விடுதலைப் போரில் கலைத்துறை

இதிகாசக் கதைகளை மையப்படுத்தி நடைபெற்ற இந்நாடகங்களில் விடுதலைப் போராட்டக் கருத்துக்களும் மறைமுகமாகவோ நேரடியாகவோ காட்சிக்குள் வைக்கப்பெற்று நடிக்கப்பெற்று வந்தது. 
தமிழில் முதல் பேசும் படம் - காளிதாஸ்
தமிழில் முதல் பேசும் படம் - காளிதாஸ்


 
தொடக்கக் காலத்தில் மக்கள் வாழ்வியல் சார்ந்து சமூகம் சார்ந்து பல்வேறு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக அதேநேரத்தில் மக்களை மகிழ்விப்பதற்காகவும் தோற்றம் பெற்றதே கூத்து எனப்பட்டது. இதுவே பின்னர் நாட்டிய நாடகமாகவும் முழுமையான நாடகமாகவும் மக்கள் திரள் கூட்டத்தின் நடுவே மேடை அமைக்கப்பட்டு மேடைகளிலும் நாடகமாக நடைபெற்றது. பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளை மையப்படுத்தி நடைபெற்ற இந்நாடகங்களில் விடுதலைப் போராட்டக் கருத்துக்களும் மறைமுகமாகவோ நேரடியாகவோ காட்சிக்குள் வைக்கப்பெற்று நடிக்கப்பெற்று வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேடை நாடகங்களில் விடுதலை போராட்ட முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன.

நாட்டு விடுதலைப் போரை மையப்படுத்தி புதிய நாடகங்களும் ஊர்கள்தோறும் நடைபெற்றன. தமிழ்ப்பண்டிதர் க. கோபாலாச்சார் 1894இல் எழுதி வெளியிட்ட ஸ்ரீ ஆரிய சபா என்ற நாடகமே முதல் தமிழ்த் தேசிய நாடகம் என்ற சிறப்பினைப் பெற்றது. இந்த ஆரிய சபா நாடகம் என்ற முதல் நூல் பதிப்பில் இது இந்தியத் தேசிய காங்கிரசு விசயமாக ஒரு தமிழ்ப் பண்டிதரால் இயற்றப்பெற்றது என்ற குறிப்பும் காணப்படுகிறது.

அதேபோன்று தொழில்முறையாக நடிக்கப்பெற்று ஒரு சிறந்த நாடகமாக மக்களின் வரவேற்பு பெற்று கருத்துப் பரப்புரை பணியில் நல்ல வெற்றிகண்ட தேசிய நாடகம் ‘சதாவதானம்’ தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலரால் எழுதப்பட்டு 1922ஆம் ஆண்டில் அரங்கேற்றம் செய்யப்பெற்ற ‘கதரின் வெற்றி’ நாடகமாகும்.

<strong>கிருஷ்ணசாமி பாவலர்</strong>
கிருஷ்ணசாமி பாவலர்

இந்த நாடகம் பற்றி அறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதி இருப்பது என்னவென்றால் ஒவ்வொரு நாடகமேடையும் ஒவ்வொரு யாகசாலை மாதிரி இங்கே மனிதன் தன்னைப் பார்க்கிறான். தன் சமுதாயத்தைப் பார்க்கிறான். தன் மூதாதையர்களைப் பார்க்கிறான். தன்னிடத்திலே தன் சமுதாயத்திலே காணப்படுகின்ற மாசு மருக்கள் எல்லாம் நவரசம் என்னும் நெய்யினால் எரிக்கப்படுவதைப் பார்க்கிறான். அதே ஒன்பது சுவைகளுடன் லட்சிய வாழ்க்கை இன்னது என்று நிதரிசத்துக் காட்டப்படுவதைப் பார்க்கிறான். சிறந்ததொரு நாடகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புகிற எவனும் சிந்தனை நிரம்பிய உள்ளத்தோடு திரும்ப வேண்டுமே ஒழிய சூன்யமான உள்ளத்தோடு திரும்ப முடியாது என்கிறார்.

சாமிநாத சர்மா எழுதிய விடுதலைப் போராட்ட நாடகம் ‘பாணபுரத்து வீரன்’ நூல் வடிவில் இந்த நாடகம் வெளியானபோதே ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது. அதனால் ‘தேசபக்தி” எனப் பெயர்மாற்றம் செய்யப்பெற்று இந்நாடகம் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. இதுபோன்று பல்வேறு நாடகங்களும் நாடகக் கலைஞர்களும் பட்டிதொட்டி எங்கும் விடுதலை உணர்வை மக்களிடையே கொண்டு சென்று தீமூட்டினர்.

<strong>சாமிநாத சர்மா</strong>
சாமிநாத சர்மா

அதேபோன்றதொரு செயல்பாட்டினை நேரடி மேடையில் நடிக்கப்பெற்று வந்த நாடகமானது மாற்றம்பெற்று தொழில் சார்ந்த தளமாக சினிமாவாக வடிவெடுத்தது. மக்களிடையே தோன்றிய தேசிய உணர்வும் ஆவேசமும் வௌ்ளையர் ஆட்சியில் வௌ்ளை முதலாளிகளுடன் போட்டிப் போட்டுக்கொண்டு இந்தியர்களும் தொழில் தொடங்கிய காலம். ஜாம்ஷெட்ஜி டாடா, கிர்லோஸ்கர், வாக்லெஸ், தமிழகத்தில் வ.உ.சி. என்று பலர் தொழில் தொடங்கிய நேரத்தில் இந்தியர்கள் சொந்த திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் இறங்கினர். அந்த வகையில் தேசிய நோக்கோடு தனக்கே உரிய தனித்துவத்தோடு ஆரம்பத்தில் விநியோகஸ்தராகவும் பின்னர் திரையரங்க உரிமையாளராகவும், பின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் அர்தேஷிர்ரானி.

தமிழில் முதன்முதலில் பேசிப் பாடிய திரைப்படம் 1931ஆம் ஆண்டில் வெளிவந்த ‘காளிதாஸ்” படமே ஆகும். இதைத் தயாரித்தவர் தமிழர் அல்லர். அவர் ஒரு பம்பாய்க்காரர். தமிழரின் முதல் பேசும்படத்தைத் தயாரித்து வெளியிட்ட இவரைப் பற்றி நாம் நன்றியோடு நினைவுகொள்ள வேண்டும். இவர்தான் நாம் முன்னர் கூறிய புணே நகரில் 1886ஆம் ஆண்டில் பிறந்த அர்தேஷிர்ரானி ஆவார்.

<strong>டி.பி. இராஜலெட்சுமி</strong>
டி.பி. இராஜலெட்சுமி

அப்துல் லாலி யூசுப் அலி என்பவரோடு சேர்ந்து இவர் தொடங்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் ‘வீரஅபிமன்யு’ இது பேசாப் படமாகும். இப்படத்தின் கதாநாயகி டி.பி. இராஜலெட்சுமி ஆவார். காளிதாஸ் படம் விடுதலைப் போருக்கு என்ன தந்தது மகாகவி காளிதாசரின் கதைதான் ‘காளிதாஸ்’ படம். ஆனால், இப்படத்தின் பாடல், வசனம் எல்லாம் விடுதலைப் போரை மையம் கொண்டதாகவே அமைந்தது. இந்தியர்கள் நமக்குள் ஏன் வீண் சண்டை. நம்மவரின் சுய சண்டையால்தான் வந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய முடிந்தது. ஒரு தாய் வயிற்றில் வந்த நாம் சாதி, மத, பேதம் பேசலாகுமோ? இப்படியான கருத்தைக் கொண்ட பாடலைப் பாடி நடித்தவர் டி.பி. ராஜலெட்சுமி என்பதை சுதேசமித்திரன் நாளேட்டின் காளிதாஸ் விமர்சனம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

காளிதாஸ் தமிழ் முதல் பேசும் படம் மட்டுமல்ல; முதல் தெலுங்கு மொழி பேசும் படமும் இதுதான். கதாநாயகி தமிழில் பேசுவாள், தமிழில் பாடுவாள், கதாநாயகன் தெலுங்கில் பேசுவான், தெலுங்கில் பாடுவான். இப்படத்தின் மற்றொரு பாடலில் ராட்டினமாம், காந்தி கை பாணமாம், பாரில் நம்மைக் காக்கும் பிரமாணம் என்ற வரிகள் கை ராட்டை கொண்டு நூல் நூற்றலைப் போற்றிப் பாடுகின்றது. ‘மதுரபாஸ்கரதாஸ்’ எழுதி இசைத்தட்டில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் பாடிய ‘ராட்டினமே காந்தி கை பாணமே’ என்று பாடிய பாடல்தான் முதல் தமிழ் சினிமாவான காளிதாஸ் படத்தின் முதல் பாடலாகக் குறத்தி ஒருத்தி ஆடிக்கொண்டே பாடுவதாகக் காட்டப்பெற்றுள்ளது.

இதேபோன்று 1934ஆம் ஆண்டு வெளிவந்தது ‘சகுந்தலா’ படம். இப்படத்தில் சகுந்தலை தன் துயரத்தை எண்ணி தெய்வத்திடம் வேண்டுகின்றாள். அவளது தெய்வம் பாரததேவி. இந்த தேவி லோகத்துக்கே மாதாவாம். இதில் சகுந்தலையாக நடித்துப் பாடியவர் டி.எஸ். வேலம்மாள் ஆவார்.

வௌ்ளையர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் சுதேசி இயக்கம், தீண்டாமை எதிர்ப்பு, மதுவிலக்கு, ஒத்துழையாமை ஆகிய போர் ஆயுதங்களை மகாத்மா காந்தியும் தேசத் தலைவர்களும் நம் மக்களுக்கு வழங்கி இருந்தனர். இந்தக் கருத்துக்களைத் தாங்கிய கதை அமைப்புகளோடும் கதாபாத்திரங்களோடும் முதலில் மேடை நாடகக் கலைஞர்களும் பின்னர் சினிமா கலைஞர்களும் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு இந்திய விடுதலைக்குப் பெரும் பங்காற்றினர் என்றால் மிகையில்லை.

கட்டுரையாளர்: ஆசிரியர்
தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com