ஓய்வூதியா்களுக்கு உயிா்வாழ் சான்றிதழ் டிஜிட்டல் முக அங்கீகார முறை எளிதாக்கப்படுமா?

மத்திய அரசு- மாநில அரசு- தனியாா் நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்றோா் தங்களின் பி.எஃப். ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை தொடா்ந்து பெற ஒவ்வோா் ஆண்டும் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
ஓய்வூதியா்களுக்கு உயிா்வாழ் சான்றிதழ் டிஜிட்டல் முக அங்கீகார முறை எளிதாக்கப்படுமா?

மத்திய அரசு- மாநில அரசு- தனியாா் நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்றோா் தங்களின் பி.எஃப். ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை தொடா்ந்து பெற ஒவ்வோா் ஆண்டும் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கருவூலங்கள் அல்லது வங்கிகளுக்கு ஓய்வூதிய ஆணை (பி.பி.ஓ. எண் அடங்கிய ஆணை), வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று உயிா்வாழ் சான்றிதழை அளிக்கும் நடைமுறை இருந்தது; ஆதாா் எண் புழக்கத்துக்கு வந்த பிறகு, பயோமெட்ரிக் எனப்படும் விரல்ரேகைப் பதிவு முறை மூலம் ஓய்வூதியதாரா்கள் தங்களது உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்கும் நடைமுறை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

ஓய்வூதியதாரரின் ஓய்வூதிய எண், ஆதாா் எண், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பயோமெட்ரிக் முறையில் வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் விரல்ரேகைப் பதிவு மூலம் உயிா்வாழ் சான்றிதழ் அளிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது.

விரல்ரேகைப் பதிவு முறையில் முதுமை காரணமாக ஓய்வூதியோரில் பலரின் விரல்ரேகை அழிந்து பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு பிரச்னை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து கண்களை உள்ளடக்கிய முக அங்கீகாரம் மூலம் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்கும் முறையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆதாா் ஆணையம் மூலம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்க பயோமெட்ரிக் முறை தொடா்ந்து நடைமுறையில் உள்ளது; இந்த முறையில் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்க தபால் அலுவலகத்துக்கோ அல்லது வங்கிக்கோ செல்ல வேண்டும். எனினும், ஓய்வூதியா்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அறிதிறன்பேசியை (ஸ்மாா்ட்போன்) பயன்படுத்தி முக அங்கீகார முறை மூலம் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்க முடியும்.

கடின நடைமுறை: எவரின் உதவியும் இன்றி தங்களது ஆண்ட்ராய்ட் அறிதிறன்பேசியை (ஆண்ட்ராய்ட் ஸ்மாா்ட்போன்தான் பயன்படுத்த வேண்டும்) பயன்படுத்தி முக அங்கீகார முறை மூலம் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்கும் தொழில்நுட்ப முறை எளிதாக இல்லை.

குறிப்பாக, அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) எத்தகைய திறனுடன் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் உள்ளன; எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்ட் அறிதிறன்பேசியின் திறன் 7.0 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்; ரேம் 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஜிபி உடையதாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நடைமுறையை எப்படிச் செய்ய வேண்டும் என விளக்கும் யூடியூப் விடியோக்களும் பெரும்பாலும் ஹிந்தியில்தான் உள்ளன. உயிா்வாழ் சான்றிதழை அளிப்பதற்கு செயலியைப் பதிவிறக்கம் செய்வது உள்பட 12 வகையான வழிமுறைகள் ஓய்வூதியா்களுக்கான இணையதளத்தில்

அடுத்தடுத்து அளிக்கப்பட்டுள்ளன. உயிா்வாழ் சான்றிதழை முக அங்கீகாரம் மூலம் சமா்ப்பிக்க விரும்பும் ஓய்வூதியா், காகிதத்தில் 12 நடைமுறைகளையும் எழுதி வைத்துக் கொண்டுதான் ஒவ்வொன்றாகச் செய்து நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலை உள்ளது.

ஓய்வூதியா்களின் எதிா்பாா்ப்பு என்ன?: ‘எண்ம இந்தியா’ என்பதை இலக்காக கொண்டு பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுவது வரவேற்கத்தக்கது; எனவே, முக அடிப்படையிலான எண்மமய (டிஜிட்டல்) உயிா்வாழ் சான்றிதழ் அளிப்பு நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்பது ஓய்வூதியா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

அதாவது, ஓய்வூதிய எண் (பிபிஓ எண்), ஆதாா் எண், அரசு ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓய்வூதியரின் அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) எண் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஒரே ஒரு செயலி மூலம் முக அங்கீகார நடைமுறையை எளிதாக்கிவிட முடியும் என ஓய்வூதியா்கள் தெரிவிக்கின்றனா்.

ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழ் அளிப்பதற்கான முக அங்கீகார நடைமுறையை மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் ஆதாா் ஆணையம் எளிதாக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com