நீட் தேர்வெழுதிய மாணவிகளுக்கு நடந்த கொடுமை: என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை?

நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வெழுதிய மாணவிகளுக்கு நடந்த கொடுமை: என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை?
நீட் தேர்வெழுதிய மாணவிகளுக்கு நடந்த கொடுமை: என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை?

கொல்லம்: நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் மாவட்டம் அயூர் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு தேர்வு மையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பெற்றோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் கொல்லம் ஊரக காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய அரசிடம் இது தொடர்பான விவகாரம் கொண்டுச் செல்லப்படும் என்று கேரள மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையிடம் இது குறித்து கேட்டதற்கு, இதுவரை அது தொடர்பான புகார்கள் எதுவும் வரப்படவில்லை என்று பதிலளித்துள்ளது. இது தொடர்பாக தேர்வு முடிந்ததும் தேசிய தேர்வு முகமையிடம் மாணவிகள் எந்த புகாரும் அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக மின்னஞ்சல் மூலமாகக் கூட எந்த புகாரும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து கொல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்த போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு ஞாயிறன்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தேர்வு மையத்தில் தேர்வெழுத வந்த சுமார் 90 மாணவிகள், தங்களது உள்ளாடைகளில் இருந்த உலோக கொக்கிகள் காரணமாக, வெடிகுண்டு சோதனைக் கருவிகளில் சப்தம் எழுந்ததால், இந்த அவலை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இது குறித்து கொல்லம் ஊரக காவல்துறையினர், மாணவிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், நாங்கள் 12 மணிக்கு தேர்வு மையத்தில் எங்கள் பெண்ணை இறக்கிவிட்டோம். சிறிது நேரத்தில் துப்பட்டாவைக் கொண்டுவருமாறு கூறினார்கள். நாங்களும் கொண்டு போய் கொடுத்தோம். தேர்வு முடிந்து, எங்களது மகள் வெளியே வரும்போதுதான் என்ன நடந்தது என்பதே எங்களுக்குத் தெரிந்தது.

அவரது உள்ளாடையில் இருந்த இரும்புக் கொக்கியால், அவர் நுழைவுவாயிலில் செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அந்த உள்ளாடையை அகற்றினால்தான் உள்ளே நுழைய அனுமதிப்போம் என்று தேர்வு அறை அதிகாரிகள் கூறிவிட்டதாகவும், அந்த தேர்வு நடந்த கல்லூரி நிர்வாகத்துக்குக் கூட இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளை மட்டும் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று, உள்ளாடைகளைக் கழற்றச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் கடும் மன உளைச்சலும், மிக மோசமான அனுபவமும் ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலிலேயே அவர்கள் தேர்வெழுதிவிட்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் மற்றொரு பெற்றோர்.

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

தேர்வு நடைபெற்ற கல்லூரி தரப்பில் கேட்கப்பட்டபோது, தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகள்தான் தேர்வை நடத்துகிறார்கள். மாணவர்களை சோதிப்பதும் அவர்கள்தான். எங்களது ஊழியர்களுக்கு இங்கே எந்த வேலையும் கிடையாது. நீட் தேர்வின்போது தேசிய தேர்வு முகமை ஊழியர்கள் மட்டுமே அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com