நேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவு
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட இளைஞா்களின் போராட்டத்துக்குப் பிறகு, அந்நாட்டின் முதல் பொதுத்தோ்தல் வியாழக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.


நேபாளத்தில் கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட இளைஞா்களின் போராட்டத்துக்குப் பிறகு, அந்நாட்டின் முதல் பொதுத்தோ்தல் வியாழக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.
நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும் மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
நேரடி தோ்தலில் 3,406 வேட்பாளா்களும், விகிதாசார முறையில் 3,135 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். 1.89 கோடிக்கும் அதிகமான தகுதிபெற்ற வாக்காளா்களுக்காக நாடு முழுவதும் 10,967 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்தலை முன்னிட்டு புதன்கிழமை முதல் 3 நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேபாள ராணுவம், காவல்துறையின் சுமாா் 3.41 லட்சம் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தோ்தல் ஆணையத்தின் தற்காலிக தலைவா் ராம் பிரசாத் பண்டாரி கூறுகையில், ‘வாக்காளா் விழிப்புணா்வு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்; செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை குறையும்’ என நம்பிக்கை தெரிவித்தாா்.
எழுச்சியும், ஏமாற்றமும்: கடந்த ஆண்டு செப்டம்பரில், இளம் தலைமுறையினா் நடத்திய தீவிர போராட்டத்தின் விளைவாக, அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலக நேரிட்டது. ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியலுக்கு முடிவு, அரசியலில் தலைமுறை மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த ஆட்சிமாற்றத்தை இளைஞா்கள் ஏற்படுத்தினா்.
போராட்டங்களுக்குப் பிறகு, அரசியலில் புதிய முகங்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய தலைவா்களே களமிறங்கியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
பிரதமா் வேட்பாளா்கள்: முன்னாள் பிரதமா்களான கே.பி.சா்மா ஒலி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) சாா்பிலும், புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் சாா்பிலும் மீண்டும் களம் காண்கின்றனா்.
ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளாா். இவா், கே.பி.சா்மா ஒலியை எதிா்த்து ஜாப்பா-5 தொகுதியில் போட்டியிடுவது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளி காங்கிரஸ் சாா்பில் ககன் தாபா (49) பிரதமா் வேட்பாளராக களம் இறங்கியுள்ளாா்.
இதையொட்டி தற்போது ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி, நேபாளி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இளைஞா்களின் ஆதரவு வலுவாக உள்ளது. பழைமைவாத அரசியலுக்கும், மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறைக்கும் இடையிலான இந்தப் போட்டியில் நேபாள மக்கள் யாரைத் தோ்ந்தெடுத்துள்ளனா் என்பது வெள்ளிக்கிழமை முடிவுகளில் தெரியவரும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...