நரசிங்கம்பேட்டை நாகசுரத்துக்கு புவிசார் குறியீடு!

கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை நாகசுரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
நரசிங்கம்பேட்டை நாகசுரம்.
நரசிங்கம்பேட்டை நாகசுரம்.


தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை நாகசுரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூரில் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

ஏற்கெனவே, தஞ்சாவூரை சார்ந்த 9 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தற்போது 10-ஆவது பொருளாக நரசிங்கம்பேட்டை நாகசுரத்துக்கு புவிசார் குறியீடு அண்மையில் பெறப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கம்பேட்டை நாகசுரம் மிகவும் பிரசித்து பெற்றது. நாகசுரத்தை இசையில் "சுத்த மத்தியமம் ஸ்வரம்" மற்றும் "பிரதி
மத்தியமம் ஸ்வரம்” கொண்டுதான் தாய் ராகங்களை பிரித்து வாசிக்கலாம். 1955 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதி மத்தியமம் ஸ்வரத்தை வைத்துதான் நாகசுர கலைஞர்கள் வாசித்து வந்தனர். 1955 -க்கு முன்பு வரை சுத்த மத்தியமம்
ஸ்வரம் என்பது கிடையாது. ஆனால் நாகசுரம் கருவியில் வாசிக்கும்போது,
கலைஞர்கள் சுத்த மத்தியமம் ஸ்வரம் என்பதை ஒரு அனுமானமாக, உத்தேசித்து, வாசித்து வந்தனர்.

சுத்த மத்தியமம் ஸ்வரத்தை அனுமானம் செய்து நாகசுர இசையை ஈடுபடுத்தி வாசிப்பது கடினமானது. இதை போக்கும் வகையில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள "நரசிங்கம்பேட்டை” கைவினைக் கலைஞர் என்.ஜி.என். அரங்கநாத ஆசாரி 1955 ஆம் ஆண்டில் சுத்த மத்தியமம் ஸ்வரத்தை கண்டுபிடித்து, அதை நாகசுரக் கருவியில் உருவாக்கினார்.

இவ்வாறுஉருவாக்கப்பட்ட நாகசுர கருவிதான் நரசிங்கம்பேட்டை நாகசுரம். இது, உலகில் மிகப் பெரிய ஒரு பரிணாமத்தை உருவாக்கி நாகசுர இசை வளர்ச்சிக்கு வித்திட்டது. நரசிங்கம்பேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவி உலகில் தலை சிறந்து விளங்கிய நாகசுர கலைஞர்கள் கைகளில் இன்றும் தவழ்கிறது.

உலகில் நாகசுரத்தில் ஏக சக்ரவத்தியாகவும், ஒட்டு மொத்த நாகசுரம் உலகுக்கும் ஒரே ராஜாவாக விளங்கியவர் ராஜரத்தினம் பிள்ளை.

அரங்கநாத ஆசாரி புதிதாக உருவாக்கிய நரசிங்கம்பேட்டை நாகசுரத்தை ராஜரத்தினத்துக்கு வழங்கினார். இவர் நாகசுரத்தை வாசித்த பிறகு, அதிலிருந்த அனைத்து ஸ்வரங்களும் வழங்கிய ராகத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். 

ராஜரத்தினம் அன்றிலிருந்து தன் வாழ்நாள் முழுவதும் ரங்கநாத ஆசாரி உருவாக்கிய நரசிங்கம்பேட்டை நாகசுரத்தை வைத்துதான் வாசித்து வந்தார். இது, நாகசுரம் வித்வான்களை ஆள்கிறது.

ராஜரத்தினம் பிள்ளை ஏற்கெனவே வாசித்து வந்த "திமிரி நாயனத்துக்கு" விடை கொடுத்து, நரசிங்கம்பேட்டை நாகசுரம் வழங்கிய "பாரி நாயனத்தை" தன் இறுதி வாழ்க்கை வரை வாசித்து பயன்படுத்தினார். 

சஞ்சய் காந்தி

இந்த நரசிங்கம்பேட்டை நாகசுரத்தை ராஜரத்தினம் மட்டுமல்லாமல் புகழ் பெற்று விளங்கிய நாகசுர வித்வான்கள் காருக்குறிச்சி அருணாச்சலம் உள்பட
புகழ்பெற்ற நாகசுரம் இசை விற்பனர்களும் வாசிக்கத் தொடங்கினர். 1947 ஆகஸ்ட் 15 அன்று மங்கள வாத்தியம் வாசிக்க இந்த நாகசுரத்தை பயன்படுத்திதான் ராஜரத்தினம் பிள்ளை வாசித்தார். ராஜரத்தினத்துக்கு பேரும் புகழும் அடைய இந்தக் கருவி ஒரு அச்சாரமாக விளங்கியது. இவருக்கு நாகசுரம் அறிவை வளர்த்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின்  தந்தை முத்துவேல் என்பது குறிப்பிடத்தக்கது. 

திராவிடர்களின் இசைக்கருவியான இந்த நரசிங்கப்பேட்டை நாகசுரத்தை செய்வதற்கு மரங்களில் வலிமையான ஆச்சா மரம் பயன்படுத்தப்படுகிறது. பல சிற்றூர்களில் உள்ள பழைய வீடுகளில் பயன்படுத்தப்பட்ட நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆச்சா மரங்களைக் கொண்டு நாகசுர கருவி செய்யப்படுகிறது. ஆச்சா மரத்தை இரண்டரை அடி நீள அளவில் வெட்டி கடைந்து கொள்வர். அதை திரட்டி, உள் துவாரம் ஒன்றையிட்டு, அதன் அளவுகளைப் பெரிதாக்கி கொண்டு, மறுபடியும் கடைந்து, 12 பிரம்மாஸ்திரங்களை இட்டு வாசிக்கும் அளவுக்குச் செய்வர். முதலில் குழல் பாகம், பின் அணசு பாகம் செய்வார்கள். குழல் பாகத்தில் நடுவில் ஓட்டை கொடுத்து கடைவதுதான் மிகவும் கடினமான ஒன்று. நடு பாகத்தில் உள்ள ஓட்டையைப் பொருத்துதான் நாகசுரத்தின் ஓசை அமையும். 12 துளைகளைப் போடுவதில் மிகவும் கவனம் செலுத்தி துளைகள் போடுவார்கள். நூலளவுக்கு மாறுபட்டு துளைகள் போட்டால் நாதம் சரியாக வராது. 

அந்த அளவுக்கு துல்லியமாக நாகசுரத்தை துளைகள் போடுவதற்குக் கலைஞர்களை உருவாக்கிய கிராமம்தான் நரசிங்கம் பேட்டை. சுத்த மத்தியமம் ஸ்வரத்தை, நாகசுரத்தை உருவாக்கிய குடும்பங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

இந்த நரசிங்கம்பேட்டை நாதசுரத்துக்கு 2014, ஜனவரி 31 ஆம் தேதி புவிசார் குறியீடு கேட்டு தஞ்சாவூர் இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து 8 ஆண்டுகள் போராடி இந்தப் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதற்காக சுலோச்சனா பன்னீர்செல்வம் பேருதவி செய்தார்.

இனிமேல், இந்த வகையான நாகசுரத்தை வேறெந்த ஊரிலும் வேறு எந்த நாகசுர கலைஞர்களாலும் உருவாக்க முடியாது என்றார் சஞ்சய் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com