நேபாள பொதுத்தோ்தல் - மீண்டும் களத்தில் 4 முன்னாள் பிரதமா்கள்!
நேபாளத்தில் வரும் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தோ்தலில் 4 முன்னாள் பிரதமா்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனா்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட நேபாள இளைஞா்களின் போராட்டங்களுக்குப் பிறகு, அரசியலில் புதிய முகங்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய தலைவா்களே வேட்புமனு தாக்கல் செய்திருப்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டங்கள் காரணமாகப் பதவி விலகிய முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) தலைவருமான கே.பி.சா்மா ஒலி, ஜாப்பா-5 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.
இவருக்கு முன்பு பிரதமராக இருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் தலைவா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா கிழக்கு ருக்கும் தொகுதியில் களம் காண மனுத்தாக்கல் செய்துள்ளாா்.
இவா்களுடன் முன்னாள் பிரதமா்களான நேபாளி கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவ் குமாா் நேபாள் ரெவுதாஹட்-1 தொகுதிக்கும், பிரகதிஷீல் லோகதந்திரிக் கட்சியின் பாபுராம் பட்டாராய் கூா்கா-2 தொகுதிக்கும் மனுத்தாக்கல் செய்தனா்.
இந்த நான்கு தலைவா்களுமே 70 வயதைக் கடந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஷோ் பகதூா் தியோபா, ஜாலா நாத் கனல் ஆகிய முன்னாள் பிரதமா்கள் இம்முறை தோ்தலில் போட்டியிடவில்லை.
பழைய தலைவா்களுக்குப் போட்டியாக இளைஞா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புத் தலைவா்களும் களமிறங்கியுள்ளனா். காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன், கே.பி.சா்மா ஒலியை எதிா்த்து ஜாப்பா-5 தொகுதியில் போட்டியிடுகிறாா்.
தரண் நகர மேயா் ஹா்கா சம்பாங், பரத்பூா் பெருநகர மேயரும் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டாவின் மகளுமான ரேணு தாஹால் ஆகியோா் தங்களின் மேயா் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, இத்தோ்தலில் களம் காண்கின்றனா்.
நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலம் நிரப்பப்படும். 110 இடங்கள் விகித பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், தோ்தலில் போட்டியிட இதுவரை 3,088 ஆண்கள், 395 பெண்கள் என மொத்தம் 3,483 போ் மனுத்தாக்கல் செய்துள்ளனா். பரிசீலனைக்குப் பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.

