தமிழகத்தில் இரண்டாவது ஆண்டாக அதிகரித்த மகப்பேறு உயிரிழப்புகள்

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மகப்பேறு உயிரிழப்பு அதிகரித்துள்ளது.  
தமிழகத்தில் இரண்டாவது ஆண்டாக அதிகரித்த மகப்பேறு உயிரிழப்புகள்


கோவை: தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மகப்பேறு உயிரிழப்பு அதிகரித்துள்ளது.  

கர்ப்ப காலங்களிலும், பிரசவத்தின்போதும் கர்ப்பிணிகள் உயிரிழப்பு என்பது பரவலாக காணப்படுகிறது. 

இதனைக் கட்டுப்படுத்த தேசிய சுகாதார இயக்கம் சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பத்தை பதிவு செய்தது முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகள் சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். தவிர சிக்கலான பிரசவங்களுக்கு வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கென தனி வாட்ஸ் ஆப் குழு அமைத்து கண்காணிக்கப்படுவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய சுகாதார இயக்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மகப்பேறு உயிரிழப்புகள் 1 லட்சத்துக்கு கணக்கிடப்பட்டு சராசரியில் குறிப்பிடப்படுகிறது. அதன்படியே மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்திய மாவட்டங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு மகப்பேறு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.  

தமிழகத்தில் கடந்த 2020-21-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 73 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு (2021-22) ஒரு லட்சம் கர்ப்பிணிகளில் சராசரியாக 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்தில் 53 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து மகப்பேறு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. 

தமிழகத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 623 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றனர். அதேவேளை பிரசவத்தின்போதும், கர்ப்பகாலங்களிலும் 664 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 436 பேர் குழந்தை பெற்றெடுத்த நிலையில், 827 மகப்பேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 163 உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மகப்பேறுகால உயிரிழப்பு அதிகரித்து வருவது கர்ப்பகால கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டுகிறது. 

வளர்ந்த மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிய தருமபுரி: தமிழகத்தில் சுகாதாரத் துறையின் வசதிக்காக 38 வருவாய்த் துறை மாவட்டங்கள் 46 சுகாதார மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மாவட்ட அளவில் குறைந்த மகப்பேறு உயிரிழப்புகள் பதிவான சுகாதார மாவட்டங்களில் பழனி, பரமக்குடி, தருமபுரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. அதிக உயிரிழப்புகள் பதிவான மாவட்டங்களில் விருதுநகர், நாகப்பட்டினம், திருப்பூர், பெரம்பலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் கடைசி 5 இடங்களில் உள்ளன. 

சுகாதார மாவட்ட அளவில் பழனி முதலிடத்தில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக வருவாய்த் துறை மாவட்டங்கள் அளவில் கணக்கிடும்போது தருமபுரி மாவட்டமே முதலிடத்தில் உள்ளது.

மாநிலத்தில் மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற வளர்ந்த மாவட்டங்களைப் பின்னுக்குத்தள்ளி தருமபுரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 

முந்தைய ஆண்டு மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் முதல் மூன்று இடங்களில் இருந்த புதுக்கோட்டை, தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்கள் தற்போது முறையே 27, 34 மற்றும் 6-ஆவது இடத்தில் உள்ளன. 

இது தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்  பி.அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்திலும் மகப்பேறு சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வந்தது. இரண்டாவது அலையின்போது கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருசிலர் கரோனா நோய்த் தொற்றின் அச்சத்தின் காரணமாக வெளியே வர முடியாத சூழல் இருந்ததால் உரிய சிகிச்சை எடுத்துகொள்ள முடியாமல் உயிரிழப்பு ஏற்பட்டது.

இருந்தும் வாட்ஸ் ஆப் குழு மூலமும், ஜூம் செயலி மூலமும் தொடர்புகொண்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பினாலும் கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். மகப்பேறு உயிரிழப்புகள் அதிகரிக்க கரோனா பாதிப்பு முக்கிய காரணமாக இருந்துள்ளது.  

தவிர அதிக ரத்தப்போக்கு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நிமோனியா காய்ச்சல், நரம்பு சம்பந்தமான பாதிப்புகள், இருதய பாதிப்பு ஆகியவை மகப்பேறு உயிரிழப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கண்டவற்றுடன் சேர்த்து கரோனா பாதிப்பு முக்கிய காரணமாக இருந்தது. 

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்றவற்றிற்கு கர்ப்பிணிகள் முறையாக சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். இல்லையெனில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.  எனவே, கர்ப்பத்தை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்து மருத்துவர்கள், செவிலியர்கள் கூறும் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

அதேபோல, கர்ப்பத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் தொடர் கண்காணிப்பின் மூலம் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணிகளை முறையாகக் கண்காணித்து, உரிய ஆலோசனைகளை வழங்கி உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றார். 

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டி.செல்வவிநாயகம் கூறியதாவது: மகப்பேறு உயிரிழப்பில் ஹீமோகுளோபின் குறைபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. 

இது தொடர்பாக கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்வதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இரும்பு சத்து மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. 

இருந்தும் ஒருசில பகுதிகளில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். கர்ப்பகாலத்தில் ஹீமோகுளோபின் பராமரிப்பு மிக முக்கியம். இதற்கு சுகாதாரத் துறை சார்பில் மட்டும் முயற்சி எடுத்தால் போதாது. கர்ப்பிணிகளும், அவரது உறவினர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com