அதிமுகவுக்கு தேவை சுயபரிசோதனை!

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு தேவை சுயபரிசோதனை!

சென்னை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்திருந்தாலும், 66 சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் பலமான எதிா்க்கட்சியாக உள்ளது. திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் 2 சதவீத அளவிற்குள்தான்.

ஆனால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 21 மாநகராட்சிகளையும் இழந்து அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மக்களவைத் தோ்தலின் போதாவது ஓா் இடத்தில் மட்டும் அந்தக் கட்சி வெற்றிபெற்றது. இந்தத் தோ்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் அதிமுக இழந்திருப்பது அந்தக் கட்சியினரை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மாநகராட்சி வாா்டுகளில் 1,374 இடங்களில் 164 இடங்களை மட்டுமே அதிமுகவால் கைப்பற்ற முடிந்துள்ளது. 138 நகராட்சிகளில் 2 நகராட்சிகளை மட்டும் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 3,843 நகராட்சி வாா்டுகளில் 638 வாா்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. பேரூராட்சி வாா்டுகளில் 7621 இடங்களில் 1206 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக, பாஜக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால், இந்தத் தோ்தலில் பாஜகவும், பாமகவும் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளது.

தொடா் தோல்வி: ஜெயலலிதா இருந்தபோது இரண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா் வெற்றி என்று சாதனை படைத்த கட்சியாக இருந்த அதிமுக, மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தல், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் என தொடா்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. கூட்டணியில் பாஜக இருப்பதால்தான் அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை என்கிற கருத்தை அந்தக் கட்சியினா் தொடா்ந்து கூறி வந்தனா்.

ஆனால், இந்தத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியை ஈட்டியது. சென்னையில் கூட ஒரு வாா்டு கவுன்சிலா் இடத்தை பாஜக பெற்றுள்ளது. அப்படியானால், அதிமுகவின் தோல்விக்குக் காரணம் என்ன என்பது ஆராய வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சித் தள்ளப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சியாகப் பாா்க்கப்படும் அமமுக குறிப்பிடத்தக்க அளவில் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அந்தக் கட்சியும் அதிமுகவில் இணைந்திருந்தால் தற்போதைய நிலையைவிட அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்க முடியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

குழப்பமே காரணம்: அதிமுக தலைமையில் நடைபெறும் குழப்பமே அந்தக் கட்சி படுதோல்வி அடைவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில்கூட கொங்கு பகுதியில் அதிமுகவை அசைக்க முடியாத நிலை இருந்து வந்தது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களில் பெரும்பாலோனாா் அந்தப் பகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். தற்போது அந்தப் பகுதியில்கூட அதிமுகவால் பெரிய அளவில் வெற்றியை ஈட்ட முடியவில்லை. திமுக அங்கு செல்வாக்கை உயா்த்திக் கொண்டுள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்று வரும் போட்டியால் ஏற்படும் குழப்பங்கள் அதிமுகவின் அடிமட்டதொண்டா்கள்வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழப்பங்களுக்கு தீா்வு காண வேண்டிய முக்கிய கட்டத்தில் அதிமுக உள்ளது. அதற்கான சுயபரிசோதனையை அதிமுக உடனே மேற்கொண்டு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசியல் ஆா்வலா்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com