சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘வெந்தயம்’ பித்தப்பை கல் பிரச்னைக்கு தீர்வு தருமா? 

வெந்தயத்தை இளவறுப்பாக வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு பகல் வேளைகளில் சூடான நீரில் கலந்து எடுத்துக்கொள்ள மேற்கூறிய மருத்துவ நன்மைகளை அளிக்கும்.
வெந்தயம்
வெந்தயம்


இன்று உலகத்தையே அச்சுறுத்தும் தொற்றா நோயான உடல்பருமன் எனும் அரக்க நோய் சர்க்கரை வியாதி, இருதய நோய்கள், பக்க வாதம் போன்ற கொடிய பல நோய்களை விளைவிக்கக் கூடியது என்பது பலரும் அறிந்ததே. 

இந்நோய்கள் உடலளவிலும், மனதளவிலும் பலரையும் வருத்தி மருத்துவமனை வாசலுக்கு காலம் தோறும் நம்மை நடையாய் நடக்க வைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அழையா விருந்தாளியாக இன்னும் பல நோய்கள் உடல்பருமனுடன் வந்து சேரும் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 

பித்தப்பை கல்: அதில் ஒரு விருந்தாளி தான் ‘பித்தப்பை கல்’ எனும் நோய் நிலை. இது கொழுப்பு படிமத்தால் ஏற்படும் கல், பித்தநிறமிகளால் ஏற்படும் கல் என்று பொதுவாக இரண்டு வகை. பெண்களுக்கு அதிகம் ஏற்படும் கொழுப்பினால் ஏற்படும் பித்தப்பை கல் என்பது, இன்று உடல்பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது.  

கல்லீரலோடு சேர்ந்த பித்தப்பை, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தத்தை சேமித்து வைக்கும். அது செரிமானத்திற்கு தேவைப்படும் போது அவ்வப்போது பித்தத்தை வெளியேற்றும். அத்தகைய பித்தப்பையில் கல் என்பது தற்போது வாடிக்கை ஆகிவிட்டது. வேறு எதோ ஒரு காரணத்திற்கு ஸ்கேன் எடுக்கும் போது, ‘உங்களுக்கு பித்தப்பையில் கல் இருக்கு’ என்கிற அதிர்ச்சி செய்தி வந்து சேரும். இதில் பலருக்கும் அனுபவமிருக்க வாய்ப்புண்டு. 

கவலைப்படத் தேவையில்லை: குறிகுணம் இல்லாத நிலையில் பித்தப்பை கல் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று மருத்துவர் ஆலோசனை கூறினாலும், மனம் அதை ஏற்க மறுக்கும். எப்படியாவது தீர்வு காண வேண்டிய ஆவல் பலருக்கும் இருக்கும்.

குறிகுணங்கள்: ‘டாக்டர் வெயிட் கூடிட்டே போகுது, உடல் எடையை குறைக்க முடியவில்லை’ என்று வருந்தும் பலரும் அவர்களின் செரிமானத் தன்மையை உற்றுநோக்குவதில்லை. அவர்கள் பலருக்கும் செரியாமை, அசீரணம், வாய் குமட்டல், உணவு செரியாமையால் வயிறு உப்பசம், சில சமயங்களில் வலது பக்க வயிற்றில் கல்லீரல் உள்ள இடத்தில் லேசான வலி, கல்லின் அளவு பெரிதானால் வலது பக்க தோள்பட்டை வலி ஆகிய குறிகுணங்கள் காணும். அவர்களின் ரத்தத்தில் கொழுப்பின் அளவும் மாறுபட்டு காணும்.  

பித்தப்பை கல்

அதிகம் பாதிக்கப்படுபவர்கள்: பித்தப்பை கல் என்ற நோய் நிலையினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அமெரிக்கர்கள். இந்தியர்களின் பாதிப்பு மிகக்குறைவு. ஏனெனில் நமது உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் நெறிமுறைகள் நம்மை பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் தன்மையுடையதாக உள்ளது சிறப்பு. ஆனால் சமீப காலத்திய உணவுமுறைகளால் நாளுக்கு நாள் உடல் பருமன், பித்தப்பைக் கல்லினால் பாதிக்கப்படும் நபர்கள் நம் நாட்டில் அதிகம். 

மூலிகை கடைசரக்கு: உடல் பருமனையும் குறைத்து ரத்த கொழுப்பினை அளவையும் குறைத்து பித்தப்பை கற்களை கரைக்கும் எளிய பல வழிமுறைகளும், மருத்துவ முறைகளும் சித்த மருத்துவத்தில் உள்ளன. அதில் ஒரு எளிய சித்தமருத்துவ மூலிகை கடைசரக்கு தான், நாம் உணவில் பயன்படுத்தும் ‘வெந்தயம்’.

அஞ்சறைப்பெட்டி: பெரும்பாலான வீடுகளில் அஞ்சறைப்பெட்டியில் முக்கிய இடம் பிடித்துள்ள கடைச்சரக்கு ‘வெந்தயம்’. இது உணவாகவும், மருந்தாகவும் பலரால் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக சர்க்கரை நோய்க்காகவும், உடல் குளிர்ச்சிக்காகவும், பெண்களின் வெள்ளைப்படுதல் வயிற்றுவலிக்காகவும், மலச்சிக்கலை தீர்க்கும் மருந்தாகவும், நார்சத்து அதிகம் கொண்ட எளிய கடைச்சரக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

வெந்தயம் ஒரு பழம்பெரும் கடைசரக்கு. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் உணவு வகைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  முடி வளர இதைப் பலரும் முடித்தைலங்களில் இன்றளவும் பயன்படுத்துவதும் நாம் அறிந்ததே. பிறநாடுகளில் மார்பு அளவை அதிகரிக்க பெண்கள் இதை பயன்படுத்துகின்றனர். இந்த மருத்துவ தன்மைக்கு ஹார்மோன் போன்ற தன்மையுடைய  ‘டியோஸ்ஜெனின்’ என்ற வேதிப்பொருள் காரணமாக இருக்கலாம் என்று அறியப்படுகின்றது. இது ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் விதமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

பெயர்க்காரணம்: வெந்தயம் என்பதின் பெயர்க்காரணத்தை உற்று நோக்கினால் வெந்த+அயம், அதாவது உடல் உள்கிரகிக்க தகுந்த பக்குவத்தில் இரும்பு சத்தினை தன்னகத்தே கொண்டது என்று பொருள்படும். ஆம். இதில் உடலுக்கு அத்தியாவசியமான தாது சத்துக்களான கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, செம்பு, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், இரும்பு சத்து இவற்றையும் கொண்டுள்ளது. 

ரத்த விருத்தி: ஆக, ரத்த சோகை நோயால் அவதிப்படும் பலரும் வெந்தயத்தை அணுகினால் நல்ல பலன் தரும். வெந்தயத்தை பச்சரிசியுடன் சேர்த்து பொங்கலிட்டு சாப்பிட ரத்த விருத்தியாகும் என்கிறது சித்த மருத்துவம். வெந்தய கீரையும் நல்ல மருத்துவ குணங்களை கொண்டது. 

மூலக்கூறுகள்: வெந்தயத்தில் உள்ள மருத்துவ குணமுள்ள மூலக்கூறுகள் சபோனின்கள், டையோஸ்ஜெனின், ட்ரைகோனெலின் மற்றும் 4-ஹைட்ராக்ஸி ஐசோலூசின் ஆகியவை உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலெஸ்டெராலை குறைக்கும் தன்மையுடையதாகவும், பித்தப்பையில் கொழுப்பு படிவதை தடுக்கும்படியாகவும் உள்ளது. 

சர்க்கரை அளவை குறைக்கும்: மேலும், இதில் உள்ள ‘ஹைட்ராக்ஸி ஐசோலூசின்’ என்ற வேதிப்பொருள் கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் இன்சுலின் சுரப்பை இயற்கையாக தூண்டுவதாக உள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் படியாக உள்ளது. ‘டியோஸ்ஜெனின்’ என்ற வேதிப்பொருள் புற்று செல்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும், ‘பீனோலிக் அமிலம் மற்றும் பிளவனாய்டுகள்’ புற்று நோயை தடுக்கும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், ரத்த குழாயில் அடைப்பை தடுப்பதாகவும், வயிறு புண்களை ஆற்றுவதாகவும் உள்ளது.  

யாருக்கு வேண்டாம்: இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் குடலில் உள்ள நீர்சத்தினை உறிஞ்சி, உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்து உறிஞ்சுவதை தடுக்கும்படியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மலச்சிக்கலை போக்கவும் இது உதவும். மாதவிடாயை ஒழுங்குபடுத்த உதவும் சித்த மருத்துவத்தின் மகளிர் பருவ கால உணவில் வெந்தயம் சேருவதும் சிறப்பு. இருப்பினும், ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்புடையது அல்ல.

உடலுக்கு குளிர்ச்சி: வெந்தயத்தை இளவறுப்பாக வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு பகல் வேளைகளில் சூடான நீரில் கலந்து எடுத்துக்கொள்ள மேற்கூறிய மருத்துவ நன்மைகளை அளிக்கும். இது பித்தத்தை குறைப்பதோடு, உடலுக்கு குளிர்ச்சியை தரும். வெந்தயத்தை வறுத்து கோதுமையுடன் சேர்த்து காபி பொடிக்கு பதிலாகவும் பயன்படுத்த மேற்கூறிய நன்மைகளை அளிக்கும்.

ஐயம் வேண்டாம்: சிறு  மணிகளை போன்ற தோற்றம் தரும் இந்த வெந்தயம், பித்தப்பையில் உருவாகும் கொழுப்பு கற்களையும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினையும் கரைத்து ஆரோக்கியான சீரணத்திற்கும், வாழ்விற்கும் வழிகோலும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது எளிய நம் வீட்டு சித்த வைத்தியம். பயன்படுத்தினால் பலன் நிச்சயம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com