தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் 'ஸ்ரீ'!

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் 'ஸ்ரீ'!

அறிவியல், பாரம்பரிய ஆய்வு முன்முயற்சித் திட்டம்' ( ஸ்ரீ)  மூலம் முனைந்து வருகிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பதில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலாசார ரீதியாக வளமான, அறிவு சார்ந்த இந்திய பாரம்பரிய பொருள்களைக் கண்டறிந்து மீட்க, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, "அறிவியல், பாரம்பரிய ஆய்வு முன்முயற்சித் திட்டம்' ( ஸ்ரீ)  மூலம் முனைந்து வருகிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பதில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெரும்பான்மையான விவசாயிகள், பல தசாப்தங்களுக்கு முன்பு பாரம்பரியமாக தங்கள் சேமிப்பில் இருக்கும் விதைகளையே பயன்படுத்தி வேளாண்மையில் ஈடுபட்டனர். பின்னர், கலப்பினங்களின் ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு மாறினர். இது நமது பாரம்பரியத்தின் அடிப்படையிலான தனித்துவ ஊட்டச்சத்து, மருத்துவம், சூழலியல் பண்புகள், பருவநிலை மீள்தன்மை கொண்ட நெல் ரகங்களைக் கைவிடவைத்தது.

இந்திய வேளாண் ஆய்வு அமைப்புகளும் அதிக மகசூல், எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டியதால், இந்தக் கலப்பின ரகங்களால் விவசாயிகளுக்கு கூடுதல் உள்ளீட்டுச் செலவுகள் ஏற்பட்டன. ஆனால், தமிழகத்தில் முன்பு பாரம்பரியமாக பின்பற்றிய வழிகள் இதுபோன்ற சிக்கல்கள் இல்லாததாகும்.

பாரம்பரிய நெல் வகைகள் அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்தி வைக்கப்படவில்லை. விதைகளையும் முறையாக சேமித்து வைக்கவில்லை. இந்த இரண்டையும் மீட்டெடுக்க தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை முனைவர்கள் முயற்சிகளைத் தொடங்கினர்.

இந்த விதைகள் குறித்து 7 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி சாஸ்த்ரா முனைவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வோடு மத்திய அரசின் "ஸ்ரீ'  திட்டமும் இவர்களது முயற்சிகளுக்கு உதவியது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. இந்த முயற்சிகளின்போது 100 ரகங்களை இவர்களால் அறிய முடிந்தது. இந்த நெல் விதைகளை வைத்துள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் சிலவற்றைப் பெற்றனர். இப்படிப் பெறப்பட்ட நெல் விதைகளில் 20 ரகங்களைக் கொண்டு 2019-இல் முதலில் தஞ்சை மாவட்டம், குருவாடிப்பட்டி கிராமத்தில் அன்புச்செல்வன் என்கிற விவசாயி வயலில் பயன்படுத்தி ஆராயப்பட்டது. ஒரு சென்ட் நிலத்தில் இருபது வகை பயிரிடப்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அதன் வளர்ச்சி ஆய்வு செய்யப்பட்டது.  இந்த பாரம்பரிய ரகங்களுக்கு இயற்கை (ஆர்கானிக்) உரங்கள் தேவை.

வயல் அறுவடை நாள்: இந்தப் பரிசோதனையில் பாரம்பரிய நெல் சிறப்பான விளைச்சலை கொடுத்தது. இதை மற்ற விவசாயிகளும் விழிப்புணர்வு பெறும் வகையில், சாஸ்த்ராவும், "ஸ்ரீ ' யும் இணைந்து "வயல் அறுவடை நாள்' என்கிற நிகழ்ச்சியை நடத்தின. இந்த ரகங்களில் கதிர்கள் நன்கு விளைந்திருந்தன. தூர்களைப் பார்த்து விவசாயிகள் வியந்தனர். அதிலும் அந்த (2019) ஆண்டு கடுமையான மழையால் நெல் விளைச்சல் குறைந்திருந்தது. ஆனால், அதிக வயதுடைய இந்தப் பாரம்பரிய விதைகள், வடகிழக்கு மழைக் காலங்களில் பாதிப்பில்லாமல் அதிக மகசூலைக் கொடுத்தது.

வயல்வெளிப் பள்ளி: 2020-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பாரம்பரிய நெல்கள் பயிரிட்டபோது, விவசாயிகளுக்கு "வயல்வெளிப் பள்ளி'யை நடத்தினர். இந்தப் பயிர்களை எப்படி கையாள வேண்டும், கண்காணிக்க வேண்டும் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுடன் இந்த ரகங்களின் வளர்ச்சி, விளைச்சல், அறுவடை வரையிலான அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சாஸ்த்ரா மற்றும்  "ஸ்ரீ' திட்ட ஆய்வாளர்களுக்கு இந்த அனுபவங்கள் திட்டமிட்டபடி ஆவணப்படுத்துவதற்கு உதவியது. இதேபோன்று நுகர்வோருக்குத் தேவையான தகவல்களும் தயாரிக்கப்பட்டன.

"புவியியல் தகவல் முறையில் புதுக்கோட்டை பகுதிகளில் இருந்த "மாப்பிள்ளை சம்பா'  நெல் ரகத்தை தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது. பாரம்பரிய ரகங்கள் ரசாயன உரங்களைவிட இயற்கை உரங்கள் மூலம்  நன்கு விளைச்சலை கொடுக்கிறது. ஆனால், இந்த நெல் ரகங்கள் அதிக நாள்களைக் கொண்ட பயிர்களாக இருந்ததால் விவசாயிகளுக்கு சிக்கலாக அமைந்தது. பாரம்பிய நெல் ரகங்களின் மகசூல் அதிகம், செலவு குறைவு.  

இயற்கை உரங்களே போதுமானதாகும். ரசாயன உரம் நிலத்தை மலட்டு தன்மையாக்கிவிடுகிறது. ஒற்றை  நடவு முறை என்பதால் ஓர் ஏக்கருக்கு கால் கிலோ விதை போதுமானது. பல தானிய விதைப்பு முறையினால் மாற்றுப் பயிர்கள் மடிந்து மக்கி கந்தக உரமாக மாறும். இதுபோன்ற சிறப்புகளோடு இந்த ரக அரிசியை பொதுமக்கள் பயன்படுத்தும்போது கிடைக்கும் பலன்களும் எங்கள் ஆய்வுகளில் வெளிப்பட்டது' என்கிறார் பாரம்பரிய நெல் விதைகள் ஆய்வில் முனைவர்  பட்டம் பெற்ற சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசியர் ஏ.சத்யா.

நுகர்வோர்களுக்கு... இந்தப் பாரம்பரிய நெல் வகைகள் எதாவது ஒரு வகையில் மருத்துவத் தன்மைகள், ஊட்டச் சத்து பண்புகளை கொண்டிருப்பவை. நாங்கள் பயிரிட்டு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 20 நெல் ரகங்களில் கரும்குறுவை சித்த மருத்துவத்துக்குப் பயன்படுத்தக் கூடியது.

அரிசி என்றாலே சர்க்கரை அதிகமாக இருக்கும் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரானது என்பதாகும். 20 ரகங்களில் ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்றவற்றில் சர்க்கரை உயர்வு குறியீட்டு எண்ணான "ஜிஐ' குறைவாக இருந்தது. "கருடன் சம்பா'வில்தான் "ஜிஐ' மிகக் குறைவாக இருந்தது. மிக அதிக அளவு அல்லது நடுத்தரத்தில் இருந்தது தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரக சம்பா போன்ற ரகங்களாகும். மிகச்சிறப்பான ரகம் கருப்புக்கவுனி' என்கிறார் அவர்.

கருப்புக்கவுனி: இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களில் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானது  "கருப்புக்கவுனி' என்பதற்கு காரணங்கள் உண்டு. இதில் சர்க்கரை உயர்வு குறியீட்டு எண் குறைந்த நிலையில் உள்ளது. உடலில் உள்ள விஷத்தன்மையை எடுக்கக்கூடிய "ஆன்டிஆக்ஸிடன்ட்' பண்புகள், தேவையற்ற கழிவுகளை நீக்கக்கூடிய "ஃபீனால்ஸ்' தன்மை போன்றவை அதிகமாக உள்ளன. உடலின் ஒவ்வொரு "செல்'லையும் பாதுக்காக்கக் கூடிய மூலப்பொருள்களும் கருப்புக்கவுனியில் கணிசமான அளவு உள்ளது.

இது குறித்து விவசாயிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.  இயற்கையாக, பூர்வீக நிலங்களோடு தொடர்புடைய நமது பாரம்பரிய நெல் ரகங்கள், காலநிலை நிச்சயமற்ற தன்மை, வறட்சி மற்றும் வெள்ளத்தைத் தாங்கும் திறன் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. மேலும், நீரிழிவு நோய், எலும்பு தேய்மானம் போன்றவற்றுக்கு எதிரான மருத்துவ குணங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளன. இந்தப் புரிதல்  விவசாயிகளுக்கு கூட்டத்தில் விளக்கப்பட்டன.

விதை வங்கி: இதேமாதிரி இந்த ரக விதைகளைப் பெருக்கவும் "ஸ்ரீ ' முன்வந்தது. தமிழகம் முழுவதும் 25 விவசாயிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. பயிலரங்குக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இயற்கை வேளாண்மை முறையில் இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட வைத்து அவர்களைக் கொண்டே 10 சமுதாய "விதை வங்கி' யும் தொடங்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவசாயிகள் தங்கள் உற்பத்தி விதைகளை நிகழாண்டில் கொண்டு வந்தனர். இவர்கள் மூன்றில் ஒரு பங்கை மற்ற விவசாயிகளுக்கு விலைக்கோ அல்லது இணாமாகவோ கொடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்த விதைக்காகவே நிகழாண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி "நெல் திரு விழா' ஒன்றை "க்ரியேட்' தன்னார்வ நிறுவனத்தோடு சேர்ந்து சாஸ்த்ரா பல்கலை.யும் "ஸ்ரீ ' யும் இணைந்து நடத்தின.

இப்படி இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தி, விவசாயிகளுக்கு விதைகள் கிடைக்க  நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இது "பாரம்பரிய, பண்டைக்கால விதை அல்ல; எதிர்கால சந்ததியருக்கான விதை' என்றே கூட தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com