சுகம் தரும் சித்த மருத்துவம்: கோடைக்கேற்ற கனிகள் எது தெரியுமா?

குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்களும் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய உச்ச கட்ட வேனில்காலமும் இது தான்.
சுகம் தரும் சித்த மருத்துவம்: கோடைக்கேற்ற கனிகள் எது தெரியுமா?

கோடைக்காலம் தொடங்கி வெயில் பல்வேறு வயதினரையும், பல்வேறு தரப்பினரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சித்த மருத்துவம் கூறும் வாத, பித்த, கப நாடிகளில் கோடை வெயிலால் பித்தம் அதிகரித்து பித்தநாடி சார்ந்த நோய்கள் மக்களை வதைக்க தொடங்கிவிட்டது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காத தண்ணீர் தாகம், உடல் வறட்சி, அதிகப்படியான வியர்வையின் காரணமாக உடல் அசதி, சோம்பல் என  குறிகுணங்கள் நீண்டுக் கொண்டே செல்கிறது. குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்களும் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய உச்ச கட்ட வேனில்காலமும் இது தான்.

பித்த நாடியை தணிக்க சித்த மருத்துவம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது. உதாரணமாக எண்ணெய் குளியல் அதில் ஒரு வகை. அதுமட்டுமின்றி உண்ணும் உணவில் பித்தத்தை அதிகரிக்கும் படியான அதிக காரம், அதிகம் எண்ணெய் சேர்த்த உணவு வகைகளை தவிர்த்து, பித்தத்தை தணிக்கும்படியான பழங்களையும், காய்கறிகளையும், உணவு வகைகளையும் சேர்க்க வேண்டியது அவசியம். 

அமெரிக்கர்களுக்கான டயட் அதாவது உணவு வழிகாட்டுதலில், உண்ணும் தட்டில் அரை தட்டு பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்து கொண்டால் உலகை அச்சுறுத்தும் தொற்றா நோய்களான நீரிழிவு, இருதய நோய், மாரடைப்பு , புற்று நோய் ஆகிய நோய்கள் வரவிடாமல் தடுக்க முடியும் என்று ஆலோசனை தருகிறது. இந்த ஆலோசனை கோடை காலத்தை அதிகம் அனுபவிக்கும் நம் நாட்டினருக்கும் பொருந்தும். முக்கியமாக பழங்களை அதிக அளவு உணவில் சேர்க்க கோடை காலத்தை சமாளிப்பது மட்டுமின்றி பல்வேறு தொற்றா நோய்களையும் தடுக்க முடியும்.  

‘ராஜ கனி’ எனும் ​எலுமிச்சை பழம்

சித்த மருத்துவம் கூறும் பித்தம், இயற்கையாகவே  உடலில் அதிகரிக்கும் காலம் இந்த கோடைக்காலம். இந்த காலத்தில் பித்தத்தை தணிக்கும் நம் நாட்டு பழ வகைகளான எலுமிச்சை, நெல்லி, வில்வம், மாதுளை, தர்பூசணி பழம் போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும். இத்தகைய பழங்களை பற்றி சித்த மருத்துவம் கூறும் பலன்களை அறிந்து கொள்வது அவசியம்.

புளிப்பு சுவையை முதன்மையாக கொண்ட, ‘ராஜ கனி’ என்று கருதப்படும் எலுமிச்சை கோடைக்காலத்திற்கேற்ற மிகச்சிறந்த பழம். இதனை “வேகங்கொள் உன்மாதம் வீறு பித்தம் நீங்கும்” என்று அகத்தியர் குணவாகடம் கூறுவது குறிப்பிடத்தக்கது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது என்பதை தாண்டி, ஃபோலிக் அமிலம் மற்றும் கரோட்டினாய்டு ஆகிய முக்கிய வேதிப்பொருட்களோடு, புற்று நோயை தடுக்கும் பிளவனாய்டுகள் அதிகம் உடையது. 

அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் உடையதால் வெயில் காலத்தில் வியர்வையில் இழக்கப்படும் உப்புசத்தினை ஈடுகட்டும் தன்மை இதற்குண்டு. பொதுவாகவே  சிட்ரஸ் பழங்களில் லிமோனாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பல உயிர்வேதிக்  கலவைகள் நிறைந்துள்ளன. இவை ரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைக்கும் தன்மையும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டராலை குறைக்கும் தன்மையும், முக்கியமாக வெயில் காலத்தில் இருதய சார்ந்த நோய்களை வர விடாமல் தடுக்கும் தன்மையும் உடையது. மேலும் சிறுநீரை கற்களை இயற்கையாக கரைக்கும் தன்மையும் உடையது. சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீர்ப்பாதை தொற்று வராமல் தடுக்க வல்லது.

வள்ளல் அதியமான் அவ்வைக்கு கொடுத்த நெல்லிக்கனி என்று சொல்வதிலே அதன் சிறப்பு மருத்துவ குணம் விளங்கும். பல மடங்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட நெல்லிக்கனி பித்தத்தை குறைப்பதிலும், பல்வேறு நோய் நிலைகளிலும் சித்த மருத்துவ சிகிச்சையில் தனி சிறப்பு பெற்றது. “நெல்லிக்காய்க்கு பித்தம் நீங்கும் அதன் புளிப்பால்” என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. நீரிழிவு நோயாளிகளும், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இந்த கோடைக்காலத்தில் எடுத்துக்கொள்ள உகந்தது நெல்லிக்கனி.

நெல்லிக்கனியில் நமக்கு தெரிந்த வைட்டமின்-சி (அஸ்கார்பிக் அமிலம்) மட்டுமின்றி  பல உயிர்வேதிப்பொருள்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக புற்றுநோயினை தடுக்கும் பாலிஃபீனால்களான எலாஜிக் அமிலம், கேலிக் அமிலம், அபிஜெனின், குர்செடின், லுடோலின் போன்றவை அடங்கியுள்ளது. இன்றைய அறிவியலாளர்களால் பெரிதும் உற்று நோக்கப்படும் நெல்லிக்கனி, உடலில் உள்ள ஒவ்வாரு செல்லுக்கும் புத்துணர்வு தரக்கூடியது. கோடைக்கால குளிர்ச்சிக்கு நெல்லிக்கனி மிகச்சிறந்த வரப்பிரசாதம். பித்தத்தை தணித்து ஆயுளை கூட்டும்.  

பல்வேறு சிவத்தலங்களில் அக்னி வடிவாய் காட்சி தரும் சிவபெருமானுக்கே குளிர்ச்சி தரும் பொருட்டு, தலவிருட்சமாக உள்ளது வில்வம். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் வில்வ மரத்தின் பழம் மட்டுமல்ல இலையும், வேரும் கூட பித்தத்தை தணித்து குளிர்ச்சி தரும் தன்மையுடையது. 

வில்வம்

வில்வ பழத்தில் மருத்துவ குணத்திற்கு காரணமான லிமோனீன், ஏக்லின், மார்மெலின், கூமரின்கள், மார்மெலோசின் ஆகிய தாவர வேதிப்பொருட்கள் உள்ளது. மேலும் டார்டாரிக் அமிலம், லினோலிக் அமிலம், டானின்கள், அந்தோசயனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டு கிளைகோசைடுகள் ஆகியவையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வில்வ பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும்  மற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்களும் உள்ளன.

சித்த மருத்துவத்தில் இதன் பழத்தால் செய்யப்பட்ட வில்வ மணப்பாகும், வில்வ பழ லேகியமும் பித்தம் சார்ந்த நோய்களுக்கு கூறப்பட்டுள்ளது. இதன் பழமும், இலையும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். ஆதலால்  நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் ஏற்றது. கோடைக்காலத்தில் பித்தம் சார்ந்து ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் வில்வம் நற்பலனை அளிக்கக்கூடியது. கோடைக்கால கண்எரிச்சலுக்கு வில்வ பழ தைலம் தேய்த்து எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

புளிப்பும் துவர்ப்பும் சேர்ந்த மாதுளை, மாதர்களின் உளைச்சலை மட்டுமல்ல அனைவரின் உளைச்சலையும் போக்கும் வல்லமை உடையது. கோடைக்கால பித்தத்தை தணிக்கும், உடல் அசதியை போக்கும், மிகசிறந்த பழ வகை. சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மாதுளை மணப்பாகு பித்தத்தால் ஏற்படும் வாந்தி, நா வறட்சி இவற்றை போக்கும் தன்மையுடையது. “வாய்நீரூறல் கசப்பு வாந்தி விக்கல் மந்தம் மிகக்காய் வெப்பம் தீர்ந்து விடும்” என்ற தேரையர் குணவாகட வரிகள் மாதுளை பித்தம் சார்ந்த குறிகுணங்களை நீக்கும் என்பதும் அறியக் கிடக்கின்றது.

மாதுளையின் நிறத்திற்கும், மருத்துவ குணத்திற்கும் பினோலிக் வகை வேதிப்பொருட்களும், அந்தோசயனின் நிறமிகளும் காரணமாக உள்ளது. ‘புனிக்காகாலின்’ என்ற வேதிப்பொருள் அதன் அத்தனை மருத்துவ குணத்திற்கும் தலையாய வேதிப்பொருள். அதிக அளவு சர்க்கரை சத்தினை இயற்கையாக கொண்டது. இருப்பினும் நீரிழிவு நோயாளிகளுக்கு கோடைக்காலத்தை கடக்க உறுதுணையாக இருக்கும். 

அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையுள்ளபடியால் புற்றுநோய், சிறுநீரக நோய், இருதயம் சார்ந்த நோய்களை, ரத்த குழாய் அடைப்பைத் தடுக்கும் தன்மையுடையது. இத்தகைய நோயால் மட்டுமின்றி வெயில் காலத்தில் வாடி கிடப்பவர்களின் பித்தத்தை குறைக்கும் மாதுளை, உடல் உளைச்சலையும், அசதியையும் போக்கி புத்துணர்ச்சி தரும்.

தர்பூசணி

அதிகப்படியான நீர்ச்சத்தும் தனிச்சுவையும் தன்னகத்தே கொண்ட தர்பூசணி பித்தத்தை பெரிதும் குறைத்து உடலில் கபமாகிய நீர்சத்தினை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. சிறப்பு என்னவெனில் இதன் விதைக்கும் மருத்துவ குணமுண்டு. இது கோடை வெயிலால் குறைந்த சிறுநீரை, அதிகரிக்கும் தன்மையுடையது. பழத்திற்கும் இத்தகைய குணமுண்டு. மேலும் சிறுநீரக கற்களை உடைக்கும் குணமும், வீக்கத்தை போக்கும் தன்மையும் இதற்குண்டு.  

தர்பூசணி உடலின் வெப்பத்தை போக்கி குளிர்ச்சியை தரும். இதில் மருத்துவ குணமிக்க லைகோபீன்கள், வைட்டமின் எ மற்றும் சி, கரோட்டினாய்டுகள், வைட்டமின் பி-6, தையமின், தாது உப்புக்கள்  மற்றும் நார்ச்சத்தும் அதிகப்படியாக உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும், கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கும் இந்த கோடைக்காலத்தில் பித்தத்தை தணித்து நன்மை பயக்கும்.  இதில் உள்ள ‘சிட்ருல்லின்’ என்ற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஆக, சித்த மருத்துவம் வழி நின்றி, உணவில் பழங்களை அதிகம் சேர்ப்பது கோடைகாலத்திற்கு மட்டும் நன்மை பயக்கும் என்று எண்ணாமல்,  அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள நரை, திரை, மூப்பு இவைகளை தடுத்து, சாக்காடு எனும் மரண நிலையை தள்ளிப்போட முடியும். இன்றைய நவீன உலகம் கண்டு அஞ்சும் தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை தடுத்து ஆரோக்கியமான நலவாழ்வு வாழ்ந்து, நல்லதொரு சமுதாயம் உருவாக்கிய முடியும் .  


மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி:
drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com