அடிக்கிறது ஜாக்பாட்! சென்னை சென்ட்ரல் போல முனையமாக மாறவிருக்கும் பரங்கிமலை
By ENS | Published On : 03rd December 2022 12:10 PM | Last Updated : 03rd December 2022 04:32 PM | அ+அ அ- |

முனையமாக மாறவிருக்கும் பரங்கிமலை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எவ்வாறு, விரைவு ரயில், பறக்கும் ரயில், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை இணைக்கும் முனையமாக இருக்கிறதோ அதுபோல பரங்கிமலை ரயில் நிலையமும் உருவாகவிருக்கிறது.
பறக்கும் ரயில் திட்டம் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் பணி வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரங்கிமலை ரயில் நிலையமானது, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தரைத்தளத்தில் அமையப்பெற்ற ரயில் நிலையமாகும். தற்போது, பரங்கிமலை - கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அது முதல் தளத்தில் அமைகிறது. அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - பரங்கிமலை ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமையவிருக்கிறது. இது இரண்டாவது தளத்தில் அமையும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமும், பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில்தான் திட்டமிடபப்ட்டுள்ளது. ஒருவேளை, 475 மீட்டர் ரயில் பாதையான ஆதம்பாக்கம் - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டால், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் மற்றும் இதர பகுதிகளிலிருந்து வரும் பயணிகள், பறக்கும் ரயில் மூலம் பரங்கிமலையிலிருந்து வேளச்சேரி, அடையாறு, மயிலாப்பூர், தரமணி உள்ளிட்டப் பகுதிகளுக்குச் செல்வதும் அங்கிருந்து வருவதும் எளிதாகிவிடும்.
இதையும் படிக்க.. அஃப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை: இது எப்படி நடத்தப்படும்?
உள்கட்டமைப்பில் கவனம் தேவை
ஒருபக்கம், தெற்கு ரயில்வேயும் பரங்கிமலை ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்புகளை அதிகரித்து, நாள்தோறும் 10,000 ரயில் பயணிகளை எதிர்கொள்ளத் தேவையானவற்றை செய்து வருகிறது. ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவாயிலிருந்து (ஆதம்பக்கம்) அதனுடன் ஒருகிங்கிணைக்கப்பட்ட பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் 5 நடைமேடைகளுக்கும் பயணிகள் எளிதாகச் சென்று வர 12 மீட்டர் அகலம் கொண்ட நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதோடு, 5 நகரும் படிகட்டுகளும், நடைமேடைகள், முக்கிய நுழைவாயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய கட்டடங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை..
ஓய்வு பெற்ற ரயில்வே நிர்வாகப் பணி அதிகாரி ஒருவர் கூறுகையில், பரங்கிமலை ரயில் நிலையத்தை, தென் சென்னையின் முக்கிய முனையமாக மாற்றவும், இவ்வழியாகச் செல்லும் விரைவு ரயில்கள் 2 நிமிடங்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லவும் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன என்கிறார்.