'சிலம்பம் என்பது விளையாட்டல்ல' - மாஸ்டராக ஜொலிக்கும் நாமக்கல் இளைஞர்!

தான் கற்ற சிலம்பக் கலையை தனது பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். 
சிலம்பம் சுழற்றி பயிற்சி பெறும் மாணவர்கள்.
சிலம்பம் சுழற்றி பயிற்சி பெறும் மாணவர்கள்.

தான் கற்ற சிலம்பக் கலையை தனது பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். 

தான் கற்றக் கல்வி தன்னோடு முடிந்து போகாமல், பிறருக்கும் பயனளிக்கும் வகையில் கற்றுக் கொடுப்பதே ஒரு கல்வியாளனுக்கு அழகு. அது வகுப்பறை பாடமானாலும் சரி, ஆபத்தை எதிர்கொள்ளும் பாதுகாப்புக் கலையானாலும் சரி, எப்போதும் பிறருக்கு பயனுள்ளதாக அமைந்திட வேண்டும். அதன்படி, தான் கற்ற சிலம்பக் கலையை, தினசரி காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து பயிற்சி அளித்து வருகிறார் நாமக்கல் மாவட்டம் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெ.ஸ்ரீபிரகாஷ் (22). 

சிலம்பம் சுழற்றும் இளைஞர் ஜெ.ஸ்ரீபிரகாஷ்
சிலம்பம் சுழற்றும் இளைஞர் ஜெ.ஸ்ரீபிரகாஷ்

இதுகுறித்து அவர் கூறியதாவது: 

குங்பூ, குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்று சிலம்பமும் ஒரு தற்காப்புக் கலை தான், அது விளையாட்டு அல்ல.

எனது தந்தை ஜெயகுமார், தாய் விஜயராணி. இருவரும் ஊதுபத்தி விற்பனை தொழில் செய்கின்றனர். சிறுவயது முதலே சிலம்பம் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. சினிமாவில் பத்து பேர் சூழ்ந்திருக்கையில் கம்பை சுழற்றி ஹீரோ சண்டைக் காட்சியில் மோதுவதை துடிப்புடன் பார்த்த நாள்கள் சிலம்பத்தின் மீதான தாக்கத்தை அதிகப்படுத்தியது. 

ஏழாம் வகுப்பு படிக்கும்போது, சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும், பேளுக்குறிச்சியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற பயிற்சியாளரிடம் சேர்த்துவிட்டனர்.

 சிலம்ப பயிற்சி மாணவர்களுடன் பயிற்சியாளரான ஜெ.ஸ்ரீபிரகாஷ்(நடுவில்) 
 சிலம்ப பயிற்சி மாணவர்களுடன் பயிற்சியாளரான ஜெ.ஸ்ரீபிரகாஷ்(நடுவில்) 

சிலம்பக் கலையை ஒட்டிய, ஒத்தக் கம்பு, சுருள் கம்பு, வேல் கம்பு, மான் கொம்பு, வாள் கேடயம், சுருள் கத்தி, பிச்சுவாக்கத்தி போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சியை அளித்தனர். பிளஸ் 2-க்குப் பிறகு ராசிபுரத்தைச் சேர்ந்த பன்னீர் என்ற பயிற்சியாளரிடம் கூடுதல் பயிற்சி பெற்றேன். இருவரிடமும் சிலம்பம் தொடர்பான அனைத்து வித்தைகளையும் கற்றறிந்து வருகிறேன்.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றுவதில் சிலம்பமும் முக்கிய பங்காற்றுகிறது. இந்திய அளவில் சிலம்பக் கலையை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், சிலம்பப் போட்டிகளில் சாதனை படைத்தோருக்கு அரசு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும் என்பதும் இக்கலைக்கு கிடைத்த பெருமை. 

இதுவரை மாவட்ட, மாநில, தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளேன். அண்மையில் கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும், கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றேன்.

இந்த சிலம்பக் கலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, பாச்சல், மல்லசமுத்திரம் ஆத்துமேடு, நாகர்பாளையம் ஆகிய பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தினசரி காலை, மாலை வேளைகளில் 2 மணி நேரம் பயிற்சி அளித்து வருகிறேன். இதற்காக குறைவான கட்டணமே பெற்றுக் கொள்கிறேன். இந்த கட்டணமும் மேல்படிப்புக்கும், குடும்பச் சூழ்நிலைக்காக மட்டுமே. சர்வதேச அளவில் சிலம்பக் கலை புகழ் பெற வேண்டும், தமிழகத்தில் பலருடம் இக்கலையை ஆர்வமுடன் கற்க வேண்டும்  என்பதே எனது விருப்பம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com