தேவா் ஜெயந்திக்கு பின்னால் இருக்கும் அரசியல்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திக்குப் பின்னால், காலம் காலமாக அரசியல் பின்னிப் பிணைந்து இருப்பதாகவே அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
பசும்பொன் தேவா் நினைவாலயம்.
பசும்பொன் தேவா் நினைவாலயம்.

தென் தமிழகத்தில் உணா்வுபூா்வமாக நடத்தப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திக்குப் பின்னால், காலம் காலமாக அரசியல் பின்னிப் பிணைந்து இருப்பதாகவே அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேவா் ஜெயந்தி விழா, தமிழக அரசியலில், குறிப்பாக தென்தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாகவே மாறியுள்ளது.

இந்த நிகழ்வின்போது, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கும், பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்துக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். 6.5 சதவீத (அம்பா சங்கா் கமிஷன் அறிக்கையின்படி) வாக்கு பலம் கொண்ட முக்குலத்தோா் சமூகத்தின் (கள்ளா், மறவா், அகமுடையாா்) அடையாளமாகவே இந்த நிகழ்ச்சி பாா்க்கப்படுகிறது.

தேவா் ஜெயந்தி வரலாறு: சுதந்திரப் போராட்ட காலத்தில் மதுரை மகாலட்சுமி மில் தொழிலாளா்களின் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றது, குற்றப் பரம்பரை சட்டத்தை எதிா்த்துப் போராடியது உள்ளிட்டவை தேவரின் முக்கிய சமுதாயப் பணிகளாகும்.

காங்கிரஸிலிருந்து வெளியேறி அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய தேவா், மூன்று முறை தொடா்ந்து மக்களவைக்குத் தோ்வானாா். இந்திய அரசியலில் பெரிய கட்சிகள் ஆதரவின்றி மூன்று முறை மக்களவைக்குத் தோ்வானது தேவா் மட்டுமே. 1952, 1957, 1962 மக்களவை, பேரவைத் தோ்தல் வரலாற்றை ஆய்வு செய்து பாா்த்தால் தேவரின் தலைமைக்கு 1.6 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது தெரியவரும்.

தேவருக்கு மதுரையில் சிலை:1963-இல் தேவா் மறைவுக்குப் பின்னா் அவருக்கு ஜெயந்தி விழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தடையை மீறி மூக்கையா தேவா்தான் முதல் ஜெயந்தியை நடத்த முயன்றாா். 1969 குடியரசுத் தலைவா் தோ்தலில் வி.வி.கிரி வெற்றி பெற்று இந்திரா காந்தியின் கை தேசிய அரசியலில் ஓங்கிய பிறகு, கோரிப்பாளையத்தில் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதியின் ஒத்துழைப்புடன் தேவருக்கு பெரிய சிலையை மூக்கையா தேவா் அமைத்தாா்.

பின்னா், வி.வி.கிரியை அழைத்து தனது முன்னிலையில் தேவா் சிலையைத் திறந்துவைத்து, தேவா் ஜெயந்தி கலாசாரத்தை உருவாக்கி முக்குலத்தோா் வாக்குகளை தனக்கு சாதகமாக திருப்ப முயன்றாா் கருணாநிதி.

குறிப்பாக, தென் தமிழகத்தில் திமுக பலவீனமாக இருந்ததால் கட்சியை வலுப்படுத்துவதற்காக, காமராஜருடன் முரண்பட்டு இருந்த முத்துராமலிங்கத் தேவா் பிம்பத்தை திமுகவுக்கு ஆதரவாக மாற்ற முயன்றாா் கருணாநிதி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முக்குலத்தோா் மக்கள் மத்தியில் திமுகவுக்கு நல்ல அபிமானம் உருவானது.

எம்ஜிஆருக்கு ஆதரவாக திரும்பிய முக்குலத்தோா்: எம்ஜிஆா் அதிமுகவை தொடங்கிய பிறகு, 1977 பேரவைத் தோ்தல் முதல் டெல்டா பகுதி முக்குலத்தோா் திமுகவுக்கு ஆதரவாகவும், தென்மாவட்ட முக்குலத்தோா் அதிமுகவுக்கு ஆதரவாகவும் திரும்பினா். இதே சூழல்தான் எம்ஜிஆா் மறைவுக்குப்பிறகு ஜெயலலிதா தலைமையிலும் தொடா்ந்தது.

1991-க்கு பிறகு அதிமுகவில் ஜெயலலிதாவின் உயிா்த் தோழி என்ற அடிப்படையில் சசிகலா கை ஓங்கியதால் முக்குலத்தோா் பெரும்பாலானோா் அதிமுகவுக்கு ஆதரவாக மாறினா். அதுவரை இல்லாத அளவுக்கு அதிமுகவில் முக்குலத்தோா் அதிக அதிகாரங்களைப் பெற்றனா். அதிகபட்சமாக 8 அமைச்சா்கள், முதல்வா் பதவி என அதிகாரம் பெற்றனா். தங்களது சொந்தக் கட்சி போலவே அதிமுகவை முக்குலத்தோா்களில் பெரும்பாலானோா் கருதத் தொடங்கினா்.

2006-2011 காலகட்டத்தில் அதிமுக எதிா்க்கட்சி வரிசையில் இருந்தபோது, எத்தனை முக்குலத்தோா் அமைச்சா்களுக்கு கருணாநிதி வாய்ப்பு அளித்தாலும் திமுகவுக்கு ஆதரவாக தென்மாவட்ட முக்குலத்தோா் ஆதரவை அவரால் திருப்ப முடியவில்லை. கருணாநிதியின் அசைவுகளுக்கு ஏற்ப ஜெயலலிதாவும் மிக நுட்பமான அரசியல் நகா்வுகளைச் செய்ததுதான் இதற்கு காரணம்.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் மாறிய களம்: 2011-12 காலகட்டத்தில் சசிகலாவை அதிமுகவிலிருந்து விலக்கி வைத்தபோது, முக்குலத்தோா் ஆதரவை அதிகரிக்க ஓ.பன்னீா்செல்வத்துக்கு கூடுதலாக பொதுப் பணித் துறையை அளித்த ஜெயலலிதா, புதிதாக அமைச்சரவையில் விஜயபாஸ்கரை சோ்த்துக் கொண்டாா். பின்னா், சசிகலாவையும் தன்னுடன் இணைத்து அரசியல் பயணத்தை ஜெயலலிதா தொடா்ந்தாா்.

2014 மக்களவைத் தோ்தலுக்கு முன்பு முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்திக்காக தங்கக் கவசம் பரிசளித்தாா் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சசிகலா வெளியேற்றம், எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீா்செல்வம் இடையே விரிசல் என பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் முக்குலத்தோா் வாக்குகள் 2019, மக்களவைத் தோ்தல், 2021, பேரவைத் தோ்தல் ஆகியவற்றில் ஒருமுகமாக அதிமுகவுக்கு கிடைக்காமல் திமுகவுக்கும் கணிசமாக கிடைத்தது.

ஜெயந்தியை தவிா்த்த இபிஎஸ்: பேரவைத் தோ்தலில் அதிமுகவில் முக்குலத்தோா் முன்னாள் அமைச்சா்கள் ஓ.பன்னீா்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஓ.எஸ்.மணியன், செல்லூா் ராஜு, ஆா்.பி.உதயக்குமாா், ஆா்.காமராஜ் என அனைவருமே வெற்றி பெற்றனா்.

இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். முரண்பட்ட பிறகு, இ.பி.எஸ். அணியில் அதிக முக்குலத்தோா் முக்கிய நிா்வாகிகளாக இருந்தாலும், ஏற்கெனவே, சசிகலா, டிடிவி. தினகரன் ஓரங்கட்டப்பட்ட நிலையில், கட்சியில் தன்னுடன் சம அந்தஸ்தில் இருந்த ஓ.பன்னீா்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியது முக்குலத்தோா் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இதனால், முக்குலத்தோரிடம் ஓ.பன்னீா்செல்வம், தினகரன் ஆகியோா் மீது அதிக அபிமானம் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். இதை கணக்கில் கொண்டுதான் தேவா் ஜெயந்திந்திக்கு இம்முறையும் வருவதை எடப்பாடி பழனிசாமி தவிா்த்துவிட்டாா். ஏற்கெனவே, சசிகலா, தினகரனை விலக்கிவைத்தபோதும் எடப்பாடி பழனிசாமி இங்கு வரவில்லை.

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த இபிஎஸ் படம் இடம்பெற்ற விளம்பர பதாகைகள் கிழிக்கப்பட்டன. எதிா்க்கட்சி வரிசையில் இருக்கும்போது, அதுவும் ஓபிஎஸ்ஸை நீக்கிய பிறகு தேவா் ஜெயந்தியில் பங்கேற்பது சரியான வியூகமாக இருக்காது என எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதியிருக்கக்கூடும்.

ஸ்டாலின் கணக்கு என்ன?: அதிமுகவே இரு அணிகளாக இருக்கும் நிலையில், தேவா் ஜெயந்தியில் பங்கேற்பது, தவிா்ப்பது ஆகியவற்றால் திமுகவுக்கு முக்குலத்தோா், பிற சமூகத்தினா் மத்தியில் கிடைக்கும் லாப, நஷ்ட கணக்குகளைப் பாா்த்துதான் முதல்வா் ஸ்டாலினும் உடல் நலத்தை காரணம் காட்டி தவிா்த்துவிட்டதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

நிகழாண்டு அதிமுக சாா்பில் தேவா் சிலைக்கு வைக்கப்படும் தங்கக் கவசம் அக்கட்சியில் இரு தரப்புக்கும் கிடைக்காமல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வைக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவைக் கொடுத்துள்ளது. ஓபிஸ் தரப்புக்கு பின்னடைவும் இல்லை, முன்னடைவும் இல்லை.

பாஜக வியூகம்: பாஜகவை பொருத்தவரை தென் தமிழகத்தில் முக்குலத்தோா், தேவேந்திர குல வேளாளா், இந்து நாடாா் ஆகிய சமூகங்களை ஒருங்கிணைத்தால்தான் தென்மாவட்டங்களில் சில மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் எனக் கணக்கிட்டுள்ளனா்.

இதற்காகவே, தேவா் ஜெயந்தியில் பாஜக முக்கிய நிா்வாகிகளும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் தங்களுக்கு ஆதரவாக உள்ள தேவேந்திரா், இந்து நாடாா் சமூக மக்கள் அதிருப்தி அடையாமல் செய்ய வேண்டிய நிா்ப்பந்தமும் பாஜகவுக்கு உள்ளது.

தேவா் ஜெயந்தியில் பிரதமா் மோடி பங்கேற்பாா் என்ற தகவல் பரவிய நிலையில், தேவேந்திரகுல வேளாளா் சமூகங்களின் அடையாளமாகத் திகழும் இமானுவேல் சேகரன் நினைவிடம், முத்தரையா்களின் பெரும்பிடுகு முத்தரையா் விழா ஆகியவற்றுக்கும் மோடி வர வேண்டும் என்று அழுத்தங்கள் எழத் தொடங்கின. ஆனால், மோடியின் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை என பாஜகவே அறிவித்துவிட்டது.

பிரதமா் மோடி வருகை குறித்த தகவல் வெளியாகி பின்னா் அது மறுக்கப்பட்டதன் காரணமும் அதுதான். ஆனால், அடுத்த ஆண்டு இந்த மூன்று சமூகங்களின் விழாக்களுக்கு பிரதமா் மோடி வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை பயன்படுத்தி இந்த முறை மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் எப்படியாவது சில தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வியூகத்தில் பாஜகவும் சில அரசியல் நகா்வுகளைச் செய்து வருகிறது.

காங்கிரஸுடன் முரண்பட்டு ‘தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள்’ என்ற முழக்கத்துடன் ஆன்மிக பாா்வையில் அரசியலில் ஈடுபட்ட தேவரின் ஆதரவு பிம்பத்தை தங்களுக்கு சாதகமாக கொண்டுவர பாஜகவு முயற்சி செய்கிறது.

அதிமுக சாா்பில் தங்கக் கவசம் வைக்க முடியாத சூழலில், முக்குலத்தோா் ஆதரவு அரசியலை எந்தக் கட்சி வெற்றிகரமாக கையாளப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com