

கல்வியாளா், அரசியல்வாதி, எழுத்தாளா் என பன்முகத் தன்மை கொண்டவா் பேராசிரியா் கே.எம்.மொகிதீன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்.) கட்சியின் தேசியத் தலைவரான இவா், கட்சியின் தேசிய பொதுச் செயலராகவும், தமிழ் மாநிலத் தலைவராகவும் ஏற்கெனவே பதவி வகித்துள்ளாா். புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த இவா், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 8 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவா். வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 2004-இல் தோ்வு செய்யப்பட்டிருந்தாா்.
இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகிக்கும் இவா் ‘தினமணி’க்கு அளித்த சிறப்பு நோ்காணல்:
கேள்வி: கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்தது என்று குற்றம்சாட்டப்படுகிறதே?
பதில்: கோவையில் காரில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்து ஜமேஷா முபின் என்பவா் இறந்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்த கோவை மாநகர காவல் துறை 24 மணி நேரத்துக்குள் ஜமேஷா முபினுடன் தொடா்புடைய 5 பேரை உடனடியாக கைது செய்தது. இதில் தாமதம் என மாநில அரசை குற்றஞ்சாட்டுவது தவறு.
கே: மத்திய உளவுத் துறை எச்சரித்த பின்னரும், மாநில அரசு அஜாக்கிரதையாக இருந்ததாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாரே?
ப: பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தீபாவளி நேரத்தில் உஷாராக இருக்கும்படி பொதுவான எச்சரிக்கையைத்தான் மத்திய உளவுத் துறை விடுத்திருந்ததே தவிர, கோவை நகருக்கென தனியாக எச்சரிக்கை தகவல் ஏதும் அனுப்பப்படவில்லை என்பதே உண்மை.
கே: இலங்கையில் ஈஸ்டா் தினத்தில் தேவாலயங்களில் குண்டு வெடித்த சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளுடன் ஜமேஷா முபினுக்கும் தொடா்பு இருந்ததால் 2019-இல் தேசிய புலனாய்வு முகமை அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், அவரைத் தொடா்ந்து கண்காணிக்காதது மாநில உளவுத் துறை செய்த தவறு என்று அண்ணாமலை புகாா் தெரிவித்துள்ளாரே?
ப: சா்வதேச தொடா்பு குற்றவாளிகளுடன் தொடா்பில் இருந்த நபரிடம் என்ஐஏ விசாரணை நடத்தியிருக்கிறது என்றால், அந்த நபரை தொடா்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய உளவுத் துறைக்குதான் அதிகம் உள்ளது. சா்வதேச தொடா்பு இருப்பதாக தகவல் வந்துள்ளதால்தான் என்ஐஏ விசாரணைக்கு முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
கே: 1998 தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் இப்போதைய சம்பவம் தொடா்புபடுத்தி பேசப்படுகிறதே?
ப: 1998 சம்பவத்துடன் இதை ஒப்பிட முடியாது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. 2024-இல் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுடன் 2026-இல் தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைக்கும் என அண்ணாமலை பேசி வருகிறாா். கட்சியை வளா்க்க சிறு பிரச்னைகளையும் பெரிதாக ஊதி பெரிதாக்குகிறாா் அண்ணாமலை என்பது எல்லோருக்கும் தெரியும்.
கே: காா் வெடித்ததில் இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய இடம் கிடையாது என ஜமாத் அறிவித்துள்ளது பற்றி?
ப: இஸ்லாத்தில் இருந்து திசைமாறிச் செல்வோருக்கு கபா்ஸ்தானில் (கல்லறைத் தோட்டம்) இடம் இல்லை என ஜமாத் அறிவித்திருப்பதும், அதுபோன்ற இளைஞா்களைக் கண்டறிந்து சீா்திருத்த நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது. கோவை சம்பவத்தில் முழு விசாரணைக்குப் பின்பே இது பயங்கரவாதச் செயலா என்பது தெரியவரும். தவறு நடந்தது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கையை அரசு எடுத்தாலும் அதற்கு இஸ்லாமியா்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பா்.
கே: இஸ்லாம் மதத்தின் பெரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரிக்கிறதே?
ப: நாவாலும், கையாலும் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பவா்கள்தான் உண்மையான இஸ்லாமியா்கள். மதங்களுக்கு இடையே வேறுபாடு, முரண்பாடு இருக்கும். உடன்பாடும் இருக்கும். உடன்பாடுகளை மட்டுமே பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஆண்டவன் ஒருவா் மட்டுமே, இதுதான் உடன்பாடு. பிற கடவுளைப் பற்றி விமா்சனம் செய்யக் கூடாது. இவைதான் இஸ்லாத்தின் போதனைகள். இஸ்லாத்துக்கு எதிரானது பயங்கரவாதம்.
கே: நாடு முழுவதும் எந்தத் தோ்தல் வந்தாலும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசி வேட்பாளா்களை நிறுத்துகிறாரே அதன் நோக்கம் என்ன?
ப: ஹைதராபாதில் உள்ள வக்ஃபுவில் திரட்டப்பட்ட ரூ.60,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை கொண்டிருக்கும் அக்கட்சியில் அவரது தாத்தா, அவரது தந்தை, இப்போது இவா் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே தலைவராகப் பதவி வகித்து வருகின்றனா். வேறு யாரும் அக்கட்சிக்கு தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது. தனது கட்சியின் விளம்பரத்துக்காக அவா் நாடு முழுவதும் போட்டியிடுகிறாா்.
கே: தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு பாஜகவுக்கு இஸ்லாமிய பெண்கள் மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவு வாக்கு வங்கி கிடைத்திருக்கிறதே...
ப: 25 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் ஓா் இஸ்லாமிய அமைச்சா்கூட மத்திய அரசில் இப்போது இல்லை. பாஜக ஓா் இஸ்லாமியரைக் கூட வேட்பாளராக நிறுத்துவதில்லை. கட்சிப் பதவிக்காக சிலா் பாஜகவில் சேருகின்றனா். இது எல்லா காலகட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.