சுகம் தரும் சித்த மருத்துவம்:  தொற்றா நோய்களுக்கு ‘நாவல் பழம்’ குட்பை சொல்லுமா?

நாவல் பழத்தில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதாகவும், கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும் உடையது. 
நாவல் பழம்
நாவல் பழம்
Published on
Updated on
3 min read

‘கருப்பே அழகு காந்தலே ருசி’ என்ற பழமொழியை அறிந்திடாதவர்கள் இல்லை எனலாம். கருப்பு நிறத்தை தூக்கி பிடிக்கும் இந்த வரிகள், கருப்பு நிறம் தான் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் என்பதை மறைபொருளாக உணர்த்துவது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆரோக்கியம் தான் அழகு என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆம். கருப்பு நிறம் தான் ஆரோக்கியத்தின் ஊற்று. அந்த வகையில் நம்ம ஊர் கருப்புகவுனி அரிசி ஆரோக்கியத்தின் மாற்று உருவம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இயற்கை நிறமிகளை தன்னகத்தே கொண்டு பல்வேறு மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது.

செயற்கை நிறமிகளை நவீன வாழ்வியலில் அதிகம் பயன்படுத்துவதாலோ என்னவோ இயற்கை நிறமிகளை பலர் மறந்தே போய்விட்டனர். ஆனால் இயற்கை நிறமிகள் தான் உடல் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அரண். இயற்கை நிறமிகளை அதிகம் கொண்ட பிளாக் பெர்ரி, ப்ளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ஆகிய அயல்நாட்டு பழங்களுக்கு இருக்கும் மவுசு நம்ம ஊர் பழங்களுக்கு குறைவு தான். 

வெளிநாட்டு பழங்களில் தான் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை இருக்கிறது என்கிற வெளிநாட்டு மோகம் இன்னும் நம் நாட்டினருக்கு குறையவில்லை. ஆனால் அதே மருத்துவ குணமும், அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும் உடைய இயற்கை நிறமியைக் கொண்ட நம்ம ஊர் கருப்புகவுனியில் உள்ளது நம்மில் பலருக்கு தெரியாது. இந்த தகவலை வெளிநாட்டு ஆய்வாளர்கள் கூட உறுதியாக்குகின்றனர்.

‘கருப்பு கவுனியா? அது அதிகம் விலையாச்சே!’என்று பயன்படுத்த முடியாதவர்கள் நாட வேண்டியது நம்ம ஊர் இயற்கை வழி பழங்களையும், பச்சைக்காய்கறிகளையும் தான். கத்திரிக்காய் ஊதா நிறமாக இருப்பதும், நம்ம ஊர் சிவப்பு செம்பருத்திப்பூவும், சிவப்பு ரோஜாப்பூவும் இயற்கை நிறமிக்கு உதாரணங்கள் தான். இவை அத்தனையும் மருந்தாக சித்த மருத்துவம் பயன்படுத்தி வருகிறது என்கிறது கூடுதல் சிறப்பு.  

அந்த வகையில் இயற்கை நிறமிகளை அதிகம் கொண்டுள்ள, நாம் கண்டுகொள்ளாத பழம் ‘நாவல்பழம்’. “என்ன பாட்டி சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?” என்று கந்தன் கருணையில் முருகப்பெருமானே அவ்வைப்பாட்டிக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தர வழங்கிய பழம் நம்ம ஊர்  ‘நாவல் பழம்’ தான் என்பதை பலரும் அறிவர். எளிமையாக கிடைக்கும் நாவல் பழம் ‘இந்தியன் ஜாமுன்’ மற்றும் ‘இந்தியன் பிளாக் பிளம்’ ஆகிய புனைப்பெயர்களையும் கொண்டுள்ளது.

நாவல் பழத்தின் மருத்துவ குணங்களுக்கு முதன்மைக் காரணம் இதில் உள்ள இயற்கை நிறமி வேதிப்பொருள் ‘ஆன்தோசயனின்’ மட்டுமல்லாது இன்னும் பல வேதிப்பொருள்களும் தான். இதுவே இயற்கையாக நிறத்தை கொண்டுள்ள பல்வேறு காய்கறிகளுக்கும், கனிகளின் நிறத்திற்கும் காரணம். நாவல் பழத்தின் கருஊதா நிறத்துக்கும் காரணம் ஆன்தோசயனின் வேதிப்பொருள்.

நாவல் பழத்தின் புளிப்பும், இனிப்பும், துவர்ப்பு சுவைக்கும் இந்த ஆன்தோசயனின் நிறமிகள் தான் காரணம். மற்ற காய்கறிகளையும், நம் நாட்டு பழ வகைகளில் நாவல் பழத்தில் தான் இந்த நிறமிகள் அதிகம். அதனால் தான் இதன் மருத்துவ குணமும் கூடுதலாக உள்ளது. 

நாவல் பழத்தில் 83% நீர் சத்தும், 14% திடசத்தும் உள்ளது. மேலும் இதில் உடலுக்கு அத்தியாவசிய தாதுஉப்புகளான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, செம்புசத்து ,சோடியம், சல்பர், குளோரின் ஆகிய இவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டினை மட்டுமல்லாமல் உலகையே அச்சுறுத்தும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, இருதய நோய்கள், புற்றுநோய் இவற்றிக்கு நல்ல பலனை தரக்கூடியது. உலக அளவில் எண்ணற்ற ஆராய்ச்சிகள் ஆன்தோசயனின் மூலக்கூறு மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆன்தோசயனின் சர்க்கரையில் நோயில் இன்சுலின் தடையை நீக்கும் தன்மை உடையதால் மெட்டபாலிக் நோய்நிலைகளான (MetS) சர்க்கரைநோய், உடல்பருமன் இவற்றை தடுக்கக்கூடியது. மேலும் கணைய செல்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது. இயல்பாகவே இன்சுலின் சுரப்பை தூண்டுவதாகவும் உள்ளது. 

பல்வேறு நோய்நிலைகளுக்கு காரணமாகும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் செல்லுக்குள் ஏற்படும் சேதாரத்தை தடுத்து நோய்நிலைகளை தடுக்ககூடியது. புற்றுநோயில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு வேதிமூலக்கூறுகளை தடுத்து நோய்நிலையை தடுப்பதாகவும் உள்ளது.

நாவல் பழத்தில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், வயிற்றுபுண்ணை ஆற்றுவதாகவும், ஒவ்வாமையை நீக்குவதாகவும், மூட்டு வீக்கத்தை போக்குவதாகவும், கிருமிக்கொல்லியாகவும், சிறுநீரகத்தைப் பாதுகாப்பதாகவும், புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் உடையது. மேலும், நாவல் பழம் கழிச்சலை நிறுத்தும் தன்மையும், சிறுநீர்ப்பாதைத் நோய்களை நீக்கும் தன்மையும் உடையது. 

நாவல் பழத்தினை மட்டும் சித்த மருத்துவம் மருந்தாக கூறாமல், அதை விதையையும் சர்க்கரை வியாதிக்கு கூறியிருப்பது சிறப்பு. பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில், நாவல் கொட்டையினை கொதிக்கும் நீரில் ஊற வைத்து தயாரிக்கும் கஷாயம் நீரிழிவு நோய்க்கு மருந்தாக சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே, இயற்கை நிறமிகளைக் கொண்ட நம் பாரம்பரிய உணவான கருப்புகவுனி அரிசியையோ, அல்லது மரபு வழி பழவகையான நாவல் பழத்தையோ நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது என்பது உடல்நலத்திற்கு நன்மை செய்யும். இதனால் பல்வேறு தொற்றா நோய்களை வரவிடாமல் தடுத்து பிரியாவிடை கொடுக்க முடியும். 

இயற்கை விவசாயத்தையும், இயற்கை மருத்துவத்தையும் பயன்படுத்தத் தொடங்கினால் நலம் நமக்கு மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததிக்கும் நிச்சயம்.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com