சாவிற்கு அழைப்பு விடுக்கிறதா, ஷவர்மா? எச்சரிக்கை ரிப்போர்ட்

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சமீபத்திய செய்திகளில் அதிகம் அடிபடும் பெயராக ஷவர்மா மாறியுள்ளது. 
செய்திகளில் அதிகம் பேசுபொருளாக ஷவர்மா மாறியுள்ளது.
செய்திகளில் அதிகம் பேசுபொருளாக ஷவர்மா மாறியுள்ளது.

கேரளத்தில் சோகம்: ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி: 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடந்த 2 ஆம் தேதி கேரளத்தில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த மாநிலத்தையும் தாண்டித் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்த தேவந்தா என்கிற இளம்பெண் கெட்டுப்போன ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்திருக்கிறார். அவருடன் சேர்த்து ஷவர்மா சாப்பிட்ட 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். 

இது ஒரு புறமிருக்க தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 47 கடைகளில் நடைபெற்ற திடீா் சோதனையில் கெட்டுப்போன நிலையில் இருந்த 138 கிலோ அசைவ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டிருக்கிறது.

தருமபுரி நகரில் உள்ள அசைவ, துரித உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், தரமற்ற 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மற்றும் திருக்குவளையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையின்போது, காலாவதியான 310 கிலோ கோழிக் கறி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் ஷவா்மா உணவு தயாரிக்கப்படும் உணவகங்களில், உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், 10 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி இன்னும் பல...

இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஷவர்மா உணவு வகையை உண்டு இப்படி நேர்ந்துள்ளதால், சமீபத்திய செய்திகளில் அதிகம் அடிபடும் பெயராக ஷவர்மா மாறியுள்ளது. 

அதென்ன ஷவர்மா?

துண்டாக்கப்பட்ட  கோழி இறைச்சியை கம்பியில் செலுத்தி வெப்பத்தில் சுட்டு அதனை மீண்டும் வெட்டி எடுத்து நாண் அல்லது சப்பாத்தி வகை ரொட்டிகளால் சுற்றிச் சாப்பிடும் உணவே ஷவர்மா. தொடக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஷவர்மா கடைகள் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரத்யேக கடைகளாகத் தோன்றிவருகின்றன. 

ஒரு நாட்டிற்கென பண்பாடும் கலாசாரமும் மொழியும் வரலாற்றுக் கூறுகளாகப் பார்க்கப்படுகிறதோ அதேபோன்றதொரு இடத்தை உணவுகளும் பெறுகின்றன. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பல உணவுகள் இன்றும் மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் உள்ளன.

எப்படி ஒரு மொழியை இன்னார் தான் கண்டுபிடித்தார் என்று வரையறுத்து சொல்ல முடியாதோ அதேபோல் உணவுகளையும் இவர்தான் கண்டுபிடித்தார் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப உணவுகள் தோன்றுகின்றன. மக்களிடையே முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களால் பிற இடங்களுக்கும் கடத்தப்படுகின்றன.

இன்றைக்குத் தமிழக செய்திகளில் பரவலான இடத்தைப் பிடித்துள்ள ஷவர்மா 1972 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து வந்த ஒரு தொழிலாளியால் ஜெர்மனியின் பெர்லினில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.  அந்தத் தொழிலாளி தன்னுடைய பெர்லின் பயணத்தின்போது இதர தொழிலாளர்கள் தங்களது மதிய உணவாக வறுக்கப்பட்ட காய்கறிகளுடன் கோழி இறைச்சியை ச் சுட்டு சாப்பிடுவதை அறிந்ததாகவும் அந்த உணவை மேலும் சுவையாக்க விரும்பிய அவர் அதை வோய்லா என்று அழைக்கப்படும் ஒரு வகையான ரொட்டியில் சுற்றி ஷவர்மாவை உருவாக்கினார் எனவும் நம்பப்படுகிறது.

ஷவர்மாவின் தோற்றம் குறித்து இதுதான் திட்டவட்டமானது எனக் கூற முடியாத நிலை உள்ளது. ஒருசாரார் ஷவர்மா ஜெர்மனியில் உருவானது என்றும், மற்றொரு சாரார் இது துருக்கியில் உருவானது என்றும் தெரிவிக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் ஷவர்மா வகை உணவுகள் ஐரோப்பாவிற்கு சொந்தமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஏன் ஷவர்மா வகை உணவுப் பொருள்கள் பேசுபொருளாகியுள்ளன?

இடம்பெயரும் மக்களுடன் அவர்களின் பழக்கவழக்கங்கள், மொழிகள், பண்பாட்டு கலாச்சார முறைகளுடன் உணவு முறைகளும் பயணம் செய்கின்றன. இந்தியாவில் வணிக நோக்கங்களுக்காக வந்த ஐரோப்பியர்கள் மூலம் ஷவர்மா வகை உணவுகள் நம் நாட்டிற்கு அறிமுகமாகின.

இடம்பெயர்ந்துவரும் மக்கள் மீது இயல்பாகவே எழும் வெறுப்பைப் போல மேற்கத்திய உணவுகளின் மீது ஆரம்பத்தில் மோகம் எழுந்தாலும் பின்னர் அவற்றின் மீது வெறுப்பு பரவ ஆரம்பிக்கிறது. 

ஷவர்மாவைப் பொருத்தவரையில் அதில் சேர்க்கப்படும் இறைச்சியும், அது சரியான பதத்தில் பயன்படுத்தப்படுவதும் சர்ச்சையாகியுள்ளது. பொதுவாக இறைச்சியைப் பொருத்தவரையில் சரியான வெப்பநிலையில் சமைக்கப்பட வேண்டும். 14 மணி நேரத்திற்குள்ளாக அதனை சமைப்பது, சரியான வெப்பநிலையில் அவற்றைப் பாதுகாப்பது என்கிற வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாதபோது அவை கெட்டுப் போகின்றன; உண்ண ஒவ்வாதவையாகின்றன.

உணவகங்களில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருக்கும் அசைவ ங்கள் எப்படி சமைக்கப்படுகின்றன என்பதை அறியவோ எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு அமைவதில்லை.

இவற்றைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் உணவக உரிமையாளர்கள் உப்பு கலந்த நீரில் கெட்டுப் போன அசைவங்களை சேர்த்து அவற்றைச் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர்.

சமீபத்தில் சிக்கிய பிரபல அசைவ பிரியாணி கடைகளே இதற்கு சான்று. தங்களுடைய சுவைக்காக மக்களிடம் நல்ல பெயரைப் பெற்ற நட்சத்திர பிரியாணி கடைகளே தரமற்ற கறியினைப் பயன்படுத்துவது வெட்டவெளிச்சமானது.

உணவு பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இவ்வாறு சமைக்கப்படும் உணவுகளை உண்ணும் மக்கள் வயிற்றுப் போக்கு, உடலில் நீர் இழப்பு போன்ற உடல்நல சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் கேரளத்தில் இறந்த மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையிலும் கூட கெட்டுப்போன ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிகெல்லா பாக்டீரியா உயிர்க் கொல்லி கிடையாது என்கிறபோதிலும் அசைவம் என்று மட்டுமல்லாமல் சைவ உணவுகளிலும்கூட உருவாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படாத அனைத்து வகை உணவுகளிலும் ஷிகெல்லா பாக்டீரியா உருவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் வீதிக்கு இரண்டு ஷவர்மா கடைகளேனும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே இவற்றில் பயன்படுத்தப்படும் இறைச்சி தரமானவைதானா, உரிய காலத்தில் பயன்படுத்தப்படுகிறதா, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களைத் தவிர யாராலும் இதை உறுதி செய்ய முடியாது.

ஷவர்மாவுக்காகத் தயார் செய்யப்பட்டுக் கூம்பு வடிவில் தொங்கவிட்டு சூடுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இறைச்சித் தொகுதி அன்றே விற்றுத் தீராவிட்டால் மீதியிருக்கும் இறைச்சியை என்ன செய்கிறார்கள்? அதுவே  மறுநாள் ஏதோவொரு தயாரிப்புக்குப் பின் விற்கப்படும் வாய்ப்புள்ளதா? எங்கிருந்து இறைச்சி வாங்கப்படுகிறது? அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறதா? ஷவர்மா தயாரிப்பவருக்கு உள்ளபடியே அதற்கான பயிற்சி இருக்கிறதா?... இப்படி நிறைய கேள்விகள், பதிலுக்காகக் காத்திருக்கின்றன.

கெட்டுப்போன, நாள்பட்ட இறைச்சி பயன்படுத்தப்படும்பட்சத்தில்,  பெரும்பாலான நேரங்களில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் இவற்றை உண்டாலும் தப்பிவிடுவார்கள். ஆனால், பிரச்சினையுள்ளவர்கள் பாடுதான் மோசமாகிவிடும்.

இந்த நிலையில் உணவுத் துறை அதிகாரிகளின் சோதனை ஒருபுறம் இருந்தாலும் உணவகங்களின் அக்கறையும் தனி கவனமும் உணவுத் தயாரிப்பில் அவசியமாகிறது. இறைச்சி உணவுகளுக்கான கட்டுப்பாடுகள் மட்டும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யாது என்பதை உணர்ந்து கொள்வதும், சைவம், அசைவம் என்கிற வேறுபாடுகளைத் தாண்டி உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் முறையான சோதனைகளுக்கு உட்படுத்துவதும், இந்த விவகாரத்தில் தவறிழைப்பவர்களின் உணவக உரிமைகளை ரத்து செய்வதும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதும் மட்டுமே கெட்டுப் போன உணவை பயன்படுத்தி உணவகங்களை நடத்துபவர்களுக்கு வழங்கும் சரியான தண்டனையாக இருக்கும்.

இவ்வளவு காலமாக கெட்டுப் போனவற்றை உண்பதால் பெரும்பாலும் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற வாதைகளைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். மற்றபடி சில நாள்கள் மருத்துவமனையிலிருந்துவிட்டுத் திரும்பிவிடுவார்கள். ஆனால், இப்போது கெட்டுப்போன ஷவர்மாக்கள் மரணத்தையே அழைத்துவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இந்த நிலையில் மக்களும், குறிப்பாக இளைய தலைமுறையினர், கண்டமேனிக்கு, கண்ட கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்த்து, முன்னெச்சரிக்கையுடன் தரத்தை உறுதி செய்துகொள்ளக் கூடிய கடைகளில் மட்டும் ஷவர்மா போன்ற உணவுகளைச் சாப்பிடுவது மட்டுமே தற்காத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com