்கவிலாஸ், ராதாகிருஷ்ணா மில் உள்பட 1930-ஆம் ஆண்டு வரையிலும் கோவையில் அடுத்தடுத்து 8 பஞ்சாலைகள் தொடங்கப்பட்டன. 

பின்னர், 1960-களில் பஞ்சாலைகள் நலிவடையத் தொடங்கின. நாடு முழுவதும் நலிவடைந்த நிலையில் இருந்த 16 தனியார் பஞ்சாலைகளை நிர்வாகம் செய்வதற்காக 1968-இல் மத்திய அரசால் தேசிய பஞ்சாலைக் கழகம் (என்டிசி) தொடங்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து பருத்தியைக் கொள்முதல் செய்து நூல், துணி உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது என்டிசி. பின்னர், 1972 - 73-ஆம் ஆண்டுகளில் என்டிசியின் நிர்வாகத்தின் கீழ் வந்த ஆலைகளின் எண்ணிக்கை 103-ஆக உயர்ந்தது.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதிலும் இருந்த 123 பஞ்சாலைகள் 1974-இல் தேசியமயமாக்கப்பட்டன. தற்போது மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனமாக என்டிசி செயல்படுகிறது. இதன் வசம் இருந்த ஆலைகளில் 100 பஞ்சாலைகள் நஷ்டம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. வெறும் 23 பஞ்சாலைகள் மட்டுமே தற்போது செயல்படும் நிலையில் உள்ளன.

23 ஆலைகளில் தென்னிந்தியாவில் மட்டும் 15 ஆலைகள் இயங்குகின்றன. தமிழகத்தில், பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீ ரங்கவிலாஸ் மில்ஸ், முருகன் மில்ஸ் என 5 ஆலைகள் கோவையில் செயல்படுகின்றன. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் காளீஸ்வரா மில்ஸ், ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியில் பயனீர் ஸ்பின்னர்ஸ் ஆகிய மில்கள் தமிழகத்தில் செயல்படும் மற்ற 2 ஆலைகளாகும்.

கரோனாவின்போது மூடல் கரோனாவுக்கு முன்பு வரையிலும் செயல்பட்டு வந்த இந்த ஆலைகள் பொதுமுடக்க காலத்துக்குப் பிறகு திறக்கப்படவில்லை. இருப்பினும் 17.5.2020 வரை தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், 18.5.2020 முதல் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டும் பாதி ஊதியம் வழங்கப்படுகிறது.

 முழு முடக்கத்தில் இருந்து அரசு விலக்கு அளித்தபோது தனியார் பஞ்சாலைகள் இயங்கத் தொடங்கினாலும் என்டிசி ஆலைகளை மத்திய அரசு இயக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 7 ஆலைகளிலும் ஒவ்வொரு ஆலையிலும் சுமார் 300 நிரந்தரத் தொழிலாளர்களும், 200 தினக் கூலி ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.

தொழிலாளர்கள் போராட்டம்

ஆலையைத் திறக்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு என்டிசி ஆலையையும் திறக்க மத்திய அரசு முன்வரவில்லை.

இதனால் என்டிசி பஞ்சாலைகளை மூடும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்கிறதோ என்ற சந்தேகம் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ராஜாமணி கூறியதாவது:

மூடப்பட்டுள்ள என்டிசி ஆலைகளைத் திறக்கக் கோரி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்திய நிலையில், இயங்காத மில்களை இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு குழு அமைத்தது. அந்தக் குழுவும் நாடு முழுவதும் உள்ள ஆலைகளை ஆய்வு செய்து அறிக்கை வழங்கியது.

ஆலைகளை மூடும் முடிவில் அரசு இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொழிற்சங்கத்தினர் கேட்டபோது, "ஆலைகளை இயக்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறோம். ஆனால், என்டிசி ஆலைகளைத் தொடர்ந்து இயக்குவதற்கு நிதி ஆயோக் முன்வரவில்லை. இந்த ஆலைகளால் அரசுக்கு நஷ்டம்தான் வரும் என்று அந்த அமைப்பு கூறுகிறது' என்றனர்.

ஆலைகளை மூடும் முடிவில் அரசு இருக்கிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டால், அப்படி ஒரு எண்ணம் இல்லை என்கின்றனர்.

தற்போது என்டிசி கழகத்துக்கு நாடு முழுவதும் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக எண்ணம் எழுந்துள்ளது.
ஆலைகளை இயக்கவும், நவீனப்படுத்தவும், தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கவும் கையில் பணம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்டிசி சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.5 ஆயிரம் கோடியில் மீதமிருக்கும் ரூ.2 ஆயிரம் கோடி என்னவாயிற்று என்று கேட்டால் பதிலளிக்க மறுக்கின்றனர்.

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால் அவர்களின் இபிஎஃப் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஜவுளித் துறை செயலர், சிறப்புச் செயலர், என்டிசி தலைவர் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினோம்.

இரண்டு மாதங்களில் எழுத்துபூர்வமாக பதிலளிப்பதாகக் கூறியிருக்கின்றனர். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதால் அதிகாரிகள் என்ன சொல்லப்போகின்றனர், என்டிசியின் எதிர்காலம், அதை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் எதிர்காலம் போன்றவை என்னவாகும் என்பது இனிதான் தெரிய வரும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com