மீண்டும் சென்னை - சேலம் 8 வழிச்சாலை?

பசுமைச்சாலைத் திட்டத்தை திமுக அரசு மீண்டும் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
சென்னை - சேலம் பசுமைச்சாலை மீண்டும் வருகிறதா?
சென்னை - சேலம் பசுமைச்சாலை மீண்டும் வருகிறதா?


சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது சொந்த ஊரான சேலத்துக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு கடும் எதிர்ப்புகளை சந்தித்த பசுமைவழிச்சாலைத் திட்டத்தை திமுக அரசு மீண்டும் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது, சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான நிலம் அளவிடும் பணிகள் தொடங்கிய போது, ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் தங்களது நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பறிபோவதற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராடிய மக்களுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகளும் களமிறங்கியதால் போராட்டம் பெரிய அளவில் சூடுபிடித்தது. சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களை காவல்துறையினர் கைது செய்வதைக் கண்டித்து சேலத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களையும் திமுக நடத்தியிருந்தது. விவசாயிகளின் கடும் போராட்டங்களைத் தொடர்ந்து பசுமைவழிச் சாலைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. போராட்டங்களும் நிறுத்தப்பட்டன.

சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனுக்களை அதிகாரிகளிடம் அளிக்கும் பூலாவரி பகுதி விவசாயிகள். 
சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனுக்களை அதிகாரிகளிடம் அளிக்கும் பூலாவரி பகுதி விவசாயிகள். 

இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. திமுக தலைமையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால், இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்படாது என்றே மக்கள் கருதியிருப்பார்கள். ஆனால் சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை திட்டம் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பாதிக்கப்படும் குடும்பங்கள், செங்கல்பட்டு, தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் ஆகியோரிடம் இந்த சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை கொண்டு வருவது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டப்பிறகே அது குறித்து மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கொள்கை முடிவெடுக்கும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மக்களவையில், இது பற்றி கேள்வி எழுப்பிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராமலிங்கம் கேள்விக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில், தமிழக அரசின் கருத்துகளுக்காக மத்திய அரசு காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை - சேலம் 6/8 வழி பசுமைவழிச் சாலையானது  பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.7,230 கோடிச் செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது மாநில அரசின் கருத்துக்களுக்காக காத்திருக்கிறது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இது குறித்து தனது கருத்துகளை முன்வைத்ததும், உடனடியாக இந்த திட்டம் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், இந்த திட்டத்தை நிறைவேற்ற சமூக- பொருளாதார மதிப்பீடுகளை செய்து முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனச் சட்டப்படி அனைத்து அனுமதிகளும் கிடைத்த பிறகு அதற்கான அறிவிக்கையை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதையும் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசு அனுப்பிய இந்தக் கடிதம் குறித்து கருத்துக் கூறியிருந்த தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, திமுக, எதிர்க்கட்சியாக இருந்த போது கூட, சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில், சாலைப் போக்குவரத்தின் பங்கு பெரியதாக இருக்கிறது. சாலையை கட்டமைப்பது என்பதில் மிகச் சரியான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது என்று கூறியிருந்தார்.

இந்த பசுமைவழிச் சாலை அமைப்பதிலிருக்கும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, ஆழமாக ஆலோசித்து, மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியர்கள் மற்றும் மக்களிடம் பேசப்பட வேண்டும். அதன் பிறகு, மக்கள் கூறும் பிரச்னைகளைக் களைய என்ன வழி இருக்கிறது என்று ஆராய்ந்து, அதற்கான தீர்வு காணப்பட வேண்டும். இது குறித்து இறுதியான கொள்கை முடிவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்தான் எடுப்பார் என்று எ.வ. வேலு குறிப்பிட்டிருந்தார்.

சென்னை - சேலம் பசுமைச் சாலைக்காக  நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் வெளியிட்ட போது, அனைத்து நில உரிமையாளர்களும் அதனை எதிர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையிலிருந்து வெளியாகும் தகவல் சொல்வது என்னவென்றால், நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசனை நடத்தி, விசாரித்து, மிக விரிவான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.  அதில் மாநில அரசு தேவைப்பட்டால் சில மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று நினைத்தால், அதற்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை எப்போதும் தயாராகவே உள்ளது. இது தொடர்பான ஒப்புதலை மாநில அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள், உள்ளூர் பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாறுதல் அல்லது தீர்வுகளை அமைச்சர் நிலையில் ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம். இந்த திட்டம் குறித்த ஒரு பொறுப்புணர்வும் ஒப்பந்தமும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இருக்க வேண்டும். தற்போது முடிவெடுக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது. அந்த முடிவுக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை காத்திருக்கிறது என்கிறார்கள்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com